அழகான ஒன் லைன், மிக அழகான கேமரா, புதுமையான இசை இவையெல்லாம் மயக்கத்தையே வரவழைக்கிறது. வைல்ட் லைஃப் புகைப்பட கலைஞராக ஆக விரும்பும் கார்த்திக் (தனுஷ்) வயிற்றுப் பிழைப்புக்காக கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா என புகைப்படங்கள் எடுத்து பிழைப்பு நடத்துகிறார். அவருக்கு அந்த துறையில் பிரபலமாக இருக்கும் மாதேஷ் சுப்ரமணியத்திடம் (ரவி பிரகாஷ்) உதவியாளராக இணைந்து மேலும் கற்றுக்கொள்ள விருப்பம்.
ஆனால் அவரோ தனுஷ் காட்டிற்குள் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு எடுத்த புகைப்படங்களை தான் எடுத்ததாகக் கூறி பெயரும் புகழும் சம்பாதித்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியுறும் தனுஷ் சிறு விபத்தில் சிக்கி புத்தி பேதலித்து, குடிக்கு அடிமையாகி பின்னர் காதல் மனைவியின் உதவியுடன் மீண்டு வந்து நம்பர் 1 புகைப்படக் கலைஞராகி உயர் விருதுகள் பெறுகிறார்.
இதன் நடுவில் காதல், நட்பு எல்லாம் கலந்து ஜுகல்பந்தியாக இருக்கிறது. எல்லா படங்களிலும் அரிவாள் இல்லாவிட்டால் துப்பாக்கி என ஏதோ ஒன்றை ஹீரோ படம் முழுவதும் தூக்கி சுற்றும்போது இதில் தனுஷ் கேமராவும் கையுமாக அலைகிறார். மருந்துக்கு கூட ஒரு சண்டைக் காட்சியில்லை. கதாநாயகன் புகைப்படக் கலைஞர் என்றால் ஒளிப்பதிவாளர் பாடு கொண்டாட்டம்தான். கதைப்படி கதாநாயகன் ரசித்துப் படமெடுத்தாரோ இல்லையோ, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ரசனை ஒவ்வொரு பிரேமிலும் பளிச்சிடுகிறது. அதுவும் காட்டுக்குள் தனுஷ் புகைப்படம் எடுக்கும்போது நாம் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூட மறந்து நம்மை லயித்துப் போக செய்கிறது அதன் அழகு.
தேசிய விருது கலைஞனான தனுஷ் தான் அந்த விருதிற்கு மிகவும் தகுதியானவன் என நிரூபித்திருக்கிறார். எல்லாருமே எந்த குறையும் கூற முடியாது. அவரவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை புரிந்து நடித்திருக்கின்றனர். கதாநாயகி ரிச்சா கங்கோபாத்யாயா (பாத்தியாய்யா பேர!!!) சிரிக்கும் போது அழகாக நடிகை மீனாவை நினைவுறுத்துகிறார். மற்ற நேரங்களில் ஏனோ கொழுக்கட்டையே நினைவில் வருகிறது.
இந்த அழகான கதைக்கு ஏன் டேட்டிங் கலாச்சாரம் கொண்ட கதாநாயகி தெரியவில்லை. ஓகே! டேட்டிங் கலாச்சாரம் இப்பொழுது பரவி வந்துக்கொண்டிருக்கலாம். ஹீரோவும் ஆண் பெண் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நள்ளிரவில் கடற்கரையில் குடித்து கும்மாளமிட்டு படுத்து கிடப்பதும், கொஞ்ச நாள் பழகிப் பார்க்கலாம் என நண்பனின் கேர்ள் பிரண்டாக அறிமுகமாகும் ரிச்சாவை தனுஷ் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதெல்லாம் நல்ல நண்பர்களுக்கு அடையாளமாகத் தோன்றவில்லை.
தண்ணியடித்தவாறு ஹீரோவின் நண்பனுடன் (சுந்தர்) கட்டித் தழுவி டான்ஸ் ஆடி, அவனுடன் தனியறையில் தங்கி, பல்லிக்கு பயந்து பாத்ரூம் கதவை மூடாமல் குளித்து, ஹீரோவை காதலிக்கும் முன்பே, ‘நீ எட்டி பாப்பன்னு நெனச்சேன்’ என கமெண்ட் அடிக்கும் கதாநாயகி ரிச்சா திருமணத்திற்கு பின் கல்லானாலும் கணவன்.... ஸ்டைலில் வாழ்கிறார். கதையின் முக்கிய கருவிற்கு இந்த கலாச்சாரம் கொண்ட நண்பர்களும் ஹீரோயினும் ஏன் என்றுதான் தெரியவில்லை. சரி இது புதுக் கலாச்சாரம் என்றே வைத்துக்கொள்வோம். பின் எதற்காக ஹீரோயின் தன்னை மிகவும் கண்ணியமானவளாக காட்டிக்கொள்ள டேட்டிங் பற்றிய விளக்கவுரை தந்து ‘கேர்ள் பிரண்ட்ன்னு தப்பால்லாம் பேசாத....’ என கடிந்துக் கொள்ளவேண்டும். இது சரியா தப்பா என இன்னொரு படமெடுத்து அலசியிருக்கலாம். இக்கதைக்கு அனாவசியமாகவே தோன்றுகிறது.
”டேய்! ஏதாவது பேசுங்கடா ஒண்ணுமே புரியமாட்டேங்குது...” என தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் அலறும் அளவு பல காட்சிகளில் எல்லாரும் எதுவுமே பேசாமல் பின்னனி இசையும் இல்லாம மௌனம் சாதிப்பது அலுப்படையவே செய்கிறது.
ஜி.வி பிரகாஷின் இசையில் ’பிறை தேடும் இரவில்...’ பாடல் தாலாட்டு. ‘ஓட ஓட...’ ‘காதல் என் காதல் போன்ற பாடல்கள் மிக கேஷுவல் ஸ்டைலில் இருப்பதால் எல்லாரையும் முணுமுணுக்க செய்து ஹிட்டடிக்கும். தனுஷின் பாடலாசிரியர் அவதாரமும், அவரது குரலும் கூட இந்த கேஷுவல் ஸ்டைலுக்கு ஒரு காரணம்.
செல்வராகவன் ரசித்து மயங்கியிருக்கிறார்........
மணியோசையின் கணிப்பு 40/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


