
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பழைய மாப்பிள்ளை படத்தின் அரைவேக்காடு ரீமேக்கே இந்த புதிய மாப்பிள்ளை.
ஊரே மெச்சும் பக்தி பழம் தனுஷ். இவரது குணத்தில் ஈர்க்கப் பட்டு கல்லூரி மாணவியான ஹன்சிகா மோத்வானி காதலிக்கிறார். முதலில் கொஞ்சம் பந்தா செய்தாலும் ஓரிரு காட்சிகளில் தனுஷும் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இவரது காதல், ஹன்சிகாவின் கோடீஸ்வரி தாயான மனிஷா கொய்ராலாவுக்கு தெரிந்து விடுகிறது.
தனுஷை வீட்டுக்கு அழைக்கும் மனிஷா, திருமணத்துக்கு சம்மதித்து விடுகிறார். காரணம், தனக்கு வரும் மாப்பிள்ளை தனக்கு அடங்கி வீட்டோடு இருக்க வேண்டும் என்பதே. தான் நினைப்பது போல் தனுஷ் சாந்த சொரூபி அல்ல; கும்பகோணமே அலறும் பயங்கர ரவுடி என அறிந்துக் கொள்ளும் மனிஷா கொய்ராலா, தனது மகளுக்கு ஆசிஷ் வித்யார்த்தியின் மகனை மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். திருமணத்தன்று, ஏற்பாடு செய்யப் பட்டிருந்த மாப்பிள்ளையைக் கடத்தி 'இன்ஸ்டன்ட்' மாப்பிள்ளையாக தான் ஆகி விடுகிறார் தனுஷ்.
அடாவடி மாமியாருக்கும், ரவுடி மாப்பிள்ளைக்குமான கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்குகிறது. ஆட்டத்தின் முடிவு என்ன என்பதே கிளைமேக்ஸ்.
தனக்கு கொடுக்கப் பட்ட கதாபாத்திரத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாமல் நடித்துள்ளார் தனுஷ். ஆரம்பக் காட்சிகளில், பணக்கார ஹன்சிகாவை கரெக்ட் செய்ய வேண்டும் என திட்டமிடும் விவேக்குடன் சேர்ந்து இவர் அடிக்கும் கூத்து கலகல.
மாப்பிள்ளை படத்தின் கதையோட்டத்துடன் ஒட்டாமல் வந்து போகிறார் விவேக். படம் ஆரம்பித்து சில காட்சிகள் வருபவர், திடீரென காணாமல் போய் விடுகிறார். படம் முடியும் போது மறுபடியும் தலை காட்டுகிறார். வசனங்களை வேறு அஜித் ஸ்டைலில் பேசுவதாக நினைத்து முடிந்த அளவு மொக்கை போட்டுள்ளார் விவேக். அவர் காமெடியில் மருத்துக்கு கூட சிரிப்பு வர மாட்டேன் என்கிறது.
ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி, 'மற்றும் பலர்' என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பார்ப்பதற்கும் அப்படி ஒன்றும் அழகாக இல்லை. நடிக்க போதிய வாய்ப்பும் இல்லை. ஹீரோயின் பற்றி சம்பிரதாயத்துக்காவது ஏதாவது எழுத வேண்டுமே என்பதால்தான் இதையும் எழுதுகிறோம்.
தனுஷின் திமிர் பிடித்த மாமியாராக மனிஷா கொய்ராலா. அவ்வளவு பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் இவ்வளவு வடிக்கட்டிய முட்டாளாகவா இருப்பார் என நினைக்க வைக்கும் கதாபாத்திரம். இவர் அறிமுகம் ஆகும் காட்சி பரபர. ஏதோ பெரிதாக செய்ய போகிறார் என நினைத்தால் காமெடி பீஸ் ஆக்க விட்டார்கள்.
மதன்பாப், சிட்டிபாபு, மனோபாலா என கோஷ்டியாக வந்து 'கடி'த்து குதறியுள்ளனர்.
'மாப்பிள்ளை' படத்தை அப்படியே ரீமேக் செய்து தொலைத்திருந்தாலாவது கொஞ்சம்நஞ்சமாவது தேறியிருக்கும். காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றுவதாக நினைத்து பாடாய் படுத்தியுள்ளார் சுராஜ்.
மணிஷர்மா இசையில் பாடல்களும் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை.
மணியோசை கணிப்பு - 38 / 100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





இந்த படத்துக்கு 38 மார்க் ரொம்ப ஜாஸ்தி. படம் ஆரம்பித்து வெகு நேரத்திற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிரிப்பும் வராமல் காமெடி டிராக் ஓடுகிறது. அதைத் தொடர்ந்து மொக்கையாக ஒரு இண்ட்ரோ பாடல். பிறகு மீண்டும் காமெடி டிராக் என படம் ஆரம்பித்து ரொம்ப நேரமாகியும் தனுஷ், ஹன்சிகாவை கூட அறிமுகப்படுத்தாமல் மொக்கை போடுகின்றனர்.
சின்ன கலைவாணர் என சொல்லிக் கொள்ளும் விவேக்கிற்கு சரக்கு தீர்ந்துவிட்டது போலிருக்கிறது. படிக்காதவனைத் தொடர்ந்து இப்படத்திலும் வடிவேலுவையே இமிடேட் செய்கிறார். பேச்சு ஸ்டைல் அஜீத். இப்படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் விவேக் காமெடிதான். அது புரியாமல் டிரைலரிலும் போஸ்டரிலும் கூட மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.