’இன்று இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ போய் விட்டது...’ என பலரும் பெருமையடித்துக் கொள்கிறோம். உண்மைதான். அதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதை யாரும் மறுக்கப் போவதும் இல்லை. ஆனால் இந்த தொழிநுட்ப வளர்ச்சியை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம்; அதனால் நாம் எவ்வளவு தூரம் நம்மை வளர்த்துக் கொள்கிறோம் என சிந்திக்க ஆரம்பித்தால் கிடைக்கும் பதில் திகைப்பாகவே இருக்கிறது.
இன்றும் கம்ப்யூட்டரின் பயன்பாடு பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. படித்தவர்கள், கம்ப்யூட்டர் வாங்க வசதியுள்ளவர்கள் கூட அதை ஆடம்பரப் பொருளாகவோ அல்லது குழந்தைகளைக் கெடுக்கும் குட்டி சாத்தானாகவோ நினைத்து வாங்க மறுக்கிறார்கள். அல்லது ‘ அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை...’ என ஒதுங்கிப் போகிறார்கள். சரி. வீட்டில் கணிணியே இல்லாதவர்களைப் பற்றி பிறகு கவலைப்படலாம். முதலில் வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பலர் என்ன செய்கிறார்கள்?
பலரது வீட்டில் கம்ப்யூட்டர் எனும் மாபெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி குழந்தைகள் ’கேம்ஸ்’ விளையாடும் ’ப்ளே ஸ்டேஷ’னாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. ‘எப்ப பாரு வீடியோ கேம்ஸ் விளையாடிக்கிட்டு வீட்ல மத்தவங்கள் டிவி பார்க்க விடாம தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்தான். அவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்துட்டேன். இப்ப அவன்பாட்டுக்கு அதுல விளையாடிக்கிறான்...’ என பெருமையடித்துக் கொள்பவர்களை பரிதாபமாக பார்ப்பது தவிர வேறு என்ன செய்வது என தெரிவதில்லை. இப்பொழுது பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஒரு பாடமாகவே இருந்தாலும் அதன் மதிப்பு குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கூட தெரிவதில்லை. வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் வீட்டு நிர்வாகத்தை இன்னும் சிறப்பாக செய்து முடித்து நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். அலுவலக வேலைகளை கூட முடிந்த அளவு வீட்டில் செய்து முடித்து மேனேஜரிடம் நல்லப் பெயரும் பிரமோஷனும் வாங்கிக் கொள்ளலாம். இல்லத்தரசிகள் விருப்பப்பட்டால் டேட்டா எண்ட்ரி, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் போல ஏதேனும் ஒரு தொழில் கற்று ஓய்வு நேரத்தில் கணவனுக்கு உதவியாக சிறிது சம்பாதிக்கவும் செய்யலாம்.
அடுத்து இணையதளம். பரந்து விரிந்த உலகையே ஒரு சின்ன திரையில் அடக்கி நம் பார்வைக்கு தருகிறது. உண்மையில் அதன் பயன்பாடு பெரும்பாலானவர்களை சென்று அடையவில்லை. நிறைய பேர் கம்ப்யூட்டர் வாங்கி இணையதள கனெக்ஷனும் வாங்கியதும் எனக்கு போன் செய்து என்னென்ன வெப்சைட் பார்க்கலாம் என ஆலோசனைக் கேட்பார்கள். ஆரம்பத்தில், ‘எனக்கு என்னென்ன தேவையோ அதை தேடிக் கண்டுப்பிடித்து பல வலைதளங்களை சென்று பார்ப்பேன்...’ என பதில் சொல்லி வந்தேன். ஆனால் அவர்களுக்கு அந்த பதில் திருப்தியளிக்காது. அவர்களுக்கு என்ன தேவை என்றும் அவர்களுக்கு தெரியாது.
பின்னர் நாளடைவில் இப்படி கேட்பவர்களுக்கு தனிதனியாக வகைப்பிரித்து இந்த இந்த தேவைகளுக்கு இந்தந்த வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என பரிந்துரை செய்து ஒரு லிஸ்ட்டாக தர ஆரம்பித்துவிட்டேன். தமிழ் செய்திகளுக்கு, ஆங்கில செய்திகளுக்கு, பாடல்களுக்கு, ஆன்மீகத்திற்கு, தொலைப்பேசி/மின் கட்டணம் கட்ட, ரயிலுக்கு முன்பதிவு செய்ய என வகைப்பிரித்து ஒரு சில பிரபல வலைதளங்களை பரிந்துரைப்பதன் மூலம் இணையத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஐடியா அவர்களுக்கு கிடைக்கும் என்ற நோக்கம்தான்.
இப்படி கேட்பவர்களாவது பரவாயில்லை சில நாட்களில் தேறிவிடுவார்கள் என்பதற்கு. எனக்கு தெரிந்த சில கல்லூரி மாணவ மாணவிகளிடம் இணையத்தில் என்னன்ன பார்க்கிறார்கள் எனக் கேட்டுப் பார்த்தேன். சற்றும் யோசிக்காமல் பதில் வந்தது ’ஃபேஸ்புக்’ என. சற்று அதிர்ந்த நான் சரி அது தவிர என்றேன். ’மொபைலுக்கு ரிங்டோன், வால்பேப்பர் டவுன்லோடு செய்வேன். எல்லா படங்களும் நெட்ல தேடிப் பிடிச்சு டவுன்லோடு பண்ணிடுவேன். தினமும் ஒரு படமாவது பார்க்கிறேன் என்றதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டேன். சினிமா பார்ப்பதற்கு என டிவி, டிவிடி எல்லாம் இருக்கிறது. புதுப்படங்களை தியேட்டர் சென்று பார்ப்பதுதான் முறை. அதற்கு எதற்கு வீணாக கம்ப்யூட்டர்! ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற சமுதாய வலைதளங்களை அளவாகப் பயன்படுத்த வேண்டும். பிரிந்துப் போன நண்பர்களை தேடிப்பிடிப்பதற்கும், இப்பொழுதிருக்கும் நண்பர்களை எப்பொழுதும் தொடர்பிலேயே வைத்திருக்கவுமே இதுப் போன்ற வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு மாறாக இன்றைய இளைஞர்கள் முன்பின் தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் தனது நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொண்டு வம்பை விலைக்கொடுத்து வாங்குகின்றனர்.
‘நான் இன்று இரண்டு போண்டா சாப்பிட்டேன்...’ என்பது கூட ஃபேஸ்புக்கில் எழுதுகிறார்கள். அதற்கு ‘லைக்’ கொடுக்கவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது. இதனால் யாருக்கு என்ன பயன் என சிந்திக்க தவறிவிடுகின்றனர். இதை பொழுதுப்போக்காக நினைத்து ஒரு சில நிமிடங்களை ஒதுக்கலாம். நாள்தோறும் இதை மட்டுமே செய்துக் கொண்டிருந்தால் எத்தனை விரயம்! பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருமோ அல்லது முன்பின் தெரியாத நண்பர்களோ அனைவரும் நல்லவர்கள் கிடையாது. அதனால் நம் பாதுகாப்பிற்கு பங்கம் வராத தகவல்களை மட்டுமே பரிமாறிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் தங்களது புகைப்படத்தை போடுவதை தவிர்க்கலாம்.
அட இவர்களையும் ஓரளவு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக படித்த வேலைக்கு செல்லும் பெண்கள் தனக்கும் கம்ப்யூட்டருக்கும் சம்பந்தமேயில்லை என்பது போல நடந்துக் கொள்வதுதான் இன்னும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதேயில்லை. தனக்கென ஒரு ஈமெயில் ஐடி கூட உருவாக்கி வைத்துக்கொள்வதில்லை. ‘எனக்கு sms அனுப்பவே தெரியாது எனக்கு எதுக்கு மெயில் ஐடி. எனக்கு யாரு மெயில் அனுப்பனும்? என கேட்கும்போது நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை ஒருமுறை எண்ணிப் பார்க்க தோன்றுகிறது. மெயில் ஐடி இருந்தால் சுலபமான தகவல் பரிமாற்றத்திற்கு உறுதுணையாக இருக்காதா. அதுவும் படித்து பணிபுரியும் பெண்கள் இப்படி பேசுவது வியக்கத்தக்கது. இன்னும் சில பெண்களோ எனக்கு அதற்கெல்லாம் நேரமே கிடையாது என ஒரே போடு போடுகின்றனர்.
இணையதளத்தினால் மாணவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என அஞ்சுகின்றனர். அதுப் போன்ற வக்கிரமான வலைதளங்களை குழந்தைகள் கண்ணில் படாதவாறு தடுக்க முடியும். மேலும் குழந்தைகள் என்னென்ன வலைதளங்கள் சென்றுப் பார்த்திருக்கிறார்கள் என்று கண்காணிக்கவும் வசதிகள் உண்டு. இந்த தடுப்பு முறைகளை கையாண்டு மாணவர்கள் தங்கள் கல்விக்கு இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கலாம். எல்கேஜி குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களின் கல்விக்கும் இணையதளம் உறுதுணையாக இருக்கிறது.
நடிகை ரம்பாவின் குழந்தையின் பெயரென்ன என்பது முதல் நேனோ டெக்னாலஜி வரை அனைத்தும் இருக்கிறது. இத்தனை நாட்களாக நமக்கு புரியாத அறிவியல் விளக்கங்கள், ஆன்மீகம், வணிகம், உள்ளூர்/உலக அரசியல், சினிமா என அனைத்தும் உண்டு. தினந்தோறும் நமக்கு ஏற்படும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு (நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸா போன்ற சந்தேகங்கள் அல்ல) கூட விளக்கம் தேடிப் பிடிக்கலாம். உலகின் எந்த மூலையில் எதுப் பற்றி தெரிய வேண்டுமென்றாலும் நாம் வீட்டிலிருந்தவாறே அறிந்துக் கொள்ளமுடியும். சுருக்கமாக உலகையே வென்று நம் விரல்நுனியில் வைத்திருக்கும் போர் வாளைப் போன்ற இணையதளத்தின் மதிப்பு தெரியாமல் அதை வெறுமனே நகம் வெட்ட பயன்படுத்துவதா? தனிமனிதனின் தொழில்நுட்ப தேவை மற்றும் அறிவு வளராமல் அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி வளராது.
- லலிதா, சென்னை
Want to write for Maniyosai?
Download our android app




very good article thankyou lalitha madam and maniyosai