அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்து ஹிட் அடித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக்தான் இந்த 'நண்பன்'. ரீமேக் படம்தான் என்றாலும், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, ஷங்கர், ஹாரீஸ் ஜெயராஜ் என பலம் வாய்ந்த குழு அமைந்திருப்பதால் நண்பன் படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகம்.
'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் கூறியதைப் போல 'எந்திரன்' படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து விட்டு அதே போன்ற எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்க்கப் போனால் ஏமாந்துதான் போவீர்கள். ஏனென்றால் ஹிந்தி த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்யும் ஒரே குறிக்கோளுடன், தன் ட்ரேட்மார்க்கை ஓரங்கட்டி விட்டு மிகவும் அடக்கி வாசித்துள்ளார் ஷங்கர்.
த்ரீ இடியட்ஸ் படத்தை ஏற்கனவே பார்த்தவர்களுக்கு படத்தின் கதை தெரியும். பார்க்காதவர்களுக்கு கதையின் சுருக்கத்தை சொல்லி விடுகிறோம். விஜய் (பாரிவேந்தன்), ஸ்ரீகாந்த் (வெங்கட்), ஜீவா (சேவற்கொடி செந்தில்) ஆகிய மூன்று பேரும் ஒரே வகுப்பில் பொறியியல் படிப்பு படிக்கின்றனர். அதிமேதாவிகளுக்கே உரிய கிறுக்குத் தனங்கள் உடைய கல்லூரியின் பிரின்சிபால் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம் என்கிற வைரஸ்!! ).
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புரியாமல் மனப்பாடம் செய்து வெற்றி பெறுவதை விட, புரிந்து கற்க வேண்டும் என்பது விஜய்யின் கொள்கை. இந்த கொள்கையை முன்னிறுத்தி விஜய் அடிக்கும் லூட்டிகள் சத்யராஜூக்கு பிடிக்காமல் போகிறது. இதனால் அவருடைய நண்பர்களான ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் அச்சுறுத்தப் படுகின்றனர்.
இதற்கிடையே, வாழ்க்கையை மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் விஜய்யை, சத்யராஜ் மகள் இலியானாவுக்கு பிடித்து விட, காதல் மலர்கிறது.பின்னர் தன் கொள்கையில் விஜய் வெற்றி பெற்றாரா என்பதுதான் நண்பன் படத்தின் கதை போக்கு.
நீண்ட காலத்துக்குப் பிறகு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு உடைய படத்தில் நடித்து தன் நடிப்பாற்றலை நிரூபித்துள்ளார் விஜய். இந்தி த்ரீ இடியட்ஸ் படத்தைப் பார்த்து விட்டு 'அமீர்கான் அளவு விஜய் நடிக்கவில்லை' என்று பலர் ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் எழுதுகின்றனர். அவர்கள் விஜய் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியிலோ அல்லது இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற தத்துவத்தின் அடிப்படையிலோதான் அவ்வாறு எழுதி வர வேண்டும். உண்மையில், அமீர்கான் செய்த கதாபாத்திரத்திற்கு விஜய் எந்த பங்கத்தையும் ஏற்படுத்தி விடவில்லை.
ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
இலியானாவுக்கு சொல்லி கொள்ளும் அளவு நடிக்க வாய்ப்பில்லை. ஆளும் சோகையாக இருக்கிறார், முகமும் சின்ன வயது சோனியா காந்தி போல உள்ளது !
நண்பன் படத்தின் 'ஃபோர்த் இடியட்' சத்யன்தான் (ஸ்ரீவத்சன் என்கிற சைலன்சர்). பாடங்களை புரியாமல் படித்து விட்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்கும் 'முதல் பெஞ்ச்' மாணவர் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்துள்ளார் சத்யன். 'கற்பிக்கும்' என்ற வார்த்தை 'கற்பழிக்கும்' என மாற்றப் பட்டிருப்பதை அறியாமல் சத்யன் ஆற்றும் ஆசிரியர் தின உரை அட்டகாசம் (உ-ம்: ஒருவரால் எப்படி இவ்வளவு பேரை கற்பழிக்க முடியும். நாமும் எதிர்காலத்தில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கற்பழிக்க வேண்டும்...).
அவர் காற்றை பிரித்தெடுப்பது தொடர்பான காட்சிகளையும், வசனங்களையும் தமிழ் பதிப்பிலாவது தவிர்த்திருக்கலாம். செம மொக்கை.
அதிமேதாவி கிறுக்கு பிரின்சிபால் கதாபாத்திரத்துக்கு சத்யராஜ் கனப் பொருத்தம். வித்தியாசமான சொட்டை தலை, தொப்பை என அவருடைய கெட்டப் பிரமாதம். ஒரு காட்சியிலும் சிரிக்காமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு 'வைரஸ்' என புகழ்பெறும் அளவு அவர் செய்யும் சேடிஸ செயல்கள் ரகளை.
ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், மனதில் பதிந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் நண்பன் படத்தின் பாடல்களும் பரவாயில்லை ரகம்தான். பாடல்கள் படமாக்கப் பட்ட விதத்திலும் ஷங்கர் மிஸ்ஸிங்.
மொத்தத்தில், நண்பன் - All is Well.
மணியோசை கணிப்பு - 42 / 100
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|


