மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, இலங்கை இன்னும் எங்கெல்லாமோ நம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் ஓங்கி ஒலிக்கிறது. இப்படி உலகில் பெரும்பாலான இடங்களில் தமிழ் கலாச்சாரம் பரவியதில் ராஜராஜ சோழனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சோழர் வம்சத்தின் முக்கிய மன்னன் ராஜராஜ சோழன். இவன் பராந்தக சுந்தர சோழன் வானமாதேவியின் மூன்றாம் புத்திரன். கிபி947ல் பிறந்தான். அருள்மொழிவர்மன் என்பதே இவனது இயற்பெயர். கிறித்து பிறப்பதற்கு முன் 270 ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழனின் காலத்தில் செம்மையாக இருந்த சோழ வம்சம் நடுவில் பாண்டியர்களாலும், பல்லவர்களாலும் கைப்பற்றப்பட்டது. அக்காலகட்டத்தில் சோழ வம்சம் சொல்லிக் கொள்ளுமளவிற்கு இல்லை. பின்னர் சோழ வம்சர்களின் இரண்டாம் பகுதி தொடங்கியும் ராஜராஜன் பதவியேற்பதற்கு முன் 30 ஆண்டுகளில் 5 மன்னர்கள் ஆட்சி செய்தனர். சோழ வம்சத்தின் இரண்டாம் பகுதியும் ஒளிமயமாக இருக்கவில்லை.
முதலாம் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தியா தக்கோலம் போரில் இறந்ததும் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன. அதனால் அடுத்த வாரிசாக அவனது சகோதரன் கந்தராதித்திய சோழன் முடிசூடி கிபி 950 களில் சோழப்பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது ஆட்சி காலமும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அவன் இறக்கும்போது அவனது மகன் மதுராந்தகன் பதவியேற்கும் வயதில் இல்லாமல் சிறுபாலகனாய் இருந்தான். அதனால் கந்தராதித்திய சோழனின் சகோதரன் அரிஞ்சயன் பதவியேற்றான்.
சினிமாக்களில் கதாநாயகன் ஏதோ ஒரு சாதனை செய்ய வசதியாக வேண்டுமென்றே காட்சியமைப்பு அமைக்கப்படும். அதுப்போல மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரமும், கலையார்வமும் பெருமைகளும் உலகிற்கு தெரிய ஏதுவாகவே அவனுக்கு முன்னிருந்த மன்னர்களின் வாழ்க்கை அமைந்தது. இருகோடுகள் தத்துவம் போல 30 ஆண்டுகள் நிலையான அரசு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ஒரு மாமன்னன், மக்களுக்கு நன்மைகள் பல செய்பவன் வந்து நிலையான ஆட்சி தந்தால் அது இன்னும் சற்று அதிகப்படுத்திக் கொண்டாடத் தோன்றாதா?
சோழ வரலாற்றில் இந்த 30 ஆண்டுகள் நடந்த காட்சிகளும் ராஜராஜனுக்கு ஏற்றதாகவே இருந்தது. கந்தராதித்திய சோழனின் மறைவுக்குப் பின் பதவியேற்ற அரிஞ்சயனும் மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்ய முடிந்தது. அவன் பதவியேற்று ஓராண்டிலேயே காலன் அவனை அழைத்துக் கொள்ள அவனது மகன் பராந்தக சுந்தர சோழன் பதவியேற்றான்.
சோழர்களிடையே இருந்த இந்த குழப்பத்தில் தெற்கே பாண்டியர்கள் மீண்டும் காலூன்றியிருந்தனர். பதவியேற்றதும் சுந்தர சோழனின் கவனம் அவன் பக்கம் திரும்பியது. அவனும் அவனது 15 வயதே நிரம்பிய மூத்த மகன் இரண்டாம் ஆதித்தியனும் வீரபாண்டியனுடன் போரிட்டு வென்றனர். கூடவே அவனுக்கு உதவிய சிங்கள மன்னனையும் போரிட்டு ஜெயித்து பின்னாளில் பல நாடுகளையும் சோழநாடு ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்போவதற்கு வித்திட்டனர். பாண்டியனைப் போரில் வென்றிருந்தாலும் சுந்தர சோழனால் அங்கு ஆட்சியமைக்க முடியவில்லை. போரில் வீர்யத்துடன் செயல்பட்டு வீரபாண்டியனைக் கொன்றதால் ‘வீரபாண்டியன் தலைக்கொண்ட ஆதித்திய கரிகாலன் எனும் பெயர் இரண்டாம் ஆதித்தியனுக்கு கிடைத்தது.
பட்டத்து இளவரசனான இரண்டாம் ஆதித்தியன் வீரமும் அறிவும் நிறைந்து தந்தைக்கு போர்களில் தோள் கொடுத்து அடுத்து மன்னனாக முடிசூடிக் கொள்வதற்கு வேண்டிய தகுதிகளை வளர்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மேல் பகையை வளர்த்துக் கொண்டிருந்த யாரோ ஒரு சிலர் அவனைக் கொன்று விட்டனர். இதனால் சுந்தர சோழன் மனமுடைந்துப் போனார். சோழ நாட்டை சோகம் ஆட்கொண்டது. பின்னர் அருள்மொழிவர்மனை பட்டத்து இளவரசாக அறிவிக்க விரும்பியப் போது மீண்டும் ஒரு வில்லங்கம் கிளம்பியது. கந்தராதித்திய சோழன் இறந்தப் போது குழந்தையாய் இருந்த மதுராந்தகன் இப்பொழுது நன்கு வளர்ந்து விட்டிருந்தான். அவன் சுந்தர சோழரிடம் தன்னையே பட்டத்து இளவரசனாக அறிவிக்கும்படி வற்புறுத்தினான்.
மக்கள் அருள்மொழி வர்மனையே அடுத்த மன்னனாக பெற விரும்பினாலும் ராஜராஜன் அதற்கு சம்மதிக்கவில்லை. உள்நாட்டு பூசல்களை தவிர்க்கவே விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் சுந்தர சோழனின் மறைவுக்கு பின் மதுராந்தகன் உத்தம சோழனாக பதவியேற்றான். இந்த சம்பவம் ராஜராஜ சோழனின் பெருந்தன்மையை விளக்குகிறது. ஆட்சிப்பீடத்தில் அமர எந்த தகுதியும் இல்லாதவர்கள் கூட ஏதாவது செய்து பதவியை அடையமாட்டோமா எனும் ஏங்கி தவிக்கும் உலகில் மக்கள் தன்னையே தேர்வு செய்தாலும் நியாய தர்மப் படி, தந்தைக்கு அடுத்து மகன் முடிசூடுவது இயற்கை என்றாலும் வரலாற்றை மறக்காமல் மதுராந்தகன் மன்னனாக உதவினான் அருள்மொழிவர்மன். ராஜராஜனுக்கு பதவி ஆசை இல்லாததற்கு இது ஒரு உதாரணம். உத்தம சோழனின் மறைவுக்கு பின் நல்லவேளையாக அவனது மகன் மதுராந்தக கந்தராதித்தியன் பதவியேற்காமல் அருள்மொழி வர்மன் பதவியேற்று ராஜராஜனானான்.
அன்றிலிருந்து சோழ நாட்டில் பொற்காலம் தொடங்கியது. ராஜராஜன் பதவியேற்று 8 ஆண்டுகளுக்கு எந்த போரிலும் ஈடுப்படவில்லை என குறிப்புகள் கூறுகிறது. அந்த ஆண்டுகளில் அவன் நாட்டையும் ராணுவத்தையும் சீரமைக்க பயன்படுத்தினான். எட்டு ஆண்டுகள் கழிந்ததும் ராஜராஜனின் வேட்டை ஆரம்பமானது. அவன் விஸ்வரூபம் எடுத்து நின்றான்.
சேரர்களும், பாண்டியர்களும் எப்பொழுதும் சோழர்களை வம்புக்கிழுத்து போரிடுவது வழக்கம். அதுப்போலத்தான் கிபி994ல் நீண்ட நாட்களாக வாலாட்டி வந்த சேர மன்னன் பாஸ்கர ரவி வர்மனை கந்தளூர் சாலை எனும் இடத்தில் போரிட்டு வென்றான். அப்பொழுது சேரர்களுக்கு சொந்தமான கந்தளூர் துறைமுகம் பாண்டியர்கள் வசம் இருந்தது. அதனால் ராஜராஜ சோழன் பாண்டிய மன்னன் அமரபுஜங்கனையும் வென்றான். ஒரே போரில் சேரன், பாண்டியன் இருவரையும் வென்றதால் ’மும்முடி சோழன்’ என பெயர் பெற்றான். சேர, சோழ, பாண்டிய வம்சம் மூன்றும் ராஜராஜனின் தலைமையின் கீழ் வந்துவிட்டதல்லவா? 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு நாட்டையும் ராணுவத்தையும் செம்மைப்படுத்தியதால் ராஜராஜன் சிரமமின்றி அங்கே ஆட்சியமைத்தான்.
இத்தோடு நிறுத்திவிடாமல், வடக்கிழக்கில் ஒரிசாவையும், வடக்கில் சாளுக்கியர்களையும் வென்றான். இது மட்டுமின்றி கடல்கடந்து சென்று இலங்கையையும், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டினான். பெரும் கப்பல்களில் கடல்கடந்து சென்று இலங்கையை வென்ற ராஜராஜன் இலங்கையின் வடக்கு பகுதியைக் கைப்பற்றி மும்முடி சோழ மண்டலம் என பெயரிட்டான். அனுராத புரம் எனும் 1400 ஆண்டுகள் பழமையான சிங்களர்களின் தலைநகரை அழித்தான். புலனுருவா எனும் ஊரை தலைநகராக்கி ஜனநாதபுரம் என பெயரிட்டான். இந்த இடத்தை தேர்ந்தெடுத்தது ராஜராஜன் முழு இலங்கையையும் கைப்பற்ற விரும்பித்தான் என நம்பப்படுகிறது. புலனுருவாவை அழகாக சீரமைத்து அங்கே ஒரு சிவன் கோயிலும் கட்டினான். இப்படி இலங்கையில் பல நாட்கள் தங்கியிருந்து குறிப்பிடத்தக்க பல வரலாற்று சிறப்பம்சங்களை நிகழ்த்திய ராஜராஜ சோழனை இலங்கையில் ஒரு விஷயம் ஈர்த்தது. அது புத்தவிகார்கள். மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட புத்த விகார்கள், மிகப்பெரிய புத்தர் சிலைகள் இவற்றை கண்டதும் ராஜராஜனின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.
அன்று தோன்றிய அந்த எண்ணம் ஒரு மாபெரும் வரலாற்றையே ஏற்படுத்தியிருக்கிறது. சோழர் பெருமையை காலங்காலமாக விளக்கிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மக்கள் அதை வியந்து பார்க்கும்வண்ணம் இருக்கிறது. 1000 ஆண்டுகள் கழித்து இந்த நவநாகரீக உலகத்தில் ஜீன்ஸ் அணிந்து காதில் இயர்போனுடன் அமர்ந்து நாமும் அதைப்பற்றி சிறப்பு கட்டுரை எழுதுமளவிற்கு சரித்திரம் படைத்தது. அப்படி என்ன எண்ணம் தோன்றியது ராஜராஜ சோழனுக்கு?
இலங்கையில் இருக்கும் இந்த பிரமாண்டமான புத்த விகார்களைப் போல் ஏன் சோழ நாட்டில் ஒரு சிவாலயம் அமைக்கக் கூடாது என்றே தோன்றியது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கிட்டதட்ட அதே சமயத்தில் ராஜராஜனின் கனவில் சிவப்பெருமான் தோன்றி சிவாலயம் அமைக்கக் கூறியதாலும் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ஊர் திரும்பியதும் பிரகதீஸ்வரர் ஆலயம் கட்ட ஆரம்பித்தான்.
தமிழர்களின் கட்டட கலைக்கு கட்டியம் கூறும் பிரகதீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு முதலில் தஞ்சை பெருவுடையார் கோயில் என்றுதான் பெயர் இருந்தது. பின்னர் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டப்போது பிருகதீசுவரம் ஆனது. இக்கோயில் விமானத்தின் மொத்த உயரம் 216 அடி உயரமானது. இதன் மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்திருக்கிறது. கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி உயர்ந்திருக்கிறது. இதன் சிகரம் பலரால் நம்பப்படுவதுப் போல ஒரே கல்லால் செய்யப்பட்டது அல்ல. முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், போல ஒரு சில பகுதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் மற்ற பகுதிகள் ஒரே காலத்தில் கட்டப்பட்டது.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் ஒருங்கிணைந்த திட்டத்தில் எளிமையாக ஆனால் மிக பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று பகுதியில் கிரானைட் எங்கும் கிடைப்பதில்லை. ராஜராஜன் இந்த கிரானைட் கற்களை தனது ஆளுகைக்கு உட்பட்ட பல இடங்களிலிருந்து கொண்டு வந்து கட்டியிருக்கிறான். மிகுந்த எடைக் கொண்ட இந்த கற்களை தூக்கி வர மனிதர்களால் முடியாது. அவற்றை மர உருளைகளில் வைத்து யானைகளால் இழுத்து வரப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. மூலவர் லிங்கம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கிறது.
விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. கோயிலின் வெளிசுவரையொட்டி அகழி உள்ளது. அக்காலத்தில் இதுக்கோயிலாக மட்டுமின்றி கோட்டையாகவும் இருந்ததற்கான சான்று இது. தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களை ஒரே கோயில் தஞ்சை பெரியக் கோயில்தான். இக்கோயிலுக்கு ஐந்தடுக்குகளை கொண்ட கோபுரம் வழியாகவும் நுழையலாம் அல்லது தனித்து நிற்கும் சிறிய கோபுரம் வழியாகவும் நுழையலாம். இக்கோயிலில் உள்ள அனைத்து அம்சங்களுமே ஒரு கோட்பாட்டோடு அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக மற்ற கட்டடங்களில் முதல் தளம் தரை தளத்தை விட சற்று உயரம் கம்மியாக இருக்கும். மேலே செல்ல செல்ல உயரமும் சுற்றளவும் குறையும். ஆனால் இந்த கோயிலில் தரை தளமும் முதல் தளமும் ஒரே உயரத்தில் இருக்கிறது. இக்கோயிலில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. அது லிங்கத்தின் மேல் கூரை ஏதும் அமைக்கப்படாமலிருந்தது. அப்பொழுது லிங்கமும் சிகர உச்சியும் நேர்கோட்டில் இருக்கும். அதனால் லிங்கத்தின் இருப்பிடத்திலிருந்தே சிகரத்தின் அடிபாகத்தை பார்க்க முடியும். அதுமட்டுமின்றி கோபுரத்தின் அடிபாகம் சதுரமாகவும் போக போக வட்ட வடிவமாகவும் இருக்கும். மேற்கூரை இல்லாததால் அதையும் கண்டு ரசிக்க முடியும். ஆனால் மழைப்பெய்தால் மழை நீர் பெருவுடையார் மீது படுவதால் இப்பொழுது மேல்கூரை அமைத்துவிட்டனர்.
தஞ்சைப் பெரியகோவிலில் மூலவர் லிங்கம் மட்டுமின்றி மற்ற சிலைகள் கூட மிகப் பெரிய்து. தட்சிணாமூர்த்தி, சுரியன், சந்திரன், என அனைத்துமே மிக பிரமாண்டமானது, அவ்வகையில் கோயிலில் உள்ள நந்தியும் மிக பிரமாண்டமானது, ஒரே கல்லால் செய்யப்பட்ட இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும்.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள இன்னுமொரு முக்கிய நம்பிக்கை கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பது. ஆனால் அதற்கும் இன்று நிறைய பேர் மாற்றுக் கருத்து கூறி வருகின்றனர்.
கிபி1002ம் ஆண்டு கட்ட தொடங்கி கிபி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இவ்வாலயம் இந்த வருடம் ஆயிரமாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. தஞ்சைக் கோயிலின் அதிசயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. சொல்லிக் கொண்டேப் போகலாம். சில விஷயங்கள் நம் சிற்றறிவுக்கு புரியவும் புரியாது. எழுத்தால் உணர முடியாத அற்புதங்களை நேரில் கண்டு ரசிக்கலாம்.
-எல்லோரா விஜயா
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




I want one more information; kindly replay me i study more the 4 times the story of Pooniyen selvan kali. how is aathiht karikala solan died? what about Nathini? who is Nanthini father. if it possible kindly send me replay and clear my doubts.
tks