“எனக்கு மாதம் ரூ. 40000 சம்பளம். மிக கடுமையாக உழைக்கிறேன். ராப்பகலாக ஓய்வு ஒழிச்சலின்றி ஓடுகிறேன். ஆனால் அதில் ஒரு பைசாக் கூட சேமிக்க எனக்கு ’நேரமில்லை.’ வேலை, வேலை எந்நேரமும் வேலை. எனக்கு அலுவலகத்திலேயே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எங்கிருந்து வரவு செலவு கணக்கு பார்த்து பணத்தை சேமிப்பது?” இப்படி யாராவது நேரமில்லை என்ற காரணத்துக்காக சேமிக்காமல் இருந்து பார்த்திருக்கிறீர்களா? ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு பின் திண்டாடுபவர்கள் பற்றி இப்பொழுது நமக்கு கவலையில்லை. நாம் சம்பாதிப்பதெல்லாம் நம் இக்கால மற்றும் வருங்கால நன்மைக்காகத் தானே! சேமிக்க நேரமில்லாவிட்டால் பின் ஏன் சம்பாதிக்க வேண்டும்? யாருக்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் எழவில்லையா?
நம் வருமானத்தை சேமிக்க, பன்மடங்காக்க திட்டமிடுகிறோம். திட்டமிடுவதற்காகவும், அதை செயல்படுத்தவும் நம்மால் எப்படியோ நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால் பொன் முட்டைக்காக நேரம் செலவிட தயாராக இருக்கும் நாம் அதை நமக்கு ஈட்டித் தரும் வாத்தின் நலனுக்காகவும் சற்று நேரம் ஒதுக்கக் கூடாதா? அப்பொழுது தானே ஆயிரம் லட்சம் என பொன்முட்டைகளை ஈட்ட முடியும். இங்கே நான் வாத்து (!?! ) எனக் குறிப்பிடுவது நம்மைத்தான். நம் உடலும் மனமும்தான் பொன்முட்டையிடும் வாத்து.
வேலைக்கு சேர்ந்தவுடன் நாம் செய்யும் முதல் காரியம் ஒரு பேப்பர், பேனாவுடன் அமர்ந்து பிரணாப் முகர்ஜி கணக்காக பட்ஜெட் போட ஆரம்பித்து விடுகிறோம். வரவுகள் என்னென்ன? சம்பளம், போனஸ், மெடிக்கல், அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ் மற்றும் பல என கணக்கெடுத்து ஆண்டு வருமானம் எவ்வளவு என எழுதிக் கொள்கிறோம். அடுத்து செலவுகள். வீட்டு வாடகை, மளிகை சாமான், பால் காய்கறி, கடன் வட்டி, சேமிப்பு இத்யாதி இத்யாதி என்ற தனிக் கணக்கும் குறித்துக் கொள்கிறோம். இப்பொழுது நம் வரவு என்ன செலவு என்ன என்று தெளிவாகப் புரிந்து விடுகிறது. இதேப் போன்ற ஒரு திட்டமிடல் விலைமதிப்பில்லாத நேரத்திற்காகவும் செய்தால் என்ன! பணமாவது இன்று போனால் நாளை வரும். ஆனால் நேரம்....? பொன்னை விட பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டியது அல்லவா?
ஒரு அறிஞர் சொல்லிப் படித்திருக்கிறேன். ’எவன் ஒருவன் எதற்கெடுத்தாலும் நேரமில்லை என்கிறானோ அவனே மிகப்பெரிய சோம்பேறி.’ என்கிறார். இதைக் கேட்டால் யாருக்கும் சட்டெனக் கோபம்தான் வரும். ஆனால் சற்று நிதானத்தோடு ஒரு சிறிய வீட்டுப்பாடம் செய்தால் அதில் உள்ள உண்மை விளங்கும். இரவுப் படுக்கப் போகும் முன்பு ஒரு பேப்பரில் காலையில் நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்தீர்கள். எத்தனை மணிக்கு குளித்து முடித்து அலுவலகத்திற்கு தயாரானீர்கள். எத்தனை நேரம் சாப்பிட ஒதுக்க முடிந்தது. அலுவலகம் சென்றடைந்த நேரம்... இப்படி ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டே வாருங்கள். கவனிக்கவும்: இது உங்களுக்காக எழுதுவது. இதை யாரும் பார்க்க்கவோ தலையிடவோ முடியாது. இதன் மூலம் உங்களுக்கு மிகப் பெரிய நன்மை நடக்கவிருக்கிறது. நீங்கள் உங்கள் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் நிர்வகிக்கப் போவதால் ஒரு தலைச்சிறந்த அலுவலக நிர்வாகியாக தலைவராக உருவாக முடியும். அதனால் பொய் வேஷமின்றி உண்மையாக எழுதுங்கள். சிறு சிறு விஷயங்களையும் எழுதுங்கள். நண்பர்களுடன் அரட்டையடித்தது. டிவி பார்த்தது. மொபல் போனைக் குடைந்தது எதையும் மறக்க வேண்டாம்.
வரவு செலவு கணக்கு எழுதி முடித்ததும் நாம் எதற்கு அதிகம் செலவிடுகிறோம். அது அத்யாவசியமானதா, தேவையற்றதா, தவிர்க்க முடியுமா முடியாதா என எல்லாம் புரிந்து விடும். மிக அத்யாவசியமானது என்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. குறைத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால் மாற்று வழி யோசிக்கலாம் இல்லாவிட்டால் ஓகே. அடுத்து தேவைதான் ஆனாலும் சற்று அதிகமாகத் தான் செலவழிக்கிறோம் என சில விஷயங்கள் எண்ணத் தோன்றும். உதாரணமாக நாம் ஆடை அணிகலன்களுக்கு மிக அதிகமாக செலவிட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது பக்கத்து கடைக்கு செல்லக் கூட காரின் உதவியை நாடியிருக்கலாம். இதுப் போன்ற சில செலவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மாதாமாதம் ஒரு ஷர்ட் வாங்குவதற்கு பதில் மூன்று மாதத்திற்கு ஒன்று எனக் குறைத்துக் கொள்வோம். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல காருக்கு பதில் நடந்தோ, பேருந்திலோ சென்று வந்தால் பெட்ரோல் செலவும் குறையும். இப்படி எதில் அதிகம் பணம் செலவாகிறது எனப் பார்த்து அதைக் குறைக்கிறோம் அல்லவா?
அதுப்போல நம் நேரத்திற்கான பட்ஜெட்டில் நாம் அதிக நேரம் டிவி பார்த்திருக்கலாம். தேவையற்ற வம்பு பேசி மணிக்கணக்கில் யாருக்காவது போனில் மொக்கைப் போட்டிருக்கலாம். ஆனால் மொத்தமாகப் பார்க்கும்போது நமக்கு அவை கண்ணில்படாது. நாம் மிக பிஸியாக இருப்பதுப் போலத்தான் இருக்கும். நான் இதுப்போல பட்ஜெட் போட்டதில் என் நண்பர்களுடன் போனில் அரட்டையடிக்க நிறைய நேரம் செலவிடுவது தெரிந்தது. அதைக் குறைத்ததும் நேரமும் மிச்சம் காசும் மிச்சம். டூ இன் ஒன் லாபம்.
இதெல்லாம் கணக்குப் பார்த்தாகிவிட்டது. நான் எல்லாம் செய்தும் எனக்கு நேரமில்லை என்கிறீர்களா? இப்பொழுது உங்கள் தேவை கூடுதல் நேரம் அல்ல. இருக்கிற நேரத்தில் தேவையான இன்னும் ஒருசில வேலைகளையும் செய்து முடிக்க திட்டமிட வேண்டியதுதான். இன்றைய அவசர நவீன உலகில் அலுவலக நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சொகுசாக இருக்க வேண்டும் என நினைப்பதெல்லாம் நடவாதக் காரியம். நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு தலையாயப் பிரச்சினை நேரத்திற்கு சாப்பிட முடியாததுதான். அதனால் பெரும்பாலானவர்கள் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருநாளில் நாம் உண்ணும் உணவிலேயே மிகவும் முக்கியமானது காலை உணவு (Breakfast). அதன் பெயரிலேயே இருப்பதுப் போல நாம் இரவு உணவு உண்டு வெகு நேரமாகியிருப்பதால் வயிறு காலியாக இருக்கும். நாம் உண்ணும் உணவை சீரணம் செய்விக்க என நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும். நீங்கள் உணவு உண்டாலும் உண்ணாவிட்டாலும் சுரந்துக் கொண்டிருக்கும். அச்சமயம் வயிறு காலியாக இருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வயிற்றையே பதம் பார்க்க ஆரம்பித்துவிடும். அதனால் நாம் சோர்வடைந்து விடுவோம். வயிற்று பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், என பல பிரச்சினைகள் நாளடைவில் தோன்ற ஆரம்பிக்கும். இதை தடுக்க காலை உணவு மிக அவசியம்.
காலை உணவு என்றால் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என வெளுத்துக் கட்டுவதுதான் நம் ஊர் பழக்கம். அலுவலக நேரம் தாறுமாறாக இருப்பவர்களால் ஆற அமர அமர்ந்து சாப்பிட நேரமில்லாதவர்கள் இதைத் தவிர்த்து ஆரோக்கியமான சுலபமாக தயாரிக்க / சாப்பிட முடிந்த உணவை உண்ணலாம். இதற்கு மருத்துவர்கள் , டயட்டீஷியன்கள் பரிந்துரைப்பது பழங்கள். கோதுமை பிரட், ஓட்ஸ் கஞ்சி, கார்ன் பிளேக்ஸ், வேக வைத்த முட்டை, முளைக்கட்டிய பயிர் வகைகள் போன்றவற்றைத் தான். பழங்களின் நன்மைகள் பற்றி நான் விளக்கத் தேவையில்லை. அது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது. ஒரு ஆப்பிளோ அல்லது ஒரு வாழைப்பழமோ சாப்பிட்டு ஒரு பெரிய கிளாஸ் பால் குடிக்கலாம். பழங்களை நாம் சமைக்கத் தேவையில்லை. அதுவும் ஆப்பிள் வாழைப்பழம் போன்றவற்றை நறுக்கவும் தேவையில்லை. ஒரு ஃபைலைப் பார்த்தவாறே சாப்பிட்டு முடித்து விடலாம். கோதுமை பிரட்டும் மிகவும் நல்லது. இதையும் நீங்கள் கையில் எடுத்து செல்வது சுலபம். ஓட்ஸ் கஞ்சி, கார்ன் பிளேக்ஸ் என எவையுமே சமைக்க இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகும். வேக வைத்த முட்டை நீங்கள் குளித்து முடித்து கிளம்பும் நேரத்தில் தயாரித்து சாப்பிட்டு விடலாம். இது மதியம் வரைப் பசிக்கவும் பசிக்காது.
காலை 9 மணிக்குள் காலை உணவு சாப்பிட்டு விட வேண்டும். (சிலர் மதியம் 12 மணிக்கு காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அது சாப்பிடுவதும் ஒன்றுதான் சாப்பிடாததும் ஒன்றுதான்.) அதனால் நேரமில்லாதவர்கள் முதலில் காலை 9 மணிக்குள் இப்படி ஏதெனும் ஒன்றை சாப்பிடுங்கள். பிறகு நீங்கள் விருப்பப்பட்டால் பின்னர் நேரம் கிடைக்குமாயிருந்தால் இட்லி தோசை என சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அப்படி சாப்பிடாவிட்டால் கூட இந்த வகை காலை உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
நம் வாழ்க்கைமுறை மாறும்போது நம் உணவு முறையையும் சற்று மாற்றிக் கொள்வோமே. சாப்பிட்டால் இட்லி தோசை இல்லாவிட்டால் கொலைப் பட்டினி என்று இருப்பதை விட இதுப் போன்ற ஆரோக்கிய உணவு முறைகளை கையாளலாமே! நாம் ஒரு நாளைக்கு உண்ணும் உணவை 5 அல்லது 6 முறையாக சிறிதுசிறிதாகப் பிரித்து சாப்பிட்டால் மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். இது காலை, மதிய, இரவு உணவுகள் மற்றும் இடையே தின்னும் சிறு உணவுகள். இந்த 6 தடவை என்பதை நம் சூழ்நிலைக்கேற்றவாறு திட்டமிட்டு குறைவான நேரத்தில் சிறு உணவு வகைகள், சற்று ஆற அமர நேரம் கிடைக்கும்போது நிதானமாக சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாமே.
இரவு உணவு 8 மணிக்குள் உண்டு முடித்துவிட வேண்டும் என்பது பொதுவான அறிவுரை. ஆனால் இது எல்லாருக்கும் சாத்தியப்படாது. அதற்காக இரவு 11 மணி வரை வயிற்றை காயப் போடுவதற்கு பதில் சிறு உணவுவகைகளை இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடும் வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளலாம். பிரெட்டோ, பழங்களோ கையில் எடுத்து சென்று சாப்பிடுவதை யாரும் கேலி செய்ய முடியாது. அதனால் கௌரவக் குறைச்சலாக நினைக்க வேண்டாம்.
இவர்களுடைய அடுத்த பிரச்சினை போதிய உடற்பயிற்சியின்மை. ‘அட! சாப்பிடவே நேரமில்ல. இதுல எக்ஸர்சைஸ் எங்க பண்றது?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. கையை வீசியவாறு நடைப்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால் நேரமில்லை என ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு சில சின்ன சின்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். அலுவலகத்திற்கு பேருந்திலோ ரயிலிலோ செல்பவர்கள் பேருந்து / ரயில் நிலையம் அருகில் இருந்தால் வீட்டிலிருந்து நடந்தே சென்று விடலாம்.
உங்கள் அலுவலகம் மிக நவீனமாக இருக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவற்றையெல்லாம் தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறியிறங்கி செய்தால் உங்களுக்கு தனியாக நடைப்பயிற்சி செய்யவேண்டிய அவசியமே இல்லை. லிப்ட் என்பதெல்லாம் வயதானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் உபயோகிக்கட்டும். நாம் ஏன் ஒவ்வொரு முறையும் லிப்ட்டிலேயே செல்ல வேண்டும்? அலுவலகத்தில் ஃபைலை எடுக்க ஒவ்வொருமுறையும் ஆபிஸ் பியூனையே நம்பியிராமல் உங்களால் முடிந்த அளவு நீங்களே எழுந்து சென்று எடுத்துக் கொள்ளுங்கள்.
மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் என் நண்பர் ஒருவர் கிளையண்ட் யாரையாவது பார்க்க சென்றால் (அவசரமாக ஆளைப் பிடித்தாக வேண்டும் என்றில்லாத பட்சத்தில்) பக்கத்து தெருவிலேயே தனது டூவிலரை நிறுத்திவிட்டு கிளையண்டின் வீட்டிற்கு பொடி நடையாக நடந்தே சென்று விடுவார். இப்படி அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் நாம் நடந்துக் கொண்டிருந்தால் நம்மை ஒரு நோயும் அண்டாது. நம் வேலைப் பளுவில் நம் ஆரோக்கியத்தை புறந்தள்ளிவிட முடியாதல்லவா? அதனால் இன்னும் சில டிப்ஸ்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
- எல்லோரா விஜயா
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




wery good msg & your msh thank you