பல தமிழர்கள் பொறுமிக் கொண்டிருந்த ஒரு விஷயத்தைப் பற்றி படமாக எடுக்கலாம் என யோசித்ததற்காகவே இப்படத்திற்கு 100/100 மார்க் வழங்கிவிடலாம். இன்றைய தமிழன் தங்களது வரலாற்றை மட்டும் மறக்கவில்லை. தமிழையே மறந்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் பேசுவது கூட கேவலம் என பலர் நினைக்கின்றனர்.
பலரது வீட்டில் உள்ள நாளைய தலைமுறையினருக்கு தமிழில் பேசினால் புரியாது. தமிழ் எழுதப் படிக்க தெரியாது... இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றனர். அவர்கள் எல்லோரும் தமிழின் பெருமையைப் புரிந்துக் கொள்ள ‘ஏழாயிரம் அறிவு’ வந்தால் கூட அவர்கள் திருந்துவார்களா என்பது சந்தேகம்தான்.
சரி! திரைப்படத்திற்கு வருவோம். 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசன் சீனா செல்கிறான். அச்சமயம் அங்குள்ள மக்களை கொடிய நோய் தாக்க அவன் தனது வைத்திய முறையைக் கொண்டு அவர்களைக் காப்பாற்றுகிறான். அதைத் தொடர்ந்து எதிரிகளின் படையெடுப்பின்போதும் தனது குங்ஃபூ கலையையும், நோக்கு வர்மத்தையும் கையாண்டு எதிரிகளை விரட்டியடிக்கிறான். அன்றிலிருந்து சீன மக்கள் அவனை தங்களது தெய்வமாகவே வணங்கி வருகின்றனர். அவன் குங்ஃபூ சண்டை, நோக்கு வர்மம் (ஹிப்னாடிஸம்) மற்றும் மருத்துவக் குறிப்புகளை அவர்களுக்கும் சொல்லித் தருகிறான். ஒருநாள் போதிதர்மன் மீண்டும் தன் தாய்நாடு செல்ல நினைக்கையில் அவனைக் கொன்று அவன் சடலத்தை அங்கேயே புதைத்தால்தான் அம்மக்கள் நலமாக வாழ்வார்கள் என நினைத்து போதிதர்மனின் உணவில் விஷம் வைத்து தருகின்றனர். அதை தனது ஞான திருஷ்டியினால் அறியும் போதிதர்மன் அதை மனதார ஏற்று உண்கிறான். சீன மக்களும் அவனை அங்கேயே புதைத்துவிடுகின்றனர்.
நிகழ்காலத்தில் இன்றைய சூர்யா சர்க்கஸ் கம்பெனி நடத்தும் இளைஞன். ஸ்ருதி டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி. போதிதர்மனின் வம்சாவளியினரை சோதித்துப் பார்த்து அதில் சூர்யாவின் டிஎன் ஏ போதிதர்மனின் டி என் ஏவுடன் 80 சதவீதம் ஒத்துப்போவதை கண்டறியும் ஸ்ருதி அதை இன்னும் சிறிது தூண்டிவிடுவதன் மூலம் இன்றைய சூர்யாவை மீண்டும் போதிதர்மரைப் போல் உருவாக்க முடியும் என நம்புகிறார். அதனால் தனது ஆராய்ச்சிக்காக சூர்யாவை பின் தொடர்கிறார். அதை காதல் என தவறுதலாக புரிந்துக்கொள்ளும் சூர்யா விரைவிலேயே ஸ்ருதியின் நோக்கத்தைப் புரிந்துக்கொண்டு ஸ்ருதியின் ஆராய்ச்சிக்கு உதவ முன்வருகிறார்.
இதற்கிடையே சீனா ’ஆபரேஷன் ரெட்’ எனும் பெயரில் இந்தியாவுக்கு எதிராக ஒரு திட்டம் தீட்டுகிறது. 6ம் நூற்றாண்டில் போதிதர்மன் காலத்தில் சீனாவில் பரவிய கொடிய நோயை தற்போது இந்தியாவில் பரப்புவது என்றும் அதனால் பல லட்சம் மக்கள் இறந்து தவிக்கும் சமயத்தில் அதற்கான மருந்தை சீனா இந்தியாவுக்கு தந்து உதவுவதன் மூலம் இந்தியாவை கைப்பற்ற சீனா திட்டமிடுகிறது. அத்துடன் போதிதர்மனை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் மாணவி ஸ்ருதியையும் போதிதர்மனின் வம்சமான சூர்யாவையும் கொல்ல நினைத்து ஜானை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறது. சீனாவின் திட்டத்தை ஜான் நிறைவேற்றினாரா? ஸ்ருதியின் ஆராய்ச்சி வெற்றிப்பெற்றதா என்பதே படத்தின் கதை.
படம் ஆரம்பித்ததும் போதி தர்மனாக வரும் சூர்யா நம் ஆர்வத்தைத் தூண்டுகிறார். ஆனால் நிகழ்காலத்திற்கு கதை வந்ததும் மிக சாதாரணமாக ஆகிவிடுகிறது. சூர்யா, ஸ்ருதி அனைவருமே அவரவர்களுக்கு கொடுத்துள்ள பாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளனர். குறை ஒன்றுமில்லை. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு விளம்பரங்களில் போதிதர்மனையே பிரதானமாகக் காட்டிவிட்டு படத்தில் சில நிமிடங்களே வருவது மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் வாய்ஸ் ஓவரிலேயே முடித்து விட்டது பெரும் ஏமாற்றம். மீதமுள்ள படம் முழுவதும் சாதாரணமாக மற்ற எல்லா படங்களையும் போல் உள்ளது.
போதிதர்மரின் முக்கியத்துவமே சீனர்களுக்கு குங்ஃபூ கலையை பயிற்றுவித்ததே அவர்தான் என்பதுதான். அப்படியிருக்கையில் முதலில் வரும் சண்டைக்காட்சியை பார்ப்பவர்கள் வாயைப் பிளக்குமளவு பிரமிப்பாக அமைத்திருக்கலாம். ஆனால் மிக சிறிது நேரமே வரும் சண்டைக்காட்சியில் குங்ஃபூவைவிட நோக்கு வர்மமும் கைவிரலசைவிலேயே புழுதியைக் கிளப்பும் சித்து விளையாட்டுமே அதிகமுள்ளது. இப்பொழுது வரும் படங்களில் விரல்வித்தை செய்யும் ஹீரோக்கள் இதைப் போல நிறைய வித்தை செய்துக் காட்டுவதால் ’அது போல இதுவும் ஒன்று’ என்றே எண்ணத் தோன்றுகிறது. உச்சகட்ட சண்டைக்காட்சியும் எதிர்ப்பார்த்த வண்ணமே இருப்பதால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை. இசையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. என்னாச்சு ஹாரிஸ் ஜெயராஜுக்கு!
சொல்ல வந்த விஷயம் நல்லதாக இருந்தாலும் இயக்குனர் திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். கலைப் படமாகவும் இல்லாமல் பொழுதுப்போக்கு அம்சங்களும் நிறைவாக இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு அவசரகதி தெரிகிறது. சரி! போதி தர்மரை சீனர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் தமிழர்களுக்கு தெரியவில்லை என குறை கூறுவது இருக்கட்டும். போதிதர்மர் தமிழர்களுக்கு என்ன செய்தார் அவரை நாம் தெரிந்து வைத்திருக்க? இங்கே அவர் கற்ற களறிச் சண்டையை அங்கே அவர்களுக்கு குங்ஃபூவாக கற்று தந்தார். மற்றப்படி தமிழகத்தில் பெரும் புரட்சி ஒன்றும் செய்துவிடவில்லை.
விஞ்ஞானிகள் கூட்டத்தில் ஸ்ருதிஹாசன் பேசும் வசனங்களும், படத்தில் ஆங்கேங்கே வரும் சில வசனங்களும் தமிழை அலட்சியப்படுத்துபவர்களுக்கு செம்மட்டி அடி. டிரைலரில் அபிநயாவைக் காட்டும் அளவுதான் மொத்த படத்திலேயே அபிநயா வரும் காட்சிகள். அப்படியிருக்க அந்த பாத்திரத்திற்கு அபிநயா எதற்கு?
மொத்தத்தில் பில்டப் ஸ்ட்ராங்......... படம்(பேஸ்மெண்ட்) வீக்......
நல்ல கருத்தை சொல்ல முயன்றதற்காக இப்படத்திற்கு மணியோசையின் கணிப்பு 43/100.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


