சினிமா பார்க்கும் பழக்கம் இருக்கும் பலரும் படம் ஆரம்பிக்கும் முன்பு டைட்டில் முடியும் சமயத்தில் கடைசியில் கொட்டை எழுத்தில் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்... எனப் போட்டு இயக்குனரின் பெயர் போடுவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் நிறையப் பேருக்கு கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை.
அதனால் ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்றும் உணர்வதில்லை. ஒட்டுமொத்தமாக படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று கூறினாலும் அது எதனால் நன்றாக இல்லை என்று கனக்கச்சிதமாக கூறத் தெரியாது. ‘என்னவோ வருதுங்க....ஹீரோ வர்றான்.... போறான்... ஹீரோயின் வர்றா... ரொம்ப போரா இருக்குதுங்க...’ என்று சரியானக் காரணத்தை சொல்லத் தெரியாமல் இழுப்பார்கள். ஒரு படத்திற்கு நல்ல கதையிருந்தாலும் அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்லவில்லை என்றால் இப்படித்தான் ஆகும்.
அதே போல், பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாமல் இருந்தாலும், கதை ஓரளவு இருந்து, திரைக்கதை கச்சிதமானதாக இருந்தால் படம் ஹிட். சினிமா ஓடுவதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை. கதை, திரைக்கதை சீராக இருந்தால் போதும். டி.ஆர். நடித்து, இயக்கிய படங்கள், பாக்யராஜ் நடித்து, இயக்கிய படங்கள், விசு நடித்து, இயக்கிய படங்கள் இவைகளெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதற்கு திரைக்கதை பலமே காரணம்.
கதை என்பது வார்த்தைகளால் ஆனது. திரைக்கதை என்பது காட்சிகளால் ஆனது. நாம் ஒரு கதையை மற்றவர்களுக்கு சொல்லும்போதோ, எழுதும்போதோ வார்த்தைகளால் சொல்லிவிடலாம். ஆனால் அதை நடிகர், நடிகைகளை வைத்து கேமராவினால் படம் பிடித்து சுவையானப் பொழுதுப்போக்காக சொல்லவேண்டும் என்றால் வார்த்தைகளால் முடியாது. காட்சிகளால்தான் முடியும்.
கதை, திரைக்கதைக்கு உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.
ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாளாம். அவ தினமும் ஒரு மரத்தடில உக்காந்து வடை சுட்டு வித்திட்டு இருப்பாளாம். அப்ப ஒரு நாள் அந்த மரத்து மேல ஒரு காக்கா உக்காந்துக்கிட்டு ரொம்ப பசியோட அந்த வடையையேப் பாத்துட்டு இருந்துச்சு. அந்த பாட்டி லேசா அசந்த சமயமாப் பாத்து ஒரு வடைய கவ்விக்கிட்டு போய்டுச்சு....
இது எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்களது தாய் கூறும் முதல் கதை. குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டும்போது இப்படி ‘வந்துச்சாம்... போச்சாம்...’ என்று வார்த்தைகளால் புரிய வைக்கமுடியும். ஆனால் இதேக் கதையை அக்குழந்தை ஒரு சினிமாவாக (visual) பார்க்க வேண்டுமென்றால் அதற்கு காட்சிகள் தேவை. ‘ஒரு ஊர்ல...’ என்பதற்கு நாம் ஒரு ஊரைக் காட்டவேண்டும். ஏதேனும் ஒரு ஊர், அங்கே சில வீடுகள், கடைகள், கோயில்... எனப் பலவற்றையும் காட்டி அந்த ஊரில்தான் கதை நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள் மனதில் பதிய செய்ய வேண்டும். அடுத்து அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்து வடைச் சுட்டுக் கொண்டிருக்கும் கிழவியைக் காட்டினால் கதை அந்த ஊரில் இருக்கும் அந்த கிழவியைப் பற்றியது எனப் புரியும். அதாவது முதலில் கதை எங்கே நடக்கிறது என்பதைக் காட்டிவிட்டு அடுத்து கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தவேண்டும்.
மரத்தடியில் அமர்ந்து வடைச் சுட்டுக் கொண்டிருக்கும் கிழவி, அவளைச் சுற்றி நான்கைந்து பேர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி அதைத் தொடர்ந்து அடுத்ததாக கதையின் ஹீரோ நம் காக்கையாரை அறிமுகப்படுத்த வேண்டும். மரத்தின் மீது அமர்ந்திருக்கும் காக்கா வெகுநேரமாக வடையை முறைத்து, முறைத்து பார்த்துக் கொண்டிருப்பதை காக்கையையும், வடையையும் மாற்றி மாற்றிக் காட்டினாலேயே மக்களுக்கு காக்காவின் நோக்கம் புரிந்துவிடும். அடுத்து பாட்டி தண்ணீர் குடிக்க எழுந்து உள்ளே செல்கிறாள் என்பது ஒரு காட்சி. அதை கவனித்த காக்கா பறந்து வந்து வடையை கவ்வி செல்கிறது என்று ஒரு காட்சி என ஒவ்வொன்றையும் நாம் காட்சிகளாய் காட்டி விவரிக்க வேண்டும்.
மற்றொரு உதாரணம், 'அவள் ஒரு பணக்காரி' என எழுதி விடலாம். 'பணக்காரி' என்ற வார்த்தையை அடி கோடு இடுவது மாதிரி காட்சி ஆக்க வேண்டியது, சினிமா இயக்குனரின் பொறுப்பு. ஒரு கதாபாத்திரம், பணக்காரி என்பதை காட்சி படுத்த வேண்டுமானால், ஒரு ஆடம்பரக் கார் வந்து நிற்பது போலவும், நின்றவுடன், டிரைவர் அவசரமாக கீழிறங்கி கார் கதவு திறப்பது போலவும், காரில் இருந்து, ஜிகு ஜிகு என மின்னும் ஆடைகள், ஆபரணங்களுடன் ஒருவர் இறங்குவது போலவும் காண்பிக்கலாம். இந்தக் காட்சிகளைப் பார்த்தாலே, அந்தக் கதாபாத்திரம் எத்தகையது என்பது விளங்கி விடும்.
இப்படி visual ஆக படைக்கும்போது கதைக்கு வசனங்களேத் தேவையில்லை. எழுதியும் காட்ட வேண்டாம். இந்த காட்சிகளைப் பார்த்தாலே கதைப் புரிந்துவிடும்.
சரி... எல்லாப் படங்களும் இப்படி காட்சி காட்சியாய்தானே வருகிறது? பின்னர் ஏன் படம் ஓடமாட்டேங்கிறது? இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை டிவியில் வரும்’சூப்பர் சீன்ஸ்’ நிகழ்ச்சியைப் போல காட்சித் தோரணங்களாய் எடுக்க முடியாது. அந்த காட்சிகளை சுவையாகவும், அலுப்புத் தட்டாமலும் வரிசைப் படுத்தவேண்டும். திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்கு ஒரு அடிப்படை ஃபார்முலா இருக்கிறது. அது அடுத்த பகுதியில்...
மணியோசை சிபாரிசு: திரைக்கதைக்காக பேசப்பட்ட தமிழ் சினிமாக்கள் சில: அந்த நாள், விருமாண்டி,12B, 1..2..3..
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




:grin