maniyosai.com

You are here: Home பொது ஹெல்த் ப்ளஸ் ஹெல்த் ப்ளஸ் - நோய் தீர்க்கும் ரசனை

ஹெல்த் ப்ளஸ் - நோய் தீர்க்கும் ரசனை

E-mail Print
Share/Save/Bookmark

எதற்கெடுத்தாலும் நேரமில்லை என்பவர்கள் எப்படி தங்கள் உடல்நிலையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதற்கு எங்களால் இயன்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். உடல்நிலையை பாதுகாக்க எப்படி உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம், எப்படி கிடைக்கும் நேரத்தில் நடைப்பயிற்சி செய்யலாம் என பல விஷயங்கள் குறித்துப் பேசியாயிற்று. சரி மனநிலையை எப்படி பராமரிக்கலாம்?

மன அழுத்தம், கவலை, டென்ஷன், கோபம், சுயப்பச்சாதபம் என அனைத்தையும் சேர்த்தே மனநிலை எனக் குறிப்பிட்டுள்ளேன். தான் செய்யும் வேலையில் திருப்தியாக இருப்பவர்கள் பெரும்பாலும் ‘ சே! எனக்கு நேரமேயில்லை’ என சலித்துக் கொள்ளமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் செய்யும் வேலையை நேசிப்பதால் அங்குள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது என்பது ஒருபுறம், மற்றொரு விஷயம் அப்படியே குறைகள் இருந்தாலும் அதை சமாளிக்கத் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் சுயப்பச்சாதபம் வர வாய்ப்பேயில்லை.

ஒருவேளை மனதுக்கு பிடிக்காத ஏதோ ஒரு வேலையை செய்து வந்தாலும் வேறு வழியில்லாத காரணத்தால் அதை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதிலேயே பாதி சுமை இறங்கிவிடும். சரி. நம் விஷயத்துக்கு வருவோம். நாம் செய்யும் வேலையை விரும்பவோ அல்லது மன அழுத்தத்தைக் குறைக்கவோ மிகவும் தேவை நல்ல ரசனை. ரசனை என்றால் உடனே ஆபிஸுக்கு லீவுப் போட்டுவிட்டு எங்கேனும் சுற்றுலா சென்று ரசிக்க வேண்டும் என்றில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே நம் பணி நேரத்திலேயே நாம் ரசித்து மகிழ எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது.

ரசனை என்றால் ஓவியம், சிற்பம் இசைப் போன்ற கலைகளை ரசிப்பது மட்டுமே இல்லை. இக்கலைகள் அனைத்துமே மனிதன் உருவாக்கிய நகல். அசல் கலையை இறைவன் சிருஷ்டித்திருக்கிறார். ஓவியரின் தூரிகையில் உருவான டூப்ளிகேட் அழகை ரசிக்கும் நாம் அதன் ஒரிஜினலான இயற்கையை ரசிக்க மறந்துவிடுகிறோம். இயற்கையழகு ஊட்டி, கொடைக்கானலில் மட்டுமல்ல. நம்மை சுற்றி நிறையவே இருக்கிறது. நாம்தான் கவனிக்க தவறிவிடுகிறோம். இதை ரசிக்க என நாம் தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. வேலையின் நடுவே டீ குடிக்கும் நேரத்தில் அண்ணாந்து பாருங்கள். மிக அழகாய் பரந்து விரிந்த வானம். அதில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் அலைக்கடல் நுரையென வெண்பஞ்சு மேகங்கள். இதை ரசிக்க ஆரம்பித்தாலே நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். வானம்தானே என அலட்சியம் வேண்டாம். அது காட்டும் வர்ணஜாலங்கள் அதிசயிக்க வைக்கும். வானம் காலையில் ஒரு அழகு என்றால் மாலையில் ஒரு அழகு. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் ஆகாயத்தைப் பார்த்தால் விதவிதமான நிறங்களில் இருக்கும்.ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நாளும் அது எப்படி இருக்கிறது எனப் பார்க்க ஆரம்பித்தால் அதுவே நமக்கு ஒரு புதிய பொழுதுப்போக்காகிவிடும்.

வானத்தின் வர்ணஜாலங்களையும், நிலவோடு விளையாடும் தங்க ஜரிகை வான்முகிலையும் ரசிப்பதால் என்ன பலன் என்கிறீர்களா? அது ஓரிரு நிமிடங்கள் நம் கவனத்தை பிரச்சினைகளிலிருந்து திசைத்திருப்பும். நாம் அதை ரசித்துப் பார்க்கும்போது நம் கவலைகள் மறந்து மனம் ஒருமுகப்படுகிறது. மனதை ஒருமுகப் படுத்த தியானம் செய்தல் மிக நல்லதாகும். அது காலையிலோ அல்லது மாலையிலோ நம் வீட்டில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து செய்யலாம். அதுவே பணிக்கிடையே பரப்பரப்பான அலுவலகத்தில் நாம் கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்ய முடியாது. அதனால் அதற்கு மாற்றாக இயற்கையை ரசிக்க ஆரம்பித்தால் அது நம் மனதை ஒருமுகப்படுத்த உதவும். நாம் நம் வேலையை மறுபடியும் புத்துணர்ச்சியோடு தொடங்கலாம். வான், மேகங்கள், நிலா, மரங்கள், மலர்கள், பறவைகள், மழை என நம்மைச் சுற்றி ஏராளமான இயற்கை வளங்கள் குவிந்துள்ளன. நான் குறிப்பிடுபவை கிராமங்களில் மட்டுமல்ல பெருநகரங்களிலும் இருப்பவையே.

இன்றைய அவசர காலகட்டத்தில் பொழுதுப்போக்குக்கென தனியாக நேரம் ஒதுக்கமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கேற்ற வகையில் பொழுதுப்போக்குகளை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரசிக்கும் காட்சிகளை உங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் ஓரிரு நிமிடங்களே ஆகும். டீ குடிக்கும் நேரத்திலோ அல்லது அலுவலக ஜன்னல் வழியாகவோ இயற்கையை ரசிக்கலாம். புகைப்படம் எடுக்கலாம். சில நாட்கள் கழித்து நீங்கள் எடுத்த புகைப்படங்களை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே பிரமிப்பாக இருக்கும். நம்மை சுற்றி இத்தனை அழகுகளா என்று நீங்களே அதிசயிப்பீர்கள்.

இயற்கை மட்டுமின்றி செயற்கையாக இருந்தாலும் உங்களை சுற்றியுள்ளவற்றை கவனியுங்கள். இரவு நேர விளக்குகள், வரிசையாக அமைந்த கட்டடங்கள், என பல அழகுகள் மறைந்துக் கிடக்கும். உங்களுக்கு எப்பொழுதேனும் நேரம் கிடைக்கும் சமயத்தில் இணையதளத்தில் சென்று சிறந்த புகைப்படங்களை தேடிப் பாருங்கள். அதில் பெரும்பாலானவை நம்மை சுற்றியிருக்கும் சாதாரண விஷயங்களாகவே இருக்கும். அத்தனை நாட்கள் நாம் அதை ஏறெடுத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம். அதுவே ஒரு புகைப்படக்காரர் அதை மிக அழகாக புகைப்படம் எடுத்துக் காட்டும்போது, ‘சே! இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே!’ எனத் தோன்றும். அதனால் சில சிறந்த புகைப்படங்களைப் பார்த்தால் சாதாரண விஷயத்தில் அழகைக் கண்டுப்பிடிப்பது எப்படி என அறிந்துக் கொள்ளலாம். முடிந்தால் நீங்களே ஒரு மினி புகைப்படக்காரர் ஆகிவிடலாம்.

இயற்கை அழகு மட்டுமில்லை. நம்மை சுற்றியுள்ள மனிதர்களும் மிகமிக அதிசயமானவர்கள்தான். உலகில் ஏழு அதிசயங்கள் என்கிறோம். ஆனால் உண்மையிலேயே உலகின் முதல் அதிசயம் மனிதன் தான். ஆம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சுபாவம், பழக்கவழக்கம், ஆசை, நிராசை, கற்பனை என ஒருவனைப் போல் இன்னொருவன் இருக்கமாட்டான். நம்மை சுற்றியுள்ள மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தாலே இதுப்புரியும். மிமிக்ரி செய்வதற்கோ கிண்டலிப்பதற்கோ நான் இதை சொல்லவில்லை. நம் ஆபிஸ் பக்கத்து சீட் கேஷியர், டீ கொண்டுவரும் ஆபிஸ் பையன் என ஒவ்வொருவரையும் கவனித்தால் மிக சுவாரசியமாக இருக்கும். வேலையை விட்டுவிட்டு கன்னத்தில் கையூன்றி அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதில்லை. நம் வேலையை செய்தவாறே இவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தால் நம்மை சுற்றிய உலகின் பல பரிமாணங்கள் புலப்படும். அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவராக இருந்தால் ஒரு மூலையில் ஜன்னல் சீட்டில் அமர்ந்து தூங்கியவாறோ அல்லது காதில் ஹியர்போன் மாட்டி பாட்டுக் கேட்டவாறோ செல்வதைவிட சகப் பயணிகளை கவனித்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அவர்களிடம் பேசக்கூட வேண்டாம். கவனித்தாலேப் போதும். அடம்பிடிக்கும் குழந்தை, கண்டிப்பான தாய், கணவன் மனைவி சண்டை( ஒருவருக்கொருவர் பேசாமல் முறைத்துக் கொண்டேயிருப்பர்) என பலதரப்பட்ட மக்கள். ஒவ்வொருவரிடமும் உள்ள தனித்தன்மையை கவனிக்க ஆரம்பித்தால் அதைவிடப் பெரிய பொழுதுப்போக்கு வேறொன்றுமிருக்காது. சலிப்பான பேருந்து பயணம் சுவையானதாகிவிடும்.

இதுப்போல உங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு ரசனையை வளர்த்துக்கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களில் கூட அழகு ஒளிந்துக் கிடக்கிறது. என் தோழி ஒருத்திக்கு தோசை சுடுவதென்றால் மிகப்பிடிக்கும். எத்தனை விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தாலும் அலுத்துக்கொள்ளாமல் தோசை சுட்டுத் தருவாள். அதில் அவளுக்கென்ன சந்தோஷம் என விசாரித்தேன். தோசை மாவு நீராக இருக்கிறது. சூடான தோசைக்கல்லில் அதைப் பரப்பும்போது அதை அழகாக வட்ட வடிவமாக பரப்ப முடிகிறது. ஓரிரு நொடிகளில்  அதில் சின்ன சின்ன குமிழிகள் ஏற்படுகிறது. தோசை ஒருபுறம் பொன்னிறமாகி வருவது புலப்படுகிறது. அப்பொழுது அதைத் திருப்பிப் போட்டால் அவ்வளவு நேரம் நீராக இருந்த மாவு அழகாக தோசையாக மாறி வடிவத்துடன் திருப்பிப் போட முடிகிறது. இந்த இயக்கம் ஒவ்வொரு தோசைக்கும் மாறாமல் ஒரேவாறு நடைப்பெறுவது இயற்கை. ஆனால் அதை அவள் ரசித்து வேடிக்கைப் பார்ப்பாள்.  அல்ப விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு அழகு இருப்பதை உணர்ந்து அதை அவள் ரசிப்பதால் அவள் அதை ஒரு பளுவாக நினைத்ததில்லை. மாறாக தோசை சுடுவதில் உற்சாகமேக் காட்டுவாள். அதுப்போல நாம் செய்யும் தினசரி வேலையிலும் ஏதேனும் ஒரு அழகு மறைந்துக் கிடக்கும். நாம் அதைக் கண்டறிந்து ரசிக்க ஆரம்பித்தால் நம் வேலை நமக்கு ஒரு சுமையாகத் தோன்றாது.

இதுப்போன்ற விஷயங்களில் ஈடுப்படுவதால் நமக்கு நாள் முழுவதும் வேலைப்பளு இருந்தாலும் உற்சாகமும் சேர்ந்து வரும். நம் பணியிலோ நம்மை சுற்றியிருப்பவர்களிடமோ நாம் குறைக் காண்பதை விட்டுவிட்டு அழகான ரசனையை வளர்ந்துக் கொண்டால் நம் பணித்திறனும் அதிகரிக்கும்.

 

-எல்லோரா விஜயா




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 02 August 2011 20:56 )  


More and More


கிட்டதட்ட

28 February 2012, 18.39 செய்திகள்
மேல்சிகிச்சை : சோனியா வெளிநாட்டு பயணம்
புதுதில்லி: கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருக்கும் சோனியா...மேலும்...
0 Comments , 82 Hits

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits