பாலா படங்களில் வழக்கமாக கதையென்று பெரிதாக இருக்காது; சீரான திரைக்கதை வடிவம் இருக்காது. கதை மாந்தர்களின் தனித்துவமே அவர் படங்களின் கதைப் போக்கை தீர்மானிக்கும். இந்த ஃபார்முலாவுக்கு உட்பட்டிருக்கும் பாலாவின் மற்றொரு படமே 'அவன் இவன்'. பிதாமகன் படத்தின் நகல் போல இப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகப் பெரிய அலுப்பு.
விஷாலும், ஆர்யாவும் மாற்றான்தாய் சகோதரர்கள். இருவரும் சின்ன சின்ன களவாணித் தனம் பண்ணிக் கொண்டு ஊர் சுற்றுபவர்கள். ஊர் ஜமீன்தாரான ஜி.எம்.குமார் இவர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறார். இறைச்சிக்காக அனுமதியில்லாமல் மாட்டு தொழுவம் நடத்துபவனை போலீஸிடம் பிடித்து கொடுக்கிறார் ஜி.எம்.குமார். அதற்கு பழிவாங்க அவரை கொடூரமாக கொல்கிறான் மாட்டு தொழுவம் நடத்துபவன். தங்கள் மரியாதைக்குரிய 'ஹைனஸ்' என்ற அடைமொழியுடன் கூடிய ஜி.எம்.குமாரைக் கொன்றவனை விஷாலும், ஆர்யாவும் பழி வாங்குவதே அவன் இவன் படத்தின் உச்சக்கட்டம்.
அவன் இவன் படத்தின் கதை சுருக்கம் சப்பையாக இருப்பது போல் தோன்றினாலும், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் மூலம் ஓரளவு நம் இன்னலை குறைக்க முயன்றுள்ளார் பாலா.
அவன் இவன் படத்தில், கலை தாகம் கொண்ட சிரிப்பு களவாணியாக விஷால். அவருடைய திரையுலக வாழ்க்கையில் நிச்சயமாக இந்தப் படம் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். காதில் கடுக்கண், சரைத்த முகம், பெண்ணின் நளினமுடைய முக பாவம், மாறுக் கண் என விஸ்வரூபம் எடுத்துள்ளார் விஷால். அற்ப திருட்டுகளில் ஈடுபட்டு வந்தாலும், படம் நெடுக தன் கலை தாகத்தை அவர் வெளிப்படுத்துவது இனிய ரசனை.'நீ எப்படிப்பட்ட கலைஞன்' என அவரை யாராவது புகழும் போதெல்லாம் (சில சமயங்களில், காரியத்தை சாதித்துக் கொள்ள!) அவர் உச்சிகுளிர்வது அழகியல்.
நடிகர் சூர்யா, சூர்யாவாகவே வரும் காட்சியில், அவருக்கு விஷால் நவரசங்களையும் நடித்து காண்பிக்கிறார். தோரணை, சத்யம் போன்ற உப்பு பெறாத படங்களில் நடித்து வந்த விஷாலுக்கு, நன்றாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக பாலாவை பாராட்டலாம். விஷாலுக்கு அவன் இவன் படத்திற்காக தேசிய விருது நிச்சயம்.
அவர் மாற்றான்தாய் தம்பியாக ஆர்யா. 'கும்பிடுறேன் சாமி' என்ற இயற்பெயருடன் அவர் செய்யும் லந்து ஏராளம். தன் அண்ணனை கலாய்த்தாலும், அவர் மீது ஒளித்து வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் சிறப்பு.
அவன் இவன் படத்தில், சிரிப்பு பெண் போலீஸாக ஜனனி ஐயர். 'பிதாமகன்' லைலாவைப் போன்ற லூசுப் பெண் கேரக்டர். ஆர்யா காதலிக்கும் பெண்ணாக மது ஷாலினி. இருவரும் சில காட்சிகளில் தோன்றுகிறார்களே தவிர கதையோட்டத்துக்கு (இருந்தால்தானே?!) பெரிதாக உதவவில்லை.
விஷாலின் அடாவடி அம்மாவாக அம்பிகா. ஒரு காட்சியில் பீடி பிடித்தப் படி வசனம் பேசுகிறார். ஆர்யாவையும், மற்ற கதாபாத்திரங்களையும் அவ்வப்போது பச்சை பச்சையாக திட்டுகிறார். ஏதோ சாதிக்கப் போகிறார் என்று பார்த்தால்...
வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுநீர் பற்றியும், மலம் பற்றியும், அவைகளை வெளியிடும் உறுப்புகள் பற்றியுமான குறிப்புகள் அவன் இவன் படத்தில் ஏராளம். சபை நாகரிகம் இல்லாமல் எழுதுவதுதான் ரியாலிட்டியா? சூர்யா வரும் காட்சியில், 'அந்த சூரியன் உலகைக் காப்பாற்றுகிறார். இந்த சூர்யா மாணவர்களைக் காப்பாற்றுகிறார்.' என்று வசனம் பேசப் படுகிறது. ஒரு வேளை, அவன் இவன் படத்தை சிகப்பு பூதத்துக்கோ, மேகம் ஒன்பதுக்கோ விற்கும் எண்ணம் இருந்ததோ என்னவோ? அல்லது அவைப் புலவராக இடம்பெறும் ஆசை போல் உள்ளது ராமகிருஷ்ணனுக்கு.
யுவன்ஷங்கர்ராஜாவின் பின்னணி இசை அவன் இவன் படத்தின் மிகப் பெரிய பலம். 'காட்டு சிறுக்கி' பாடல் இனிமை. ஆனால், 'காட்டு சிறுக்கி' என்ற வார்த்தை மீது கோலிவுட்டின் திடீர் மோகத்திற்கு காரணம் என்ன என தெரியவில்லை.
யதார்த்தத்தை பிழிகிறேன் பேர்வழி என தன் வழக்கமான கிளிஷேக்களையும் கைவிடாமல், வழக்கத்தை விட அதிக அருவருப்பையும், உச்சக்கட்ட வன்முறையையும் திரையில் காண்பித்திருப்பதற்காக பாலாவை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது. விருதுக்காக படம் எடுக்காமல், ரசிகர்களுக்காக படம் எடுத்திருந்தால் மனதார பாராட்டியிருக்கலாம்.
மணியோசை கணிப்பு - 42/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


