’மன்’னார்- கமல், ’மதன’ கோபால்- மாதவன், ’அம்பு’ஜாக்ஷி- திரிஷா மூவரிடையே நடக்கும் காதல் போராட்டங்கள்தான் மன்மதன் அம்பு. சினிமா நடிகை நிஷா எனும் அம்புஜா(திரிஷா) வை காதலிக்கிறார் மதன் (மாதவன்). ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க வரும் மாதவனின் அம்மா(உஷா உதுப்)விற்கு திரிஷாவின் கவர்ச்சி உடை, கதாநாயகனுடன் நட்பாக பேசுவது போன்றவற்றைப் பார்த்து அருவருக்கிறார். மாதவனுக்கும் சந்தேகம் துளிர்க்கிறது. விடுமுறைக்கு தோழியின் வீட்டுக்கு செல்லும் திரிஷாவை வேவுப்பார்க்க கமலை டிடெக்டிவாக நியமிக்கிறார். மாதவன் பெருந்தொகை அளிக்க உறுதியளிப்பதால் தனது நண்பனின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் என கமலும் ஒப்புக் கொள்கிறார். இந்த பின்னனியுடன் உலகிலேயே மிக பெரிய பிரமாண்டமான கப்பலில் கதை நகர ஆரம்பிக்கிறது. கமல் திரிஷாவின் நன்னடத்தையை மாதவனுக்கு எடுத்து கூறுகிறார். ‘அதான் எதுவுமே நடக்கலியே, உனக்கு நா ஏன் பணம் தரனும்...’ எனக் கேட்டு மாதவன் கம்பி நீட்ட முயல திரிஷாவிற்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதாக ப்ளேட்டை திருப்பி போடுகிறார் கமல். தேவையான பணம் வந்து சேர்கிறது. இறுதியில் என்னவாயிற்று என்பதுதான் மீதி கதை.
தமிழ் திரையுலகிற்கு இது நிச்சயம் ஒரு மாறுப்பட்ட படம்தான். ஆரம்பக் காட்சியைத் தவிர படம் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கியிருக்கிறார்கள். படம் நெடுக ஒரு ஸ்டைலிஷ் அணுகுமுறை தென்படுகிறது. ஆனால் ஆங்கிலம் சற்று தூக்கலாக இருப்பது அந்நியப்படுத்துகிறது. படத்தில் பாடல்கள் இருக்கிறது, சண்டையிருக்கிறது; ஆனால் எதுவுமே தனியாக தெரியவில்லை. ஒவ்வொருப் பாடலுமே கதையோடு ஒன்றியே வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு பொருத்தமாய் மேற்கத்திய பாணியில் இனிமையாக இருக்கிறது. ஆண்டிரியாவின் விஸ்கி குரலில் வரும் ’ஹூ இஸ் த ஹீரோ’ பாடல் சுத்தமான மேற்கத்திய இசை. கமலை அறிமுகப்படுத்தும் இப்பாடலும், கமல் தனது பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்துவிட்ட திருப்தியில் குஷியாக ஆட்டம் போடும் ‘தகிடுதத்தம்’ பாடலும் ஆட்டம் போட வைக்கின்றன. அப்பாடலில் கமல் சர்க்கஸ் எல்லாம் செய்யாமல் போடும் ’சிம்பிள் ஸ்டெப்ஸ்’ காட்சிக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. ‘நீலவானம்’ பாடல் மென்சோகம். பாடல் முழுவதும் காட்சிகளை ரிவர்ஸில் ஓடவிட்டிருப்பது புதுமை. கமலின் மனைவியாக வரும் அந்த பிரெஞ்சு பெண் செம அழகு.
கமல் பற்றி குறிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். புதுமை என்ற பேரில் வேஷம் தரிக்காமல் தனது ஒரிஜினல் முகத்துடனும் தனது ட்ரேட்மார்க் நடிப்புடனும் இப்படத்தில் நடித்திருப்பது கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சி. அவரது நடிப்பைப் பற்றி பாராட்டவேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இறந்த மனைவியின் நினைவுகள் வரும்போதும், உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நண்பனை நினைத்து தவிக்கும்போதும் கமல் கமல்தான்.
சாக்லேட் ஹீரோ, அவ்வளவு ஏன் ஹீரோ என்ற இமேஜையே உடைத்தெறிந்து மிக சிறந்த நடிகர் என காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய தகுதி மாதவனுக்கு நிறையவே இருக்கிறது. சற்று வில்லத்தனம் கலந்த ரோல் இப்படத்தில் எப்பொழுதும் போதையிலேயே இருக்கும் ஹைகிளாஸ் இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். லேசான தள்ளாட்டமும், உளறலும், காதலியை சந்தேகிக்கும் குரூரபுத்தியும், நிஜத்தை சொன்னால் நம்பாமல், பொய் சொல்லும் போது நம்புதல் என மாதவனுக்கு இப்படத்தில் நடிக்க அதிகம் ஸ்கோப் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து ஏற்று நடித்ததற்கு அவரை பாராட்ட வேண்டும்.
திரிஷா, காதலன் சந்தேகிக்கும் போது தவிப்பதும், நடு ரோட்டில் விபத்தை ஏற்படுத்தி விட்டு என்ன நடந்ததோ என புரியாமல் நின்றிருக்கும்போது ஒரு பேருந்து நிறைய ரசிகர்கள் வந்து சூழ்ந்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்கும்போது செய்வதறியாமல் தவிக்கும் போதும், கமலின் மனைவி இறந்ததற்கும் தனக்கும் உள்ள சம்பந்தத்தை நினைத்து மருகுவதும் என கலக்குகிறார். திரிஷாவிற்கு நாளுக்கு நாள் நடிப்பும், அழகும் ஏறுகிறது; ஆடை செலவு குறைகிறது.
விவகாரத்தான இளம் தாயாக சங்கீதா. அவர்தான் நன்றாக நடிக்கிறார் என்றால் அவரது மகனாக வரும் சுட்டியும் செம கலக்கல். மாதவனும், சங்கீதாவும் கடைசியில் படகில் வரும் காட்சிக்கு தியேட்டரில் செம கைத்தட்டல். இவர்களை தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, ஸ்ரீமன், களவாணி ஓவியா, உஷா உதுப் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே வந்து போகிறார்கள்.
வசனகர்த்தா கமலேதான். பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும், சில இடங்களில் தேவையில்லாமல் தனது பகுத்தறிவு (?!?!) கொள்கைகளை புகுத்த நினைத்துள்ளார்.
“ஏன் எல்லா கள்ள காதலர்களும் காவி நிறத்திலேயே ட்ரெஸ் போட்டிருகாங்க?” என மாதவன் கேட்க ”அது ஒரு வேளை அவங்க ரிலிஜன் கூட காரணமாக இருக்கலாம்.” என கமல் பதிலளிக்கிறார். என்ன மத சார்பின்மையோ, பகுத்தறிவோ? இதைப் போன்ற கோமாளி தனங்கள் செய்யாமல் இருக்கலாமே கமல்!
மொடா குடிக்காரனான மாதவனை ஆதரிக்கும் சந்தேகக்கார அம்மா உஷா உதுப் சுத்தமான பிராமண தமிழ் பேசி வருவதாக காட்டியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.
முதல் பாதியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு இரண்டாம் பாதியில் சற்றே இழுத்திருக்கிறார்கள். ஏதோ தேவையில்லாமல் மொக்கை போடுவது போன்ற ஒரு ஃபீலிங். டிராவல் கார் டிரைவரின் மனைவி நாடகம் கேன்சலானதை அறிந்து சோக டயலாக் பேசுவதெல்லாம் கடிகாரத்தை பார்க்க வைக்கிறது.
ஒருசில குறைகள் இருந்தாலும் இது ஒரு முற்றிலும் வித்யாசமான தமிழ் படம். செண்டிமெண்ட், காதல், காமெடி, பிரமாண்டம் எல்லாம் கலந்த ஜுகல்பந்தி.
மணியோசை கணிப்பு - 42/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


