காலங்கள் மாற மாற மனிதர்களின் உருவம் மட்டுமின்றி ஊர்களும் மாறித்தான் விடுகிறது. நாம் குடியிருந்த ஊரை பத்தாண்டுகள் கழித்துப் பார்க்கும்போது நமக்கே அடையாளம் தெரியாத வகையில் அநியாயத்திற்கு மாறிவிடுகிறது. அப்படியிருக்கும்போது 65 வருடத்திற்கு முந்தைய சென்னை, அதாவது அது மதராஸப்பட்டினமாக இருந்தக் காலத்தில் எப்படியிருந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.
வயதான ஏமியாக வரும் பெண்மணி காரில் அமர்ந்து இன்றைய ஸ்பென்சர் ப்ளாசாவை கண்கள் விரித்து ஆச்சர்யத்துடன் பார்க்கும்போது 1945ல் இருந்த ஸ்பென்சர் பிளாசாவாக திரையில் மாறும் போது நம் கண்கள் ஆச்சர்யத்தில் விரிகிறது. இதுப்போல இன்னும் பல இடங்கள், பொருட்கள் அன்றும் இன்றும் என மாறி மாறி வருவதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.
படத்தின் கதை என்னவோ சாதாரணக் காதல் கதைதான். ஹீரோ ஆர்யா ஒரு சலவைத் தொழிலாளி. கதாநாயகி எமி ஜாக்சன் பிரிட்டிஷ் கவர்னரின் மகள். இருவரும் காதலிக்கின்றனர். கதாநாயகியின் அப்பா எதிர்க்கிறார். இது வழக்கமான சினிமாக் கதைதான். ஆனால் இதன் கதைக் களம் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா என்பதுதான் இப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்ப்பார்ப்பு. இன்றைய லண்டனில் ஆரம்பிக்கிறது கதை. தலையில் ரத்தக் கசிவு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள இருக்கும், சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் 80 வயதுக்கு மேலான மூதாட்டி இந்தியாவில் தன் பழையக் காதலனை காண விரும்பி இந்தியா வருகிறார். இந்த பின்னனியால் சென்னையின் பழைய புதிய அவதாரங்களை மாற்றி மாற்றிக் காட்ட இயக்குனருக்கு வசதியாகி விட்டது. ஆர்ட் டைரக்டர் செல்வக்குமாரின் கைவண்ணத்தில் பழைய மதராஸப்பட்டினத்தை தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறார். 1947ல் சென்ட்ரல் ரயில்நிலையம், ரிப்பன் பில்டிங், ஸ்பென்சர் பிளாசா, கூவம் நதிக்கரை (மதராஸப்பட்டினத்தின் தேம்ஸ் நதிக்கரை) என எல்லாவற்றிற்கும் பிரம்மாண்டமாக செட் அமைத்து அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.
ஹீரோ ஆர்யா (இளம்பரிதி) சலவைத் தொழிலாளியாகவும் மல்யுத்த வீரராகவும் மிளிர்கிறார். இந்த கதாப்பாத்திரத்திற்கு ஆர்யா கனக்கச்சிதம். படம் பீரியட் படமாக இருந்தாலும் ஆர்யாவைத் தீவிர சுதந்திரப் போராட்ட தியாகியாகக் காட்டவில்லை. மாறாக ஒருசிலக் காட்சிகளில் அவரது பிரிட்டிஷ் எதிர்ப்பை நாசூக்காகக் காட்டி அதையே ஹீரோ, ஹீரோயின் சந்திக்கும் காதல் பூக்கும் தருணங்களாகவும் மாற்றியிருக்கிறார் டைரக்டர். உதாரணத்திற்கு ஆர்யாவின் அறிமுகக் காட்சி பிரமாதம். இப்பொழுது உள்ள இளம் ஹீரோக்களுக்கு பஞ்ச் டயலாக், ஹீரோயிஸம் போன்றவற்றை விட நல்ல படத்தின் மூலமாகவே வெற்றிப்பெற முடியும் என ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதாகவேத் தோன்றுகிறது. இதுப் போன்ற வித்தியாசமான படங்களில் ஆர்யா தொடர்ந்து நடிக்கட்டும்.
கதாநாயகி எமி ஜாக்சன் ஒரு க்யூட் வரவு. முகத்தில் ஒரு அப்பாவித்தனம் நிரம்பி வழிவதால் இந்த பாத்திரத்திற்கு அம்சமாகப் பொருந்துகிறார். ஆனால் பிரிட்டிஷ் பெண்ணுக்கு தனது அடிமை நாட்டில் உள்ள ஒரு ஏழை சலவைத் தொழிலாளி மீது காதல் வருவதற்கு காரணங்கள் போதவில்லை. வயதான ஏமியாக வரும் பெண்மணி அமர்க்களப்படுத்துகிறார். மென்மையான விழியசைவுகளாலேயே நம்மிடையே ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்துகிறார். ஆஸ்பத்திரியில் ஆர்யாவின் இளமைக்கால நண்பன் இறக்கும்போது பரிதியைக் கண்டுப்பிடிக்க தனக்கு கிடைத்த ஒரே துருப்புச் சீட்டும் போய்விட்டதே என வருந்துவது படம் பார்ப்பவர்களையும் பரிதாபப்படவைக்கிறது. ஆனால் படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் சவப்பெட்டி ஏமியின் கணவருடையதா? அவருக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா? திருமணமானவர் என்றால் கணவர் இறந்த மறுநாளே கையில் தாலியை வைத்துக் கொண்டு தன் பழையக் காதலனைத் தேடி செல்கிறாரா என்பதுப் போன்ற சிறுக் குழப்பங்களுக்கு தக்க பதில் இல்லை.
ஹனீபாவின் கடைசிப் படம். முதல் பாதியை தனது நகைச்சுவையால் நிரப்பியிருக்கிறார். இரண்டாம் பாதி எடுக்கும் முன்னரே இறந்துவிட்டார் போலும். அவர் மிஸ் ஆனதால் படத்தில் கலகலப்பும் மிஸ்ஸிங். இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க சீரியஸாகவே இருப்பதால் வளவளவென்று வளர்ந்துக் கொண்டேப் போவது போல் உள்ளது. இருப்பினும் முதல் பாதியில் ஆங்கில வசனங்கள் அதிகமிருப்பதால் அதிலும் சிறு தொய்வு இருக்கிறது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் வெளியாகி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த டைட்டானிக் மற்றும் லகான் படங்களின் தாக்கம் படத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. டைட்டானிக் படத்தில் வயதான கதாநாயகி தன் இளமைக் காலக் காதலை நினைத்துப் பார்ப்பதை போலவே இதிலும் வயதானப் பெண்மனி தாலியைக் கையில் வைத்துக்கொண்டு கடந்தக் காலத்தை நினைத்து பார்க்கிறார். டைட்டானிக் படத்தில் கதாநாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதைப் போலவே இதிலும்... ஆடை வடிவமைப்பு போன்ற விஷயங்கள் லகானை நினைவுப்படுத்துகிறது. லகான் படத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவதுப் போல இதில் தனது நிலத்தைக் காப்பதற்காக வெள்ளைக்காரனுடன் மல்யுத்தம் செய்கிறார்.
நீரவ் ஷாவின் கேமரா, செல்வகுமாரின் கலை, ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. நிகழ்காலத்தையும் ஃப்ளாஷ்பேக்கையும் மாற்றி மாற்றி கலந்துக் கொடுத்திருக்கும் ஆண்டனியின் எடிட்டிங்கும் ரசிக்கும்படியே இருக்கிறது. உதாரணத்திற்கு இன்று வயதான ஏமியின் சார்பாக டூரிஸ்ட் கைடுகள் ஆர்யாவின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கின்றனர். அவர்கள் படத்தை வைத்துக்கொண்டு ’பாப்பா இங்கே வா...’ என்றதும் குரல் கேட்டு ஆர்யாவின் இளவயது தங்கை திரும்புகிறார். பார்த்தால் கதை ஃப்ளாஷ்பேக்கிற்கு போய்விடுகிறது. ’நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுங்க..’ என கைடு ஐடியா கொடுக்க அடுத்த காட்சி செய்தித்தாள் அச்சிடப்படும் காட்சி வருகிறது. ஆனால் அது இந்தியா சுதந்திரம் பெறப்போகும் செய்தியைத் தாங்கி வரும் செய்தித்தாள். இப்படி பழசையும் புதுசையும் மிக்ஸ் செய்துக் காட்டியிருப்பது சுவையாக உள்ளது. ஆனால் கிராமங்களில் எடுபடுமா என்று தெரியவில்லை.
சிலபல குறைகள் இருந்தாலும் மதராஸப்பட்டினம் திரைப்படம் நல்ல முயற்சி. இதைக் கண்டிப்பாக ஒருமுறை தியேட்டரில் சென்றுப் பார்த்து ரசியுங்கள்.
மணியோசை கணிப்பு 44/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



sari