அதிக எதிர்பார்ப்புகளோடு வெளிவந்திருக்கும் படம் ‘ரெட்டச்சுழி'. ஷங்கர் தயாரிக்க, இயக்குனர் இமயமும், இயக்குனர் சிகரமும் இணைந்து நடித்தால் எதிர்பார்ப்புக்கு கேட்க வேண்டுமா என்ன?
திருநெல்வேலி பக்க கிராமம். பாலசந்தர், காங்கிரஸ் அனுதாபி. பாரதிராஜா, கம்யூனிஸட் அனுதாபி. இவர்கள் இரண்டு பேருக்குள்ளும் 40 ஆண்டு கால பகை. அவர்களின் பகை, குடும்ப பகையாக, தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இதற்கிடையே, பாலசந்தர் குடும்ப பையனும், பாரதிராஜா வீட்டு பெண்ணும் காதலிக்கிறார்கள். காதலர்களை சேர்த்து வைக்கும் நோக்கத்தோடு குடும்பத்தின் கடைக்குட்டி குழந்தைகள் களம் இறங்குகிறார்கள். பின்னர், என்ன ஆனது என்பதே ரெட்டச்சுழி கிளைமேக்ஸ்.
ஏற்கனவே பழக்கப் பட்டு போன கதையாக இருப்பதால், ரெட்டச்சுழி படத்தின் திரைக்கதையிலும், அறிமுக இயக்குனர் தாமிராவால் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்த முடியவில்லை. இது சீரியஸான படமா அல்லது காமெடி படமா என்பதில் இயக்குனருக்கே படம் நெடுக குழப்பம் இருப்பது தெளிவாக தெரிகிறது. பாரதிராஜா, பாலசந்தர் பகையை விளக்க ஃப்ளாஷ்பேக் வேறு. ஆழமாக இருக்க வேண்டிய காட்சிகள் கூட சொதப்பலாக இருப்பது படத்திற்கு பெரிய மைனஸ்.
பாலசந்தர், பாரதிராஜா இருவர் நடிப்பிலும் அனுபவம் தெரிகிறது. இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். (பாலசந்தரின் மீசைதான் உப்புசம்). ஆனால், இவர்களை எந்த அளவு முடியுமோ, அந்த அளவு வீணடித்துள்ளார் இயக்குனர்.
கூத்துப் பட்டறை மாணவரான புதுமுக ஹீரோ ஆரிக்கு சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய ரோல் இல்லை. ஹீரோவுக்கே ரோல் இல்லை என்றால் ஹீரோயினுக்கு கேட்கவா வேண்டும்?
குழந்தைகள் வயது மீறி பேசும் வசனங்கள் சுத்த போர். 'பசங்க' , ‘அஞ்சலி' ஆகிய படங்களின் சாயல் லேசாக வருகிறது.
போலிஸாக வருகிறார் கருணாஸ். படம் நெடுக காமெடியாக இருப்பதால், காமெடிக்கென தனியாக இவர் தேவை படவில்லை.
செழியனின் ஒளிப்பதவு ஒரு ஆறுதல் பரிசு. கார்த்திக் ராஜாவின் பாடல்கள் அவ்வளவாக கவரவில்லை.
ரெட்டச்சுழி - விரைவில் டிவியில் எதிர்பார்க்கலாம்.
மணியோசை கணிப்பு: 39/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



