களவாணி படத்தில் சிரிக்க மட்டும் வைத்த இயக்குனர் சற்குணம் 'வாகை சூட வா' படத்தில் நகைச்சுவையுடன் நிறுத்திக் கொள்ளாமல் மிக ஆழமான கருத்தையும் நேர்த்தியுடன் கையாண்டுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல ரசனைக்கு தீனி அளித்துள்ள இந்தப் படத்தின் இயக்குனர், சற்குணத்தையும் படக் குழுவினரையும் உளமார பாராட்டுகிறோம்.
1966ம் ஆண்டில் கதை நடக்கிறது. பியூசி படித்து முடித்து ஆசிரியர் பயிற்சியும் முடித்த விமல், பத்திரபதிவாளரான தந்தை பாக்யராஜின் விருப்பத்திற்கிணங்கி அரசாங்க வேலைக்கு முயல்கிறார். குக்கிராமம் ஒன்றில் ஆறு மாதக் காலம் ஆசிரியராக வேலை பார்த்தால் சான்றிதழ் ஒன்று கிடைக்கும், அதனை வைத்து அரசு உத்தியோகம் பெறலாம் என்பதால் புதுக்கோட்டையில் இருந்து கண்டெடுத்தான்காடு செல்கிறார்.
செங்கல் சூளைகளை மட்டும் நம்பி பிழைக்கும் மக்கள் வாழும், வரண்ட பூமியான கண்டெடுத்தான்காட்டில் விதவிதமான கதாபாத்திரங்களை விமல் எதிர்கொள்கிறார். செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்களை படிக்க வைக்க படாத பாடு படுகிறார். செங்கல் சூளை முதலாளி பொன்வண்ணன், படிப்பறிவில்லாத தொழிலாளிகளை ஏமாற்றுகிறார் என்பதனை உணர்த்துகிறார் விமல்.
அதன் பின், தன் குழந்தைகளை விமலிடம் பாடம் பயில தொழிலாளிகள் அனுப்புகின்றனர். கல்வியின் அருமை அறிந்து குழந்தைகள் பாடம் கற்க வருவதற்குள், கிராம சேவை புரிய வேண்டிய கட்டாய காலமான 6 மாதங்கள் உருண்டோடி விடுகின்றன.
இதற்கிடையே, தேநீர் கடை நடத்தும் இனியா விமலை ஒரு தலையாக காதலிக்கிறார்.
6 மாதக் காலத்திற்கு பின் எதிர்பார்த்த படியே விமலுக்கு அரசாங்க வேலை கிடைத்து விடுகிறது. தன் தந்தை பாக்யராஜ் விருப்பத்திற்காக அரசு வேலைக்கு செல்கிறாரா, அல்லது ஏழைகளுக்கு கல்வி புகட்ட கண்டெடுத்தான்காட்டிலேயே தங்கி விடுகிறாரா; ஒரு தலையாய் தன்னை காதலிக்கும் பெண்ணை கரம் பிடிக்கிறாரா என்ற கேள்விகளுக்கு உச்சக்கட்டக் காட்சிகள் விடை சொல்கின்றன.
கலைப் படம் போன்ற இந்தக் கதையை கலையம்சத்தையும் விட்டுக்கொடுக்காமல், உயர்தர பொழுதுபோக்கிற்கும் குறைவில்லாமல் எடுத்துள்ளார் சற்குணம்.
அறுபதுகளின், படித்த இளைஞர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் விமல். கதாநாயகியின் தந்தை கேட்கும் அச்சுபிச்சு கணக்குகளுக்கு விடை தெரியாமல் முழிப்பது, 'வாத்தி விவரம் தெரியாதவர்' என்று ஊர் மக்கள் வெள்ளந்தியாக பேசிக் கொள்ளும் போது தன்னை விட்டுக்கொடுக்காமல் சமாளிப்பது, தேநீர் கடை நடத்தும் கதாநாயகியிடம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்து விட்டு ஏமாறுவது, கதாநாயகியின் காதலை உணராமல் இருப்பது என படம் நெடுக ஆதிக்கம் செலுத்தியுள்ளார் விமல். மேற்கூறப்பட்ட கதைக்கு ஆக்கிரோஷமான பஞ்ச் வசனங்களோ, அதிரடி சாகசங்களோ தேவை. ஆனால், விமலுக்கு ஒரு காட்சியில் கூட ஹீரோயிசம் இல்லை. செங்கல் சூளை முதலாளியின் அடியாட்கள் அடி பின்னும் போது கூட திருப்பி அடிப்பது போன்ற காட்சி இல்லை. ஏன் சாதாரண ஆட்டை பார்த்து கூட தலை தெரிக்க ஓடுகிறார் விமல்! கதாநாயகன் கதாபாத்திரத்தை இத்தனை யதார்த்தமாக படைத்ததற்கு இயக்குனருக்கும், அதை ஏற்று நடித்ததற்கு விமலுக்கும் ஒரு பெரிய கைகுலுக்கல்.
கதாநாயகி இனியா. அலட்டல் இல்லாத கிராமத்து அழகு. இவர் நடிப்பிலும் கொஞ்சம் கூட சினிமா தனம் இல்லை. விமலை ஒரு தலையாக காதலித்து, அவருக்கு சீர் கொடுக்க தேநீர் விலை நாலு காசுகளாக ஏற்றுவது, விமல் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள, 'எனக்கு கண்ணாளம்..' என அவரிடம் கூறி அவர் ரியாக்ஷனை பார்த்து அகம் மகிழ்வது, 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை விமலின் ரேடியோவில் கேட்க நாள் முழுவதும் தவம் இருப்பது என இனியா, தித்திக்கிறார்.
'முந்தானை முடிச்சு' படத்தை லேசாக ஞாபகம் படுத்துவது போல ஆசிரியரை கலாய்க்கும் குழந்தைகள் படத்திற்கு கூடுதல் இதம்.
அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. குறிப்பாக 'சாரைப் பாம்பு' பாடலின் வரிகளும், இசையும் சிறப்பு. பின்னணி இசையும் பிரமாதம். ஜிப்ரானுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. பாடல்கள் படமாக்கப் பட்ட விதமும் அவ்வளவு அழகு!
கலை இயக்குனர் சீனுவுக்கும் 'வாகை சூட வா' முதல் படம். அறுபதுகளில் அதிக புழக்கத்தில் இருந்த ஆழிலை கிருஷ்ணர் படம் போட்ட கோகுல் சாண்டால் பவுடர் டப்பா, ரேடியோ, ஸ்டீல் டார்ச் என ஒவ்வொரு அங்குலத்திலும் அவரது உழைப்பு தெரிகிறது.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு சற்குணத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளது. கண்டெடுத்தான்காட்டின் வரட்சியையும், வரட்சியிலும் இரவின் குளிர்ச்சியையும் ஓம்பிரகாஷின் கேமரா நேர்த்தியாக படம் பிடித்துள்ளது.
மொத்தத்தில், சொல்ல வந்த கதையில் இம்மிபிசகாமல், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி வாகை சூட வா படத்தை படைத்துள்ளார் சற்குணம். இதே போன்ற தரமான படங்களை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம் சற்குணம்.
மணியோசை கணிப்பு: 75/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



