
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின், சாதாரணமான முஸ்லிம்களைக் கூட தீவிரவாதிகளாகப் பார்க்கும் அமெரிகர்களின் மனப்போக்கை யதார்த்தமாக சித்தரிக்கும் படம் தான் ‘மை நேம் இஸ் கான்’ ஆஸ்பர்கெர் சிண்ட்ரோம் என்ற மன நோயால் பாதிக்கப் பட்டவர் ரிஷ்வான் கான் (ஷாருக்கான்) அவருக்கு கூட்டத்தை பார்த்தால் அலர்ஜி, மஞ்சள் கலரை பார்த்தால் பிடிக்காது, அவருக்கு மந்திரா (கஜோல்) என்ற விவாகரத்து ஆகி குழந்தை இருக்கும் இந்து பெண்ணுடன் காதல் மலர்கிறது, இருவருக்கும் திருமணம் ஆகிறது. கஜோலுக்கும், அவர் மகனுக்கும், தங்கள் பெயருக்கு பின்னால்,’கான்’ என்ற பெயர் ஒட்டிக்கொள்கிறது. இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவம் நடந்த பின் அமெரிக்காவில் இஸ்லாமியர்களை குறி வைத்து சிலர் வேட்டையாடுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் நடக்கும் தகராறில், கஜோலின் மகன்,’கான்’ என்ற பெயர் இருப்பாதல், கொல்லப்படுகிறான். முஸ்லிம் ஆன உன்னைத் திருமணம் செய்துக்கொண்டதால்தான், நான் என் மகனை இழந்தேன். என ஷாருக்கானிடம் சீரியஸாக கோபித்துக் கொள்கிறார் கஜோல்.
’என் பெயர் கான், ஆனால், நான் தீவிரவாதி அல்ல’. என அமெரிக்க அதிபரிடம் சொல்ல வேண்டும் என எண்ணி தன் பயணத்தை தொடங்குகிறார் ஷாருக்கான், இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் அனுபவங்களே கதை,
‘ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் ரிஷ்வான்கான் ஆக கன கச்சிதமாக நடித்துள்ளார் ஷாருக்கான். எப்பொழுதும் எதையோ தேடுவதைப் போல தலையை குனிந்துக் கொண்டு, பென்குவின் போல தத்திதத்தி நடந்துக் கொண்டு, தன் வித்தியாசமான மேனரிஸங்கலால் நம்மை கவர்கிறார் ஷாருக்கான், ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்துக் கொண்டு,அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் எடுக்கும் Risk-களை பார்க்கும் போது, அசட்டு தனமான படங்களில் நடித்து வரும் பல தமிழ் நடிகர்களை நினைத்து ஏக்க பெருமூச்சு விடத் தோன்றுகிறது.
கஜோல்,ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்,ஆனால்,ஷாருக்கான் என்ற சுனாமி முன்பு அவர் நடிப்பு எடுபடவில்லை.
இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் கரண் ஜோகர். வளவள என இல்லாமல் நறுக்கென இவர் எழுதியிருக்கும் வசனங்களுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். ’உலகில் இரண்டே இரண்டு ஜாதிதான் உண்டு, ஒன்று நல்லவர், மற்றொன்று, கெட்டவர்..’ என்று சின்ன வயசு ஷாருக்கானிடம் அவர் தாய் சொல்லும் வசனம் ஜோர். சின்ன வயசு ஷாருக்கானாக நடித்திருக்கும் குட்டிப் பையனும் நம்மை ஈர்க்கிறான்.
ஜார்ஜியா நகரில் கறுப்பின மக்களுடன் ஷாருக்கான் தங்கும் காட்சிகள் ஹைக்கூ, பின்னர், ஜார்ஜியா நகரில் புயல் தாக்கியதை அறிந்ததும், உயிரை பணயம் வைத்து அவர்களைக் காப்பாற்ற ஷாருக் செல்லும் காட்சி நெகிழ்ச்சி.
அமெரிக்க அதிபரை சந்திக்க கூட்டத்தில் நின்றிருக்கும் ஷாருக்கான் முயல்வதும், 'PRESIDENT SIR, MY NAME IS KHAN.BUT IAM NOT A TERRORIST' என அவர் கத்துவதை அரைகுறையாக காதில் போட்டுக் கொண்டு அல்குவைதா தீவிரவாதி என கருதி கைது செய்யப்படுவதும், செய்தி சேனல் ஆட்கள் அவரை மீட்பதும், அமெரிக்க அதிபர் அவரை சந்திப்பதும் கொஞ்சம் சினிமாத்தனம்.
அமெரிக்கா என்றாலே உயர்ந்த கட்டிடங்கள், விஸ்தாரமான ரோடுகள் என்று பல சினிமாக்கள் பதிவு செய்திருந்த பிம்பத்தை உடைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன், அவரின் ஒளிப்பதிவு, ஒரு புதிய அனுபவம். கதை அமெரிக்காவில் நடப்பதால், ஒரு வசனத்தை ஆங்கிலத்தில் பேசி விட்டு, பழைய கே.பி. பட ஸ்டைலில், உடனே இந்தியில் பேசி விடுகிறார்கள்.
இதனால், இந்தி அவ்வளவாக தெரியாதவர்கள் கூட இந்தப் படத்தை தைரியமாக பார்க்கலாம்.
இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல என்ற கருத்தை அரசியல் நெடி இல்லாமல், வன்முறை இல்லாமல், நயமாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருக்கும் ‘MY NAME IS KHAN ' நிச்சயம் கவனிக்கப் பட வேண்டிய ஒரு படைப்பு.
மணியோசை கணிப்பு ;48/100
Want to write for Maniyosai?
Download our android app




