தமிழ்நாடெங்கும் கோலாகலம். படித்தவர்கள்,படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது செம்மொழி மாநாடு நடப்பதுப் பற்றி.
அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாவுக்கு சென்றால் கூட படம் ஆரம்பிக்கும் முன்பு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என ஏ. ஆர். ரஹ்மான் பாடி செம்மொழி மாநாட்டைப் பற்றி தெரியப்படுத்தி விடுகிறார்.
ஆனால் மாநாடு பற்றித் தெரிந்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு செம்மொழி என்றால் என்ன என்று தெரியவில்லை. செம்மொழி என்பதற்கு பலரும் விளையாட்டாய் ஏதாவது விளக்கம் கொடுத்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இதன் பொருளுணர்ந்தவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் பிறந்ததற்கு பெருமிதம் கொள்வார்கள்.
சரி. செம்மொழி என்றால் என்ன? ஆங்கிலத்தில் classical language என்பதை தான் தமிழில் செம்மொழி என்கிறோம். உலகில் தமிழையும் சேர்த்து 9 மொழிகள் செம்மொழியாக உள்ளன. கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், பாரசீகம், சீனம், அரேபியம், எபிரேயம், தமிழ் ,கன்னடம் ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த பழமையைப் பறைச்சாற்ற இலக்கிய படைப்புகளும், கலைகளும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அம்மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெறும்.
நம் தமிழ் மொழியோ 4000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு திருக்குறள், சிலப்பதிகாரம் போல ஏராளமான இலக்கியச் சான்றுகளும் இருக்கின்றன. கலைகளிலும் நம் தமிழ் கலாச்சாரம் கோலோச்சுகிறது. கட்டடக் கலைக்கு ஸ்ரீவில்லிப்புதூர், தஞ்சாவூர் போன்ற பழமையான ஆலயங்களும், சிற்பக் கலைக்கு மாமல்லப்புரம் போன்ற அற்புதங்களும் நம் கண் முன்னே இருக்கிறது. எங்கிருந்தோ தேடிப் பிடித்து ஆராய்ச்சி செய்தெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. தமிழின் பெருமையை உணர்த்த ஏராளமான இலக்கிய, கலைச் சான்றுகள் இருக்கின்றன.
செம்மொழி என்றால் சிவந்த மொழி என்று பொருளல்ல. செம்மையான மொழி என்று அர்த்தம். அதாவது ஒரு மொழி போதிய அளவு வாழ்ந்திருந்தால்தான் அதில் ஒரு முதிர்ச்சியிருக்கும். அதாவது அதற்கு போதுமான இலக்கண விதிகள் இருக்கும். நேற்று புதிதாக ஒரு மொழி உருவாகியிருந்தால் அதில் ஒரு மொழிக்கு தேவையான அளவு இலக்கண இலக்கியங்கள் இருக்காது. அந்த மொழி பக்குவப்பட பல ஆண்டுகள் நிச்சயம் தேவை. அதனால்தான் குறைந்தது 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டுமென்பது விதி.
தமிழில் இலக்கணங்கள் தெளிவாக இருக்கிறது. உதாரணமாக ஆண்பால் எது? பெண்பால் எது? அஃறிணை எது? எது என பிரித்துக் கூறுவதில் குழப்பமேயில்லை. வண்டி (காடி) எனும் சொல் பெண்பால் என இந்தியில் இருப்பது போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை.
செம்மொழிகளில் பல இன்று வழக்கொழிந்து விட்டன. அவற்றை இன்று பேசக் கூட ஆளில்லை. ஆனால் இன்றும் நம் தமிழ் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதை நாம் இன்றும் பேசவும் எழுதவும் செய்கிறோம். அது மட்டுமின்றி கணிணி பயன்பாட்டில் கூட தமிழ் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதாவது தமிழ் தவிர வேறு மொழி எதுவுமேத் தெரியாதவர்கள் கூட முழுமையாக கணிணியை பயன்படுத்தும் அளவு பல மென்பொருள்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
நம் தமிழின் சிறப்புகள் இத்தோடு நின்று விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ் இன்று முற்றிலுமாக மாறிவிடவில்லை. உதாரணமாக கிரேக்க காவியங்களை கிரேக்கர்கள் இன்று படித்தால் ஒரு வார்த்தை கூடப் புரியாது. ஆனால் தமிழில் சங்கப் பாடல்களை இன்று படித்தாலும் ஏதேனும் ஓரிரு வார்த்தைகள் தவிர மற்றவை நன்கு புரியும்.
செம்மொழியால் என்ன பயன்?
தமிழ் செம்மொழி அந்தஸ்துப் பெற்றதால் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அதனை ஏற்கும். அதன்பின், அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், தமிழ்த்துறை உருவாகும். தமிழ் மொழி, தமிழ்க்கலை, இலக்கிய ஆய்வுகள் முனைப்பாக நடைபெறும். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு, தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். உலகப் பல்கலைக்கழகங்களில் இப்போது, கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்துவரும் நிலைமை மாறி, தனியே தமிழ்த் துறைகள் உருவாக்கப்படும்.
மேலும் செம்மொழி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் இன்று நவீனத்துவம் அடைந்து அதை நாம் ஏதோ ஜப்பான்காரன் கண்டுப்பிடித்ததாக நினைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொண்டிருப்போம். இதுப் போன்ற சங்கதிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு பல புதுப்புதுத் தகவல்கள் வெளிவரும். அதனால் இன்று நம்மிடையே இருக்கும் பல பழக்க வழக்கங்களுக்கு காரணக் காரியங்கள் புரியும். இதுப் போன்ற பல ஆராய்ச்சிகள் செய்வதால் தமிழறிஞர்களுக்கு உலகளவில் மவுசுக் கூடும்.
’செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுதுக் காதினிலே...’ என்பதற்கிணங்க நம் தமிழின் பெருமைகளைப் பற்றிப் பேசினால் நம் காதுகளுக்கு இனிமையாக தானிருக்கிறது. ஆனால் தமிழை வாழ வைக்க இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு ஒரு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்ட வேண்டும். இன்றும் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் பலர் தமிழில் எழுதப் படிக்கவேத் தெரியாது என்கின்றனர். அவர்கள் இனி வீட்டிலும் வெளியிலும் சமஸ்கிருதத்திலேயே பேசப் போவதுப் போல பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்துப் படிக்கின்றனர். அல்லது பிரெஞ்சு, இந்தி என தமிழ் தவிர மற்ற மொழிகளை எடுத்துப் படிக்கின்றனர். அவர்களால் பேருந்துகளில் எழுதியிருக்கும் ஊர் பெயரைக் கூடப் படிக்கத் தெரியாது என மிகப் பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர்.
உலக மொழிகள் அனைத்தும் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ்நாட்டிலேயே படித்துவிட்டு தமிழில் எழுதப் படிக்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது. இதுப்போலக் கூறி தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் சமுதாயமாவது நூறு சதவீதத்தினருக்கும் தமிழில் எழுதப் படிக்க தெரியும் என்ற நிலையை உருவாக்குவோம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





nama tamil tamil solrom anal pakathu manilathugu pona tamil pesuvagala. velai kidaikuma