இவ்வுலகில் மனிதனாய் பிறப்பெடுத்து வாழும் காலம் கொஞ்சம். சாதாரண மனிதனுக்கு, வாழும் போது கார்,பங்களா என சகல ஐஷ்வர்யங்களுடன் சந்தோஷமாய் இருக்க ஆசை. முற்றிலும் துறந்த ஞானிகளுக்கோ, பூலோக வாழ்க்கைக்குப் பின் முக்தி அடைய ஆசை. ஆக, இவர்கள் அனைவரும் நாடுவது இறைவனைதான். அப்படிப்பட்ட இறைவனின் பெயரை கூறிக்கொண்டு இன்று சிலர் அக்கிரமமான செயல்களை செய்து வயிறை வளர்த்து வருகின்றனர். ‘கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது.' என்பது கலைஞரின் பிரபலமான வசனம். இந்த வசனத்தின் நிதர்சனத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இன்றும் நடந்த வண்ணம் இருக்கின்றன.
உலகத்தில் உள்ள ஒரே இந்து நாடு நேபாளம். இது பண்டைய காலத்தில் (ராமாயண காலத்தில் இருந்து) பாரத தேசத்தின் அங்கமாக இருந்தது. சற்று நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் யாத்திரை சென்று திரும்பிய நமது சில வாசகர்கள், பேராசை பிடித்த டூர் ஆப்பரேட்டரின் அக்கிரமத்தால் தாங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப் பட்டார்கள் என்பதை குமுறலுடன் நமக்கு எழுதியுள்ளனர். அதன் தொகுப்பு இதோ...
140 பேர் கொண்ட ஒரு பெரிய குழுவாக நாங்கள் மே 8ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை நேபாள யாத்திரையை மேற்கொண்டோம்சென்னையிலிருந்து, சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கோராக்பூர் வரை போகும் வண்டி எண் 2512 ரப்த் சாகர் எக்ஸ்பிரஸில் பயணித்து மே 7ஆம் தேதி கோராக்பூரை (வழக்கமான தாமதத்துடன்) மாலை 5 மணியளவில் சென்றடைந்தோம். பிறகு,90 கிமி தொலைவில் உள்ள சோனாலி கேட் (Sonali Gate) என்னும் இடத்தை மூன்று மணி நேரம் பேருந்தில் பயணித்து சென்று அடைந்தோம். இங்குதான் இந்திய எல்லை முடிவடைந்து நேபாள எல்லை ஆரம்பிக்கிறது. 10 நாட்கள் யாத்திரை என்பதால் ஒவ்வொருவரும் கொஞ்சம் அதிக அளவில் தங்கள் உடைமைகளை எடுத்து செல்ல வேண்டி இருந்தது. இந்திய எல்லையில் அவற்றை சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி நேபாள எல்லைக்குள் கூடவே நடந்து சென்றடைந்தோம். இரவு நேரம், பாஷை வேறு அரைகுறை, கேட்கவா வேண்டும். ரிக்ஷா தள்ளுபவர் எங்களிடம் கணிசமாக கரந்து விட்டார். பயணக் கலைப்பில் அவரிடம் கேட்டதை கொடுத்து விட்டோம்.
எங்களது உடைமைகளை மறுபடியும் அங்கிருந்த பேருந்துகளில் ஏற்றி 5 கிமி தொலைவில் உள்ள பைரவா எனும் இடத்தை அடைந்தோம். பைரவாவில் எங்களது குழுவில் உள்ளவர்களது எண்ணிக்கை அதிகமானதால் டூர் ஆப்ரேட்டரால், ஒரே இடத்தில் அனைவரையும் தங்க வைக்க முடியவில்லை. ஒரு சில கிமி தூரங்களில் உள்ள வெவ்வேறு இடங்களில் எங்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இரவு 12 மணிக்கு இரவு உணவு உட்கொண்டோம். பிறகு எங்களது உடைமைகளை ஒரு மினி வேனில் ஏற்றி ஒரு கிமி தள்ளியிருந்த ஒரு லாட்ஜூக்கு எடுத்து சென்றோம்.
பெயரளவில்தான் அது லாட்ஜ். அது முழுவதும் கட்டி முடிக்க படாமல் இருந்தது. மின்சாரம் வேறு இல்லாததால் பார்க்க சற்று அமானுஷ்யமாக தோன்றியது. கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து எங்களுக்கு அறைகள் ஒதுக்கி தர ஊழியர்களும் யாருமில்லை. மின்சாரமும் இல்லை. (தமிழ்நாட்டை போலவே, நேபாளத்திலும் அடிக்கடி மின்சாரம் போய் விடுமாம்!) கொசுக் கடிகள் வேறு.ஜெனரேட்டர் இயக்கப் பட்டு மின்சாரம் வர அதிகாலை இரண்டரை மணி ஆகி விட்டது. அதிலும் என்ன கொடுமையென்றால், ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து விட்டதால் அதிகாலை 5 மணியளவில் அதுவும் நின்று விட்டது.
மே 8:
காலையில் மறுபடி எங்களது மூட்டை முடிச்சுகளை மினி வேனில் ஏற்றி பேருந்து நின்றிருந்த இடத்தை சென்றடைந்தோம். காலை உணவாக எண்ணையில் குளிப்பாட்டப்பட்ட போண்டா போன்ற ஒரு விசித்திர வஸ்து வழங்கப்பட்டது. அதுவும் சரியாக வேகவில்லை. போண்டாவைப் பார்த்து பயந்து நிறைய பேர் பிரெட், பிஸ்கட் என காசு கொடுத்து வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஊர் திரும்பும் வரை பிரெட்டையே சிலர் சாப்பிட்டதால், டூர் ஆப்பரேட்டரிடம், உணவுக்காக தண்டம் அழுதது போதாது என்று எக்ஸ்ட்ரா செலவு வேறு ஆனது. ஒரு வழியாக பேருந்துகள் காலை 9 மணிக்கு புறப்பட்டன. நாங்கள் அடைய வேண்டிய இலக்கான ஜனக்பூரி, பைரவாவில் இருந்து 300 கிமி தொலைவில் இருந்தது. ஜனக்பூரில்தான் சீதை பிறந்தாள். ஜனக்பூரிக்கு மிதிலாபுரி என்ற பெயரும் உள்ளது. சாலை படு மோசம். இருந்தாலும், இயற்கை காட்சிகள் ரம்மியமாக இருந்ததால் எங்களுக்கு களைப்பு தெரியவில்லை. இடையில், மதிய உணவு என்ற பெயரில் ஒரு உப்புசப்பு இல்லாத உணவு சாப்பிட நிறுத்தியதில் 2 மணி நேரம் விரயம் ஆனது. ஜனக்புரியிலும், வழக்கம் போல ஒரு இரண்டாம் தர லாட்ஜில் தங்க வைக்கப் பட்டோம். கொசுக் கடியும், மூட்டை பூச்சிக் கடியும் எங்களுக்கு பழகி விட்டிருந்தது.
மே 9:
காலையில், மிதிலாபுரியில் உள்ள சீதாபிராட்டியார் கோயிலையும், ராமபிரானுக்கான கோயிலையும் தரிசித்தோம். அத்துடன், ராமர் வளைத்து ஒடித்த சிவ தனுசின் ஒரு சிறு துண்டு அருகே உள்ள ஒரு குளத்தில் இருப்பதாக சொன்னார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி அந்த தனுசுக்கு பூஜைகள் செய்வதை இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும், தனுசு சிறிய அளவு வளர்ச்சி அடைந்து இருக்குமாம். அது பூரண வளர்ச்சி அடையும் போது கலியுகம் முடிந்து பிரளயம் ஏற்படும் என அங்கிருந்தோர் தெரிவித்தனர். சீதைக்கும் ராமனுக்கும் விவாகம் நடந்த இடத்தையும் கண்டோம். கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு பெரிய இடத்தில் சீதாபிராட்டியின் விவாக கால காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு மெய் சிலிர்த்தோம். இது தவிர சீதா கோயிலில் ஒரு இடத்தில் ஒன்றரை லட்சம் சாளக்கிராமங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன் பிறகு, பழகி கொண்ட வழக்கப் படி காலை உணவை உண்டு பேருந்தில் நீண்ட தூரம் பயணித்து நடு நிசியில் நேபாள் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவை அடைந்தோம். இங்கு ஒரு இடத்தில்தான் சற்று நல்ல தங்குமிடம் கிடைத்தது. லிப்ட் வசதியும் இருந்தது. மற்ற இடங்களில் லிப்ட் வசதியும் இல்லை. அறைகள் எல்லாம் முதல் மற்றும் இரண்டாம் மாடிகளில் இருந்தன.
மே 10:
காலையில் கண்டகி நதியில் கிடைக்கும் கூழாங்கற்களைப் போன்ற தன்மை கொண்ட இட்லியை கஷ்டப்பட்டு விண்டு, அதை உண்டு காத்மாண்டு தரிசனம் போக அனைவரும் தயாரானோம். அங்கு உள்ள ஜலநாராயணர் கோயிலுக்கு முதலில் சென்றோம். ஒரு தடாகம் போன்ற நீர்நிலையில் நாராயணன் கிடந்த திருக்கோலத்தில் இருக்கும் காட்சி எங்கள் அனைவரையும் பரவசப் படுத்தியது. அதன் பிறகு ஓரிரு புத்தர் கோவில்களும் சென்றோம். அங்குள்ள புத்த மத கோவில்கள் உருளை வடிவான அமைப்புடன் பல்வேறு அளாவுகளில் ஆன சக்கரம் போண்றவைகள் செங்குத்தாக பொறுத்தப் பட்டுள்ளன. அவற்றில் நேபாள மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் பெயர் ‘விருப்பச் சக்கரம்' (Wish Wheel என கூறுகின்றனர்). துஞ்சி பல நாட்கள் ஆகி நயமாக வஞ்சிக்கப்பட்டு அமைந்திட்ட எங்களது பயணம், எஞ்சியுள்ள இன்னும் சில நாட்கள் நன்கு நடந்திட வேண்டும் என்றும், மிஞ்சியுள்ள பணம் மற்றும் உடல் ஆரோக்கியுத்துடன் எங்களது கெஞ்சல்களுக்கு செவி மடுக்காத டூர் ஆப்பரேட்டர் ஆணவத்தனமான போக்கு மாற வேண்டும் என்று நினைத்து நானும் அந்த விஷ் வீலை எனது பலம் உள்ள வரை சுழற்றினேன். அதன் பிறகு, மாலையில், பசுபதி நகர் கோவிலுக்கு சென்றோம். அங்கு சிவ பெருமான் நான்கு பக்கங்களிலும் காட்சி அளிக்கிறார். மாலையில் மட்டுமே, நான்கு புறங்களிலும் உள்ள கதவுகள் திறக்கப்பட்டு ஒவ்வொருபுறத்திலும் தீபாராதனை செய்யப்படுகிறது. அது முடிந்து வெளிப்பிரகாரம் வழியாக வரும் போது வேறு ஒரு காட்சியினைக் கண்டோம். கோவில் மதிற்சுவர் ஒட்டி கீழே ஒரு புனித ஆறு சிறிதளவே நீரோட்டத்துடன் ஓடுகிறது. அதற்கு தீபாராதனைகள் செய்யப் படுகின்றன. அதற்கு நேரெதிரில், ஆற்றின் மறு கரையில், இறந்தவர் சிலரது சடலங்கள் தகனம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீபாராதனை தொடங்கியவுடன் உடல்களுக்கு சிதையூட்டப் பட்டு, பின்பு, அவைகள் சுமக்கப்பட்டு வேறொரு இடத்தில் முறையாக தகனம் செய்யப் படுகின்றன. சற்று எட்டிப் பார்த்தால், ஒரே நேரத்தில் 15 அல்லது 20 சடலங்கள் எரியும் காட்சி காணப்படுகின்றன. அப்போது, பட்டினத்தார் பாடிய உடற்கூறு வண்ணம் பாடலின் கடைசி வரிகள் ஞாபகத்துக்கு வந்தது. நேபாள நாட்டில் இதை ஒரு புனித சடங்காக செய்கின்றனர்.அங்குள்ள கடைகளில், சாளக்கிராமம், சங்கு போன்ற பூஜை பொருட்களும், முத்து, பவழம் போன்ற பொருட்களும் விற்கப்படுகின்றன. இவைகளுக்கு, கடைக்காரர்கள் யானை விலை சொல்கிறார்கள்.அது அவர்களாது சாமர்த்தியம். அதை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவது நம் சமர்த்து. பொருட்களின் தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. டூர் ஆப்ரேட்டர்களால் பரிந்துரைக்கப் படும் கடைகளில், ஆப்ரேட்டர்களுக்கு கணிசமான கமிஷன் உண்டாம். அதை ஈடு கட்டவே, யானை விலையாம்!
மே 11:
முந்தைய நாள், டூர் ஆப்ரேட்டர்கள் எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை போல! காலையில், மீண்டும் பசுபதி நகர் ஷாப்பிங். அதை முடித்துக் கொண்டு, நாள் முழுதும் பயணம் செய்து போக்ரா எனும் இடத்தை அடைந்தோம்.
மே 12:
காலையில், டூர் ஆப்பரேட்டரின் விருந்தோம்பலில் (!) திக்கித் திளைத்து ஒரு வழியாக தத்தளித்து வெளியில் வந்து போக்ரா விமான நிலையத்திற்கு கூட்டி (ஓட்டி) செல்லப்பட்டோம். அது சிறிய ரக விமானஞ்கள் சென்று வரும் அளவு குறுகலான ஓடுதளம் கொண்ட மினி விமான நிலையம். 20 இருக்கைகள் கொண்ட சிறுரக விமானத்தில் 20 நிமிடங்கள் பயணித்து ஜோம்சம் எனும் இடத்தை அடைந்தோம். ஜோம்சம் விமான நிலையத்தைவிட்டு வெளியேறி சிறிது தூரம் கால் நடையாக நடந்து சென்று கண்டகி நதிக்கு குறுக்கே அமைந்த பாலத்தைக் கடந்து நடந்து (1/2 கிமி), அங்கு, ஜீப் போன்றதொரு வண்டியில் ஏற்றப்பட்டு 18 கிமி தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்தோம். பின்பு மோட்டார் சைக்கிளில் சவாரி அடிக்கும் நேபாள வாலிபர்களின் பின் அமர்ந்து அவர்களது தொப்பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சர்க்கஸ் சாகசம் போல் 2 அல்லது 3 கிமி பயணித்து, மீண்டும், 3/4 கிமி நட்ந்து முக்திநாதர் கோயிலை அடைந்தோம். அங்கு 108 குழாய்கள் மூலம் விழும் தண்ணீரில் குளிரையும் பொருட்படுத்தாது குளித்தோம். அக்குழாய்களிலிருந்து 108 புண்ணிய நதிகளின் நீர் வருவதாக ஐதீகம். முக்திநாதர் தரிசனத்தை நன்கு முடித்துக் கொண்டோம். முக்தி நாதர் கோயிலில் ஆண் அர்ச்சகர்கள் கிடையாது. ஒரு பெண் அர்ச்சகி மட்டுமே. மூலவருக்கும் தாயாருக்கு நாமே தொட்டு அர்ச்சனை செய்யலாம். நிவேதனமும் அளிக்கலாம்! மறுபடி, ஜோம்சமை, முன்பு விவரித்த முறையிலேயே திரும்பி அடைந்தோம். அப்போது மணி மாலை 5 ஆகி விட்டது.
மே 13:
காலையில், மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஜோம்சம் விமான நிலையத்தை அடைந்தோம். நடக்கும் தூரம்தான். 2 முதல் 3 நிமிடங்கள் நடையே! விமான நிலையம் மிக அருகாமையில் விடுதி இருக்கும் இடம் அநேகமாக ஜோம்சமாகதான் இருக்கும். எங்களது மினி விமானத்தை பிடித்து மறுபடியும் போக்ராவை காலை 11.30 மணியளவில் வந்தடைந்தோம். அதற்கு அடுத்த நாள், அடுத்த பாட்ஜ் யாத்திரிகள் வரும் வரை காத்திருந்து, பிறகு, போக்ராவில் இருந்து கிளம்பி கஜேந்திர மோக்ஷம் ஸ்தலத்தை தரிசனம் செய்த பின்பு புத்தர் அவதரித்த ஸ்தலமான லும்பினியை கண்டோம். அன்று நள்ளிரவு கோராக்பூரை அடைந்தோம்.
இந்தப் புனித பயணத்தில், நாங்கள் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு சொல்ல விரும்பும் பாடம்:
# தேனொழுக பேசும் எந்த டூர் ஆப்பரேட்டரையும் நம்பி ஏமாறாதீர்கள்.
# அவர்கள் வாய் வழி தரும் எல்லா விபரங்களையும் எழுத்துபூர்வமாக வாங்கிக் கொள்ளுங்கள்.
# நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு முறையான ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்.
# சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதாம் தெருவில் இருந்து செயல்படும் ஒரு டூர் ஆப்ரேட்டர் பெண்மணியிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது.
இந்தக் கட்டுரையை எழுதும் எங்களுக்கோ, மணியோசை.காம் இணையதளத்திற்கோ, அந்தக் குறிப்பிட்ட டூர் ஆப்பரேட்டர் மீது தனிப்பட்ட முறையில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. பணத்தைக் கொடுத்து நாங்கள் மோசம் போனதை போல், எதிர்காலத்தில் பிறர் போகக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.
இப்படிக்கு,
நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்று வந்த ஒரு யாத்திரி.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




