ஆய்த எழுத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கியிருக்கும் படம் ராவணன்.விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரகுமான் எனக் கூட்டணி பலமாக இருப்பதால் படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகம்.
இன்று பரபரப்பாக இருக்கும் நக்சலைட்டுகளின் பிரச்சினையை மனதில் வைத்து படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.
காவல் துறை அதிகாரி பிருத்விராஜ். அவர் மனைவி ஐஸ்வர்யா ராய். காட்டுக்குள் வாழும் நக்சலைட்டு கும்பலின் தலைவர் விக்ரம்.
விக்ரமை கைது செய்வதற்காக அவர் இருக்கும் பகுதிக்கு மாற்றல் ஆகி வருகிறார் பிருத்விராஜ். ஐஸ்வர்யா ராயை கடத்தி காட்டுக்குள் தன் வசம் வைத்து கொள்கிறார் விக்ரம். மனைவி ஐஸ்வர்யா ராயை மீட்டு, விக்ரமை போட்டுத் தள்ள பிருத்வி ராஜ், ஆள், அம்பு, சேனையுடன் கோதாவில் இறங்குகுறார். விக்ரம், தீவிரவாதியாக மாறியதற்கு, அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் என்று வலியுறுத்த நெகிழ்ச்சியான பின்னோட்ட பகுதி இடம் பெறுகிறது. விக்ரமிடமிருந்து, மனைவி ஐஸ்வர்யா ராயை பிருத்விராஜ் மீட்டாரா என்பதுதான் படத்தின் உச்சக்கட்டம்.
ராவணன் என்ற படத் தலைப்பில் இருந்தே தெரிகிறதே. ராமாயணக் கதையை தழுவி, தற்கால பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதையை எழுதியுள்ளார் மணிரத்னம். ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான ராமாயணக் கதை என்பதால், எங்கே ஆரம்பித்து, எப்படி முடிப்பது என்ற குழப்பம் இயக்குனருக்கு எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஒரே நேர்கோட்டில் குழப்பம் இல்லாமல் கதையை நகர்த்தி சென்றுள்ளார் மணிரத்னம். இது ராவணன் படத்தின் மிகப் பெரிய பலம். உச்சக் கட்டக் காட்சியில் பளிச் திருப்புமுனை ஒன்றை வைத்திருப்பது மணிரத்னத்தின் அசத்தல் முத்திரை.
குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோகத்தால், சமூகம் மீது வெறுப்பு ஏற்பட்டு, தீவிரவாத செயல்களில் ஈடுபடும், ஒடுக்கப் பட்ட இனத்தை சேர்ந்த இளைஞனாகவே விக்ரம் மாறியுள்ளார். சின்ன சின்ன முக பாவம், உடல் மொழி, வசன் உச்சரிப்பு என படம் நெடுக விக்ரம் மயம். டண்டண்டன் என வாயில் எழுப்பும் ஒலி அட்டகாசம். உண்மையில், விக்ரம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இயக்குனர் ஸ்ரீதரின் பட்டறையில் வந்தவர்கள் யாரும் சோடை போக மாட்டார்கள் என்பதற்கு விக்ரம் ஒரு எடுத்துக்காட்டு.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் நடித்திருக்கும் படம் ராவணன். தன்னைக் கடத்தி வைத்திருக்கும் விக்ரமிடம் இறுகிய முகத்துடன் சண்டை போடும் காட்சிகளிலும், விக்ரம் பக்க நியாயங்களை உணர்ந்து சற்று இறுக்கம் தளரும் போதும், குட்டி குட்டி முக பாவங்களில் அசத்துகிறார் ஐஸ்வர்யா ராய். வெறும் பொம்மை போல் வந்து போகாமல், கதாநாயகனுக்கு(கதை படி எதிர்மறை கதாபாத்திரம்) இணையாக உயிரைக் கொடுத்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால், அவர் முகத்தில் அவரது வயது தெரிகிறது. கணவன் பிருத்விராஜுடன் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளில் பழைய தில்லி தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்களை நினைவுப் படுத்துவது போல, வயதை மறைக்க பகட்டான ஒப்பனையில் வந்து பயமுறுத்துகிறார் ஐஸ்வர்யா ராய்.
தேடுதல் வேட்டையில் பிருத்விராஜுக்கு உதவும் காட்டு இலாகா ஊழியர் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்துள்ளார். ஸ்ரீ ராமனுக்கு ஆஞ்சநேயர் உதவுவதை நினைவுப் படுத்தும் கதாபாத்திரம். மரத்தில் ஏறுவது, தலைகீழாக தொங்குவது என குரங்கு சேட்டை செய்து, திரைக்கதையில் தொய்வு ஏற்படும் நேரங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார் கார்த்திக். ஆனால், அவர் புத்திசாலி தனமாக ஏதோ செய்யப் போகிறார் என நினைத்தால்..ம்ச்..ஹூம்..ஹூம்.. கார்த்திக் கதாபாத்திரத்தில் இன்னும் ஆழத்தை கூட்டியிருக்கலாம்.
காட்டில் தர்பார் செய்யும் விக்ரமின் அண்ணனாக பிரபு. அவருக்கும் சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய கதாபாத்திரம் இல்லை. கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார் பிரபு.
நக்சலைட்டு கும்பலில் இருக்கும் நபராக ரஞ்சிதா நடித்துள்ளார். படத்தில் அவருக்கு உருப்படியாக வசனம் கூட இல்லை. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அவர் தலை காட்டும் காட்சிகளில் விசில் தூள் பறக்கிறது. இவ்வளவு சினிமா நடித்து கிடைக்காத புகழ் சன் டி.வி. மூலம் அவருக்கு கிடைத்து விட்டது! சன் டி.வி.க்கு அவர் நன்றிதான் சொல்ல வேண்டும்!!
பின்னோட்ட பகுதியில் (Flashback) ஒரு சில காட்சிகளிலே வந்தாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் பிரியாமணி. அவர் வரும் பகுதி படத்துக்கு மிக முக்கியமாக இருப்பதால், அதைப் பற்றி எழுத நாங்கள் விரும்பவில்லை.
ராவணன் படத்தில் கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று சுகாசினியின் வசனங்கள். “சோறும், தண்ணிக்காகவும்தான் இவ்வளவு வருஷமா போராடிக்கிட்டு இருக்கோம். அதை, வேண்டாம்னு சொல்றியே.” என்று பிரபு பேசும் ஒரு வசனம், நம் நாட்டில் பிறந்து நம்மைப் போன்ற உணர்வுகளை உடைய சகோதரர்களை, நாம் புறக்கணித்து விட்டோமோ என்று எண்ண வைக்கிறது. சபாஷ் சுகாசினி!!
ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடல்களுக்கும் இனிமையாக இசையமைத்துள்ளார் ரகுமான். காட்டு சிறுக்கி பாடல் மனதை பிசைகிறது. உசுரே போகுதே பாடல் இளைஞர்களின் தற்போதைய தேசிய கீதம்.
’பாட்டு பாட நேரமாச்சு’ என சொல்லி, திடும் என வேறு உடைகளை அணிந்து, வேற்று தேசத்தின் தெருவில் கை கால் அசைத்து நடனம் ஆடும் அபத்தம் இந்தப் படத்தில் இல்லை. அநேகமான பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது ரசனை.
ராவணனின் மிகப் பெரிய கூட்டல் குறி (Plus Point..தமிழ் செம்மொழி மாநாடு வருதுல்ல..!!) சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. காட்டின் பயங்கரத்தையும், பேய் போல ஓ..வென கொட்டும் அருவி கொடுக்கும் பயம் கலந்த பிரம்மாண்டத்தையும், திகு..திகு..பள்ளத்தாக்குகளையும் அவரது படக் கருவி (கேமரா!?!) அருமையாக பதிவு செய்துள்ளது.
படம் முடியும் போது திரையரங்கில் எல்லோரும் கை தட்டுகின்றனர். மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கு இதை விட வேறு என்ன விருது வேண்டும்.
சிங்கம்,புலி என சர்க்கஸ் மிருகங்களின் ஆதிக்கத்தில் தமிழ் சினிமா தத்தளித்து வரும் இந்த சமயத்தில், ராவணன் அட போட வைக்கிறான்.
மணியோசை கணிப்பு: 55/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




Nice film