களவாணி திரைப்படத்தில் இல்லாதவற்றை முதலில் பட்டியலிடுகிறோம். அரிவாள் வெட்டுக் குத்து இல்லை. ஆபாசம் இல்லை. காதில் இருந்து ரத்தம் வர வைக்கும் பஞ்ச் வசனங்கள் இல்லை. திரையில் முக்கால் பங்கு வியாபிக்கும் தொப்புள் டான்ஸ் இல்லை. கிராமத்துக்கு படங்களுக்கே உரித்தான கிளிஷேக்கள் எதுவும் இல்லை.தமிழ் திரையுலகத்திலேயே முதல் முறையாக என காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் அளவு புதுமையான கதையும் இல்லை.இருந்தாலும், இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்று கூறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
கதையை பொறுத்த வரை மிக மிக எளிமையான கதை. சின்ன சின்ன களவாணி தனங்களும், ஆபத்தில்லாத பொய்களும் சொல்லும், வேலை வெட்டி இல்லாத அறிக்கி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகன் விமல் நடித்துள்ளார். இவர் கதைப்படி அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர். பார்க்கும் பெண்களையெல்லாம் சும்மானாச்சும், கட்டிக்கறியா என கலாய்க்கும் இவர், பக்கத்து கிராமமான ராணிமங்கலத்தை சேர்ந்த +2 படிக்கும் பெண்ணான மகேஷ் என்ற மகேஷ்வரி (ஓவியா) மீது உண்மையாகவே காதல் வயப் படுகிறார். ஆரம்பக் கட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து மகேஷ்வரியும் அறிக்கியை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால், அரசனூர், ராணிமங்கலம் கிராமங்களுக்கிடையே சாமி சிலை விஷயத்தில் பரம்பரை பகை நிலவுகிறது. இந்தப் பகையை மீறி கதாநாயகனும், கதாநாயகியும் ஒன்று சேர்கிறார்களா என்பதே கதை.
நாங்கள் முதல் பத்தியிலேயே எழுதியதை போல மிக சாதாரணமானக் கதை. ஆனால், காட்சிகளாய் அதை சொல்லியிருக்கும் விதத்தில் நம் கவனத்தை கவர்கிறார் அறிமுக இயக்குனர் சற்குணம்.
கதாநாயகன் ’பசங்க’ விமல், அறிக்கி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் ஒன்றி நடித்துள்ளார். விமர்சனத்தில் கூட கதாநாயகன், கதாநாயகியின் உண்மையான பெயர்களைக் குறிப்பிடாமல் கதாபாத்திரங்களின் பெயர்களையே குறிப்பிட்டு எழுதுகிறோம் என்பதை வைத்து நீங்களே நடிகர், நடிகையரின் நடிப்பை புரிந்துக் கொள்ளலாம். தஞ்சாவூர் பக்க வட்டார மொழியை அனாயசமாக பேசி அசத்தியுள்ளார் விமல். தாய் சரண்யாவிடம் அடிக்கடி ஏதாவது பொய் சொல்லியோ டி.வி.யை உடைத்து விடுவேன் என மிரட்டியோ நூறு, இருநூறு என பணம் கரக்கும் காட்சிகளில் விமலின் நடிப்பு டாப்.
தான் வழக்கமாக மற்ற பெண்களை செய்வது போல நினைத்து மனதில் பெரிய கல்மிஷமெல்லாம் இல்லாமல், கதாநாயகியை ஆரம்பத்தில் கலாய்த்தாலும், காதலில் விழுந்த பிறகு அவரைக் கவர்வதற்கு செய்யும் உத்திகள் கலகலப்பு. உதாரணமாக, தன் தங்கைக்கு ஸ்கேல், ஜாமெட்ரி பாக்ஸ்,ரப்பர் வைத்த பென்சில்கள் என வாங்கித் தந்து ஐஸ் வைத்து கதாநாயகியின் ரிக்கார்ட் ஏட்டை இரவு முழுவதும் கண் விழித்து எழுதி தரச் சொல்வது. மறுநாள், ரிக்கார்ட் நோட்டை கதாநாயகியிடம் கொடுத்து, ’நானே கஷ்டப் பட்டு எழுதினன்’ என பிட்டு போடுவது, தன் நிலத்தில், கதாநாயகி நட்ட நாத்தை மட்டும் உரம் அடித்து கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது, ’அறிக்கி + LC112 கூட்டு’ என ஒரு புதுமையான சொல்லை கதாநாயகியிடம் சொல்லி அதற்கு ஒரு அர்த்தத்தையும் சொல்வது என படம் முழுக்க விமலின் ஆதிக்கம்தான். கதை தேர்வு செய்வதில் விமலுக்கு நல்ல அக்கறை இருப்பது புரிகிறது. இமேஜ் என்ற கண்றாவிகளில் சிக்காமல் இதே போன்ற நல்ல படங்களில் நடியுங்கள் விமல்.
கதாநாயகி ஓவியா கேரளத்து இறக்குமதி. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண் கதாபாத்திரமாக இருப்பதால், குட்டிப் பெண்ணை தேடி கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளனர். தன் பின்னால் சுற்றும் விமலுடன் நெருங்கி பழக ஆரம்பத்தில் தயங்கும் காட்சிகளிலும், படி படியாக விமல் மீது ஈர்ப்பு (காதல்?!?) ஏற்படும் காட்சிகளிலும் ஓவியா மிளிர்கிறார். ’அறிக்கிங்கற பேரு எனக்கு பிடிக்கலை. இனிமே உங்க உண்மையான பேரான அறிவழகன்னுதான் கூப்பிடுவன்.’ என விமலிடம் சொல்லும் காட்சியில் ஓவியாவின் முக பாவம், கிளாசிக்.
அறிக்கி மற்றும் அவர் சகாக்களால் அடிக்கடி சுமாரான ஃபிகர், சுமாரான ஃபிகர் என்று வர்ணிக்கப் படுகிறார் மகேஷ்வரி (ஓவியா). அதற்கு ஏற்ற மாதிரி, அதிக ஒப்பனை இல்லாமல், ஜிகு ஜிகு உடைகள் இல்லாமல், கிராமத்திலேயே கொஞ்சம் ’பரவாயில்லை’ ரக பெண்ணாக களவாணி படத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார் ஓவியா. இந்தக் கதாபாத்திரத்துக்கு ஓவியா பொருந்துகிறார். இவரே வெவ்வேறு ஸ்டைல்களில் நடித்தால் பொருத்தமாக இருக்குமா என தெரியவில்லை.
அறிக்கியின் அம்மாவாக சரண்யா. தன் மகனுக்கு கண்ணை மூடிக் கொண்டு வக்காலத்து வாங்கும் கதாபாத்திரத்தில் ஜோராக நடித்துள்ளார் சரண்யா. ‘அவனா அப்படி இருக்கான். எல்லாம் கெரகம். ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்பா வருவான்’ என படம் நெடுக இவர் சொல்வது அட்டகாசம். துபாயில் இருந்து திரும்பும் கோபக்கார தந்தையான இளவரசுவும், தன் வசனம் பேசும் பாணியால் கைதட்டல் பெறுகிறார்.
ராணிமங்கலத்தில் இருக்கும் அறிக்கியின் எதிரியான முரடன் கதாபாத்திரத்தில் (முழு வில்லன் என சொல்ல முடியாது!!) அறிமுக நடிகர் திருமுருகன் கச்சிதமாக நடித்துள்ளார். இவருக்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
களவாணி படத்திற்கு மிக பெரிய ப்ளஸ் பாயிண்ட் கஞ்சா கருப்பு. பஞ்சாயத்து என்ற கதாபாத்திரம் அவருக்கு. அறிக்கி + குழு ஒரு முறை உர மூட்டை திருடுவதை பார்த்து விட்டார் என்ற பாவத்திற்காக, ’பஞ்சாயத்து விஷம் குடித்து விட்டார்’ என புரளி கிளப்புவது, ‘பஞ்சாயத்து வீர மரணம் அடைந்தார்.’ என ஒலிப்பெருக்கியில் அறிவிப்பது என படம் நெடுக அறிக்கியிடம் அவர் படும் பாட்டைப் பார்த்து தியேட்டரே அதிர்கிறது.
வழக்கமாக கிராமம் என்றால் மதுரை ஏரியாவைதான் மையமாக வைத்துதான் படம் அமைந்திருக்கும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தஞ்சாவூர் பக்கத்து கிராமங்களை மையமாக வைத்து படம் இயக்கியதற்கு இயக்குனர் சற்குணத்திற்கு சிறப்பு பாராட்டுக்கள். நடிகர்கள் தேர்விலும் சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர்.
ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை என சோழ நாட்டின் வளத்தை களவாணியை விட வேறு எந்த படமும் மிக அருமையாக திரையில் பதிவு செய்ததில்லை என தோன்றுகிறது. வசனம், கதாபாத்திரங்களின் நடை, உடை, வயல் வரப்பு என அனைத்திலும் தஞ்சை மண்ணின் மணம் கமழ்கிறது. துபாயில் இருந்து ஊர் திரும்பும் அறிக்கியின் தந்தையான இளவரசு, தன் ஊதாரி மகனைப் பார்த்து ஏதோ பெரிய ரகளை செய்யப் போகிறார் என நினைத்தால், ஜஸ்ட் லைக் தட் என கோபித்து விட்டு, தொலைந்து போகட்டும் என விட்டு விடுவது போன்ற திரைக்கதை ஓட்டத்தை தவிர்த்திருக்கலாம். இளவரசுவின் கதாபாத்திரத்தில் வலு சேர்த்திருந்தால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பது எங்கள் தனிப்பட்டக் கருத்து. இருந்தாலும், இதனால் படம் ஒன்றும் கெட்டு விடவில்லை!
தஞ்சை வட்டாரத்தின் செழிப்பை மிக நேர்த்தியாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம்சாகர். அந்த மண்ணை அங்குலம் அங்குலமாக ரசித்து படமாக்கியுள்ளார். பாடல் காட்சிகளை படம் ஆக்கிய விதமும் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.
’பூ’ படத்தில் அறிமுகமான எஸ்.எஸ்.குமரன் இசையில் பாடல்கள் மிக இனிமை. டம்ம டம்மா பாடல் அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையையும் நல்ல ரசனையுடன் அமைத்துள்ளார் குமரன்.
களவாணி பட டைட்டில் ஓடி முடியும், படத்தின் கடைசி ஃப்ரேம் வரை தியேட்டரில் மக்கள் இருக்கை விட்டு நகரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மொத்தத்தில், களவாணி, 2010ம் ஆண்டின் மெகா ஹிட் படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மணியோசை கணிப்பு: 58 / 100
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





