உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நமது இந்தியாதான். அரிய கலாசாரம், பாரம்பரியம், இயற்கை வளங்கள் என இவ்வளவு இருந்தும் சரியான தலைவர்கள் இல்லாததால்தான் நமது நாடு இன்னும் வளரும் நாடுகளின் பட்டியலிலேயே இருந்து வருகிறது. நேற்று பிறந்த நாடுகள் கூட தொழில் வளர்ச்சியில் நம்மை முந்திக் கொண்டு செல்வதையும் நம்மால் மறுக்க முடியாது.
ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை நம்மால் தட்டிக் கேட்கவே முடியாதா என்ற ஆதங்கம் நம் பலருக்கும் உண்டு. தேர்தல் என்ற ஒன்று இருப்பதால்தான் அரசியல்வாதிகள் ஓரளவாவது அடங்கி இருக்கிறார்கள். ஆனால், தேர்தலில் வாக்களிக்கவே பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. குறிப்பாக, சென்னையை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மேல்தட்டு இளைஞர்கள் தேர்தலில் வாக்களிப்பதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஊழல். "யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நம் மீது விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி" என்ற மனநிலையில் பலரும் உள்ளனர்.
தேர்தலை முற்றிலும் புறக்கணிப்பதால் நன்மை ஏற்படுமா எனக் கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படித்தவர்கள் தேர்தலை புறக்கணித்து விட்டு வீட்டில் இருப்பதால், பிரியாணிக்காகவும், குவார்ட்டருக்காகவும் வாக்களிப்பவர்கள் கைகளில் நாட்டின் தலையெழுத்து சிக்கிக் கொள்கிறது. மிக்ஸிக்காகவும், கிரைண்டருக்காகவும், லேப்டாப்புக்காகவும் வாக்களிப்பவர்கள் இருக்கும் வரை நாட்டை சுரண்டி, நம் ரத்தத்தை உறிய வேண்டும் என்ற எண்ணமும் அரசியல்வாதிகளுக்கு முற்று பெறாது.
சரி, வாக்களித்து விடலாம். யாருக்கு வாக்களிப்பது? தனிப்பட்ட வேட்பாளரை முன்னிறுத்தி வாக்களிப்பதா அல்லது அரசியல் கட்சியை மனதில் கொண்டு வாக்களிப்பதா?
நம் நாட்டின் ஆட்சி அமைப்பில், கட்சி முறை முக்கியத்துவம் பெறுவதால், வெவ்வேறு கட்சிகளின் குறை, நிறைகளை மதிப்பீடு செய்து வாக்களிப்பதே சிறந்தது.
எந்த கட்சிக்கு வாக்களிப்பது? யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்கின்றனர் என சிலர் வினவலாம். எல்லா கட்சிகளும்தான் இலவசங்கள் கொடுக்கின்றன என சிலர் கேட்கலாம்.
எதிர்காலத்தில் ஆட்சியாளார்கள் மக்களுக்கு எதையுமே இலவசமாக வழங்கக் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரப் பட வேண்டும். சரி அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில், கட்சிகளிடையே இருக்கும் பொதுவான, சமமான விஷயங்களை தள்ளிவைத்து விட்டு, போட்டியிடும் கட்சிகளின் மற்ற தராதரத்தை ஆராய வேண்டும். கட்சிகளின் கடந்த கால சாதனைகள், தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, ஊழல்களின் அளவு, போட்டியிடும் அரசியல் கட்சிகளில் நிலவும் ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை பேணி காப்பது போன்ற பல அளபுருக்களின் (Parameters) அடிப்படையில் நாம் ஒரு முடிவை எடுக்கலாம். Lesser evil, அதாவது, குறைந்த அளவு ஊழல் செய்த கட்சியைக் கூட தேர்வு செய்யும் சூழ்நிலையும் இருக்கலாம். திடீரென எழும் எந்த வித அலைகளுக்கும் குழம்பி நாட்டின் ஐந்தாண்டு எதிர்காலத்தை பணயம் வைத்து விடக் கூடாது.
மேற்குறிப்பிட்ட அளபுருக்களின் அடிப்படையில் ஆய்ந்தும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மனம் இடம் கொடுக்கவில்லையென்றால், 49 'O' வாவது போட்டு விடலாம்.
49 O. இதை ஏதோ பேருந்து எண் போலிருக்கே என எண்ணி அலட்சயமாக இருந்து விடாதீர்கள்.எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை உரிய முறையில் பதிவு செய்வதே 49 'O' விதிமுறை.
இந்த தேர்தல் விதிமுறையின் படி, நீங்கள் வாக்கு சாவடிக்கு சென்று அதற்குரிய 17A என்ற விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடம் பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுத்து விடலாம்.
இதனால், நம் வாக்கை வேறு யாராவது தவறாக பயன் படுத்துவதை நாம் தடுக்கலாம்.
ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் வாக்களிக்கும் உரிமையை பயன் படுத்திக் கொள்ளாதவர்களை எதிர்கால சந்ததியினர் மன்னிக்கவே மாட்டார்கள்.
- பிரபல எழுத்தாளர்
Want to write for Maniyosai?
Download our android app


