இந்தியா எத்தனையோ பிரச்சினைகளைப் பார்த்திருக்கிறது. எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கிறது. எத்தனையோ விஷயங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறது. இப்போதைய லேட்டஸ்ட் பிரச்சினை ஸ்பெக்ட்ரம் முறைக்கேடுகள். இன்று எந்த தொலைக்காட்சியில் பார்த்தாலும், எந்த செய்திதாளைப் படித்தாலும் இதே விவாதம்தான்.
இந்த விவகாரம் எப்பொழுது ஆரம்பித்தது? தொலைத்தொடர்பு துறை பயன்பாட்டிற்கு சில அலைவரிசைகள் தேவை. அலைக்கற்றைகளை ஆங்கிலத்தில் ஸ்பெக்ட்ரம் என்கிறோம். ஸ்பெக்ட்ரம் தொலைக்காட்சி, எப்.எம் ரேடியோ, செல்போன் என பலதரப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்கும் தேவைப்படுகிறது. இந்த அலைக்கற்றைகளை தேவைப்படும் கம்பெனிகள் அரசிடமிருந்து பெறுகின்றன.
அலைவரிசை இருப்பு அளவாகவும் தேவை அதிகமாகவும் இருப்பதால் எது ஏல முறையில் வழங்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை தலைமுறைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் தலைமுறை (1G) எனவும், இரண்டாம் தலைமுறை (2G) எனவும், மூன்றாம் தலைமுறை (3G) எனவும் அழைக்கப்படுகிறது. வசதிகள் அதிகரிக்கும் போது அலைவரிசையும் அதிகம் தேவைப்படுகிறது. அதனால் தலைமுறைகள் அதிகரித்தால் ஏலத்தொகையும் எகிறுகிறது.
இதில் இரண்டாம் தலைமுறை (2G) க்கான ஏலத்தில்தான் முறைக்கேடு நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
* முதலில் வழக்கத்தில் இருக்கும் ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் 2Gக்கான உரிமம் விற்கப்பட்டுள்ளது.
* 2008ம் ஆண்டில் நடைப்பெற்ற இந்த வியாபாரத்தில் (ஏலம் நடைப்பெறாததால் வியாபாரம் எனவேக் குறிப்பிடலாம்) 2001ம் ஆண்டிற்கான விலையிலேயே 9 கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.7442 கோடியிலிருந்து ரூ 47912 கோடி வரை விலைப் போகக் கூடிய உரிமங்களை ரூ1651 கோடிக்கு விற்றுள்ளார்.
* உரிமம் வழங்கப்பட்ட 122 கம்பெனிகளில் 85 கம்பெனிகளுக்கு இந்த உரிமம் பெறுவதற்கான தகுதியே இல்லை.
* சில கம்பெனிகளுக்கு இரட்டை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு, நிதித்துறை அமைச்சகம், போன்றவை கூறிய அறிவுரைகளை புறக்கணித்தார்.
இவைதான் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள்.
தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: இவ்விவகாரத்தில் ஆ. ராசாவும் நீரா ராடியா என்ற பெண்மணியும் பேசிய டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டது ஒரு முக்கிய திருப்பமாக எழுந்தது. வெளிநாட்டில் வாழும் இந்தியரான நீரா ராடியா பல கம்பெனிகளின் கன்சல்டன்டாக இருப்பவர். இவர் 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் அலுவலகப் பணிக்காக இந்தியா வந்தார். நீரா ராடியாவும், ஆ. ராசாவும் 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து தொலைப்பேசியில் உரையாடியது ஒட்டுக் கேட்டு பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஆ. ராசா மிகக் குறைந்த விலையில் உரிமம் வழங்கிய 9 கம்பெனிகளில் 4 நீரா ராடியா சேவைப் புரியும் கம்பெனிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொலைப்பேசி ஒட்டுக் கேட்டல் விவகாரத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் வாதிட்டது தனிக்கதை.
ஆ. ராசா பதவியேற்று நான்கு மாதங்கள் கழித்து அவர்களது உறவினர்களால் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்ப்பிக்கப்பட்ட 'கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ்' கம்பெனி இன்று பல கோடிகளுக்கு அதிபதி. அதில் அவரது மனைவி பரமேஸ்வரியும் இரு இயக்குனராக இருந்தார். இதைப் பற்றி ராசா பிரதமரிடம் எதுவுமே குறிப்பிட்டதில்லை. இக்கம்பெனியின் இந்த அபார வளர்ச்சியும் இப்பிரச்சினையில் ஒரு கேள்விக்குறியாய் உறுத்துகிறது
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொலைப்பேசி ஒட்டுக் கேட்டல், இதை விசாரிக்கு சிபிஐ அதிகாரி இடமாற்றம் என இரண்டு ஆண்டுகளாக பரபரப்பாக இருந்தாலும், தற்போது காங்கிரஸ் அமைச்சர்கள் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்விவகாரம் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் ஒப்பிடும்போது சுரேஷ் கல்மாடி, அசோக் சவான் செய்த காமன்வெல்த் சுருட்டல், கார்கில் போர் வீரர்களுக்கான வீடு திட்டம் ஆகியவை சிறிய ஊழல்களே. அதற்கே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் போது இன்னும் ஏன் ராசா பதவியில் நீடிக்கிறார் என்பதுதான் எதிர்கட்சிகளின் கேள்வி.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|






