சினிமாவை மிக ரசித்துப் பார்த்து அதிலேயே லயித்துப் போய்விட்டதால் உங்களை சந்திக்க சற்று தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும். சினிமாவின் plot point பற்றி சென்றப் பகுதியில் பேசினோம். ஒவ்வொருப் படத்திலுமே இவ்வகையில் 50வது நிமிடத்தில்தான் படத்தின் முக்கியமானத் திருப்புமுனையை காட்சி இடம்பெற வேண்டும் என அவசியம் இல்லை. கதையின் அவசியத்திற்க்கு ஏற்றவாறு அது முன்பே கூட இடம்பெறலாம். ஆனால் 50 நிமிடம் ஆகியும் கதையின் போக்கை மக்களுக்கு உணர்த்தவில்லையென்றால் தியேட்டரின் டிஜிட்டல் சவுண்டு சத்தத்தை விட மக்களின் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்.
இந்த ஃபார்முலாவிலிருந்து விலகி நிற்கும் சில படங்கள் என தற்போது வெளிவந்திருக்கும் பயணம் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இதில் படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடத்திலேயே விமானம் கடத்தப்படுகிறது. படத்தின் plot point அதுதான். அந்தப் படத்தில் முதல் 45 நிமிடம் வளவளவென பில்ட் அப் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதனால் ஜெட் வேகத்திலேயே விமானத்தை கடத்திவிடுகின்றனர்.
பயணிகளின் குணநலன்கள் பெரிய அளவில் கதைக்கு தேவைப்படவில்லை. இருப்பினும் படத்தின் சுவைக்கும் நகைச்சுவைக்கும் இந்த கதாப்பாத்திரங்களே உதவுவதால் விமானம் கடத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதுப் போன்ற சில காட்சிகளில் அவர்களின் கேரக்டர் புரிகிறது.
ரோஜா திரைப்படம். அது மிகச் சிறந்த வெற்றிப்படம். அதை ரசித்துப் பார்க்காதவர்களே யாரும் இருக்க முடியாது. அந்த படத்தின் திரைக்கதையை கவனித்தீர்களானால் அதில் மக்களை படத்தோடு ஒன்ற வைக்கும் ஒரு யுக்தி இருக்கும். கிராமத்தில் இருக்கும் ஒரு குறும்புக்காரப் பெண் ரோஜா. அவளது சகோதரியை பெண் பார்க்க வரும் ரிஷி அவள் தனது மாமன் மகனை விரும்புவதை அறிந்து அவளுக்கு பதில் அவள் தங்கை ரோஜாவை மணக்க விரும்புவதாகக் கூறுகிறான். ஒருவழியாக பெரியோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறுகிறது. அக்காவை வேண்டாம் என சொல்லிவிட்டதால் அவள் மனம் என்னப் பாடுப்படும் என வருந்தும் ரோஜா கணவனை வெறுக்கிறாள். பின்னர் உண்மை தெரிந்து அவனை ஏற்கிறாள். இந்நிலையில் அலுவலக விஷயமாக ரிஷி காஷ்மீர் செல்ல நேரிடுகிறது. புதுமணத் தம்பதி என்பதால் ரோஜாவும் உடன் செல்கிறாள்.... அதற்குள் மூன்று பாடல்கள் என கதை நீளுகிறது. இந்த காட்சிகள் சுவாரசியமாகவே இருந்தாலும் முதன்முதலில் திரையில் பார்ப்பவர்களுக்கு இது எதைப் பற்றிய படமாக இருக்கும். இவர்களது திருமண வாழ்வில் மீண்டும் ஏதேனும் பிரச்சினை வருமோ? ரிஷி ரோஜாவை ஏமாற்றி விடுவானோ எனப் பார்ப்பவர்கள் பல்வேறு யூகங்களுடன் குழம்பியவாறேப் பார்க்க நேரிடும். ரிஷி கடத்தப்படும்போது இடைவேளையே வந்துவிடும்.
அதைத் தவிர்ப்பதற்காக படம் ஆரம்பிக்கும்போதே பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம் கான் இந்திய ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படும் காட்சி இடம்பெறுகிறது. பின்னர் ரிஷி கடத்தப்படுவது வரை அதைப் பற்றிய காட்சிகள் எங்கேயும் இடம்பெறாது. ஆனால் முதலிலேயே இக்காட்சி வந்துவிடுவதால் படம் பார்ப்பவர்கள், ‘ இந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டதால் இந்த தம்பதிகளுக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது’ என தயாராக எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் அந்த தீவிரவாதியைப் பற்றியே எதுவும் பேசாமல் நாயகன், நாயகியின் திருமணத்தைப் பற்றி மட்டும் சொல்லும்போது நமக்கு ஒரு சுவாரஸ்யம் ஏற்படுவதோடு ரோஜாவின் பிடிவாதம், போராட்ட குணம், தைரியம் போன்ற குணநலன்களும் புரிகிறது. அது பின்னாளில் அவள் தன் கணவனை மீட்பதற்காக தீவிரவாதிகளோடு தைரியமாக போராடும்போது வலு சேர்க்கிறது.
இவ்வகையில் கதைக்கு தேவையானப்படி வியூகம் அமைத்து திரைக்கதையை செதுக்குகிறார்கள். அதில் அதிக கவனம் செலுத்தி நிதானமாக அமைக்கப்படும் திரைக்கதைக் கொண்ட படங்கள் வெற்றிப் பெறுகின்றன. இதில் எந்த வகையிலும் சேராமல் கதை திரைக்கதை எதற்கும் முக்கியத்துவம் தராமல் எடுக்கப்படும் படங்களும் சில சமயம் வெற்றிப்பெறுவதுண்டு. அதற்கு உதாரணம் ’தமிழ்படம்.’ காரணம் அது வழக்கமானப் படமல்ல என்பது படம் ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலேயே புரிந்து விடுகிறது. பிறந்த குழந்தை தனது பாட்டியிடம் தன்னை சென்னைக்கு அனுப்புமாறு பேசும்பொழுதே இது ஏதோ ஒரு புது விதமானப் படம் என தெளிவாகிறது. ஒருவகையில் அதுகூட படத்தின் plot point எனலாம். வித்தியாசமான படம் இதில் லாஜிக்கெல்லாம் எதிர்ப்பார்க்க கூடாது என புரிய வைக்கிறதே!
எது எப்படியிருந்தாலும் படம் ஆரம்பித்து அதிகபட்சமாக 50 நிமிடங்களுக்குள் மக்களை படத்தோடு ஒன்ற செய்யவேண்டும். அதனால் படத்திற்கு plot point மிக முக்கியமாக விளங்குகிறது. அடுத்து படத்தின் முக்கியப் பகுதி Interval block. எப்படி என்பதை அடுத்தப் பகுதியில் விரைவில் பார்ப்போம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev |
|---|



