மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர், புகைப்படக்காரர், பத்திரிகையாளர், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்டவர் திரு. எஸ்.வி.சேகர். இவரது யதார்த்தமான, வெளிப்படையானப் பேச்சினாலும் நடவடிக்கைகளாலும் இவரைச் சுற்றி பரபரப்பிற்கு பஞ்சமில்லை. அவரைப் பற்றி பல ஊடகங்களும் பல விதமான விமர்சனங்கள் செய்துக் கொண்டிருக்க நம் மணியோசை. காமிற்காக இங்கே மனம் திறக்கிறார்.
அதிமுகவில் சேர்ந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
அதிமுகவில் சேர்ந்ததால் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. புகழுடன் இருக்கிறவர்களும், பப்ளிக்ல செல்வாக்குல இருக்கிறவர்களும் ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது உடனடியா ஒரு மிகப் பெரிய மரியாதை இருக்கும் என்பதைக் கற்றுக் கொண்டேன். அதே மாதிரி தனிப்பட்ட மனுஷனோட புகழும், செல்வாக்கும், அதுவும் அவன் தனித்துவத்துடனேயே வலம்வரும் சூழ்நிலையில் அக்கட்சியில் இருக்கிறவர்களிடம் எதிர்ப்பை உருவாக்கும்னும் தெரிந்துக் கொண்டேன். அதாவது பலமுகங்களைக் கொண்ட ஒருவரின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சியை மட்டுமே முகமாகக் கொண்டவங்களுக்கு பொறாமையையும், கொந்தளிப்பையும் கொடுக்கும்.
எனக்கு பலமுகம் அடையாளம் இருக்கிறது. நான் ஒரு நடிகன், பத்திரிகையாளன், புகைப்படக் கலைஞன், டைரக்டர், எடிட்டர், சின்னத்திரை, பெரியத்திரை கலைஞன், ஒரு சமூக சேவகன். எத்தனையோ இடங்களில் ரத்த தானம் செய்வதில் இருந்து பல சேவைகளை செய்துக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரி எனக்கு பலமுகங்கள் உண்டு. அதை எல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லா இடங்களிலும் எம்.எல்.ஏங்கிற முகத்தையே மாட்டிக் கொண்டு சுத்தமுடியாது. என்னோட முகம்தான் அதிமுகவுக்கு பயன்படனும்னு நினைத்தேனேத் தவிர அதிமுக முகத்தை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.
அதிமுகவில் உங்களுக்கு இருந்த குறைகளை ஜெயலலிதாவிடம் விளக்க முயற்சித்தீர்களா? அதற்கு அவரது reaction என்னவாக இருந்தது.?
குறை சொல்வதற்கு இன்னொரு பெயர் கோள்மூட்டுவது. இப்பொழுது ஜெயலலிதாவிடம் ஏதாவது குறையிருந்தால் அதை அவரிடம் நேரிடையாக சொன்னால் அதை அவர் திருத்திக் கொள்ள வாய்ப்புண்டு. அது ஒரு healthy discussion ஆக இருக்கும். மற்றவர்கள் பற்றிய குறைகளை நான் தினமும் போய் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது அடுத்தவர்களின் காலைத் தட்டிவிட்டு நான் ஓட முயற்சிப்பது மாதிரி. ஒரு கோடி உறுப்பினர்கள் கொண்டக் கட்சி அதிமுக. அதில் நான் போய் ஒன்றும் மாற்றி விட முடியாது. எம்.ஜி.ஆர் என்பது ஒரு பெரிய அலை. அவருக்கு என்று இப்பவும் ஒரு ஓட்டு வங்கி இருக்கிறது. அப்பேர்பட்டக் கட்சியில் நான் போய் என்ன மாற்றி விட முடியும்? மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டும், நீங்கள் உங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்?
எதுக்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும்? அதிமுக என்பதற்காக மட்டும் எனக்கு ஓட்டுப் போடவில்லை. எஸ்.வி.சேகர் என்ற ஒரு தனி மனிதனையும் பார்த்துதான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்பிற்காகவும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தல் வந்தால் யாருடையப் பணம் விரயமாகும்? இப்ப நான் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ வாக என் தொகுதி வேலைகளை செய்துக் கொண்டுதானே இருக்கிறேன்! மக்களுக்கு அவர்கள் கோரிக்கை நிறைவேறும் போது நான் அதிமுக எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன? திமுக எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன? மக்கள் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வரும்போது அவரதுக் கட்சியைப் பார்ப்பதில்லை. தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று மட்டும்தான் பார்க்கிறார்கள். நான் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்கும் உரிமை மக்களுக்கு மட்டும்தான் உண்டு. என்னை ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ வாக்கியவர்கள் அவர்கள். நான் என் சுயலாப நஷ்டத்திற்காக ராஜினாமா செய்துவிடவில்லை. இப்ப மயிலாப்பூர் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நான் இப்போது என்னை ஆதரித்து ஓட்டுப் போட்ட அதிமுக மக்களுக்காகவும் உழைக்கிறேன். என்னை எதிர்த்து ஓட்டுப் போட்ட திமுக மக்களுக்காகவும் வேலை செய்கிறேன்.
பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அண்மைக் காலமாக கூறி வருகிறீர்கள். இந்தக் கோரிக்கையை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரிடம் முன் வைத்தீர்களா?
ஜெயலலிதா இதைக் கண்டிப்பாக செய்யமாட்டார். ஏனென்றால் அவர் தானும் பிராமணர்தான் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு விட்டுவிடுவார். ஆனால் இப்பொழுது அவரைப் போல, இன்னும் சில உயர்மட்டத்தில் இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிராமணர்கள் இருக்கிறார்கள். சுடுகாட்டில் வெட்டியானுக்கு இணையாக பிணத்தைத் தூக்கிப் போட்டு ஜீவனம் நடத்தும் ஏழை பிராமணர்களுக்காக இடஒதுக்கீடு கேட்கிறேன்.
அன்றாடம் இந்துக்களையும், பிராமணர்களையும் திட்டி வருகிறார் கருணாநிதி. ஒருவேளை, நீங்கள் திமுகவில் சேர்ந்தால், இந்த அளவு பிராமணர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?
இதற்கு தெளிவான ஒரு விளக்கம் சொல்ல வேண்டும். திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து வந்ததுதான் திமுகவும், அதிமுகவும். அவர்கள் அடிப்படையாக ஒருசிலக் கொள்கைகளை வைத்திருப்பார்கள். ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. இப்பொழுது நீர்த்து போய்விட்டது. பிராமணர்களை யாரும் திட்டுவதில்லை. பிராமணீயம் என்ற பெயரில் உள்ள ஒரு சில விஷயங்களை எதிர்க்கிறார்கள். அவ்வளவு ஏன்? அவர்கள் என்னிடம் நல்லவிதமாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள். இப்பொழுது நான் திமுகவினரை சந்திக்கும்போது கூட நெற்றியில் விபூதியுடன் பூணூல் தெரியத்தான் நின்றுப் பேசுகிறேன். என்னை யார் என்ன சொல்கிறார்கள்? திமுகவில் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறீர்கள். அதற்காக ஆலயங்கள், சர்ச்சுகள், மசூதிகளை இழுத்து மூடியா விட்டார்கள். வழிப்பாட்டு நிலையங்களில் நடக்கும் அன்னதானங்களைக் கூட நிறுத்தவில்லையே. எல்லாம் தொடர்ந்து நடந்துக் கொண்டுதானே இருக்கிறது?
கருணாநிதி கோயிலுக்கு போவதில்லை. ஆனால் அவர் வீட்டில் அனைவரும் கோயிலுக்கு சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அவர் தடுப்பதில்லையே! அண்மையில் சாய்பாபா அவரது இல்லத்திற்கு வந்தப்பொழுது கூட ஒரு ஆன்மீகவாதி என் வீட்டிற்கு ஏன் வரவேண்டும் எனக் கூறவில்லையே! நன்கு வரவேற்று உபசரிக்கத்தானே செய்தார். நீண்டகாலமாக இருக்கும் ஒரு கொள்கையில் இருந்து சறுக்கினால், வாழ்க்கையிலேயே சறுக்குவது போன்ற ஒரு பிரமை ஏற்படும். அதனால்தான் அவர் அப்படி செய்வதில்லை.
சமீபத்தில் ஒரு தமிழ் இணைய தளத்திற்கு நீங்கள் அளித்த பேட்டியில், 2004ல் சங்கராச்சாரியாரைக் கைது செய்ததால்தான் ஜெயலலிதாவால், அதன் பின்னர் எந்த தேர்தலிலும் வெற்றிப் பெற முடியவில்லை என சொல்லியிருந்தீர்கள். சங்கராச்சாரியார் கைதுப் பற்றி தெரிந்தும் நீங்கள் அதன்பின் அதிமுகவின் சார்பாக மயிலைத் தொகுதியில், அதிமுக சார்பில் நின்ற நீங்கள் ஜெயித்துவிட்டீர்களே?
நான் சங்கராச்சாரியாரின் ஆசியினால்தான் ஜெயித்தேனேத் தவிர சங்கராச்சாரியாரை எதிர்த்தவன் என்று ஜெயிக்கவில்லை. அவருடையக் கைதுக்கு முன்பு அவரது படம் எனது வீட்டில் வணங்கக்கூடிய ஒரு உயரிய இடத்தில் எங்கு இருந்ததோ அதே இடத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறது. அவரது கைது சமயத்தில்கூட நான் என்ன கூறினேன் என்றால்,’ சங்கராச்சாரியார் கைது துரதிர்ஷ்டமானது. அவர் விரைவில் நிராபராதி என நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார்.’ என்று தானேக் கூறினேன். நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். எப்பவும் கட்சியில் ஒரு கட்டுப்பாட்டுடன், கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதால்தான் அன்று அமைதியாக இருந்தேன்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டப் போது, தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது என அதிமுக அரசை, கலைஞரேப் பாராட்டினாரே. அது பற்றி தங்கள் கருத்து?
அரசு என்ற முறையில் பாராட்டினார் அவ்வளவுதான். பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் கருத்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டேயிருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அன்று ‘அன்பு சகோதரி ஜெயலலிதா...’ என்றார். இன்று ‘என்னையேக் கைது செய்ய முயற்சிக்கிறார்....’ என்று கூறிவிட்டு கூட்டணி வேண்டாம் என்கிறார். காலையில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்று செயற்குழு முடிவெடுக்கும் என்கிறார். மாலையில் கூட்டணி வேண்டாம் என்று செயற்க்குழு முடிவெடுத்துவிட்டது என்கிறார். இதெல்லாம் அரசியல் விளையாட்டு. அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘மறப்போம்; மன்னிப்போம்’ என்பது உண்மையில் அரசியல்வாதிகளின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்குத் தான்.
இவ்வளவு யதார்த்தமாகப் பேசுகிறீர்களே? இத்தனை வெளிப்படையாகப் பேசினால் அரசியலில் வெற்றிப் பெற முடியுமா?
இப்படி யதார்த்தமாக பேசுவதுதான் என்னுடையப் பிரச்சினையே. முழுநேர அரசியல்வாதியாக இல்லாததினால்தான் என்னால் இப்படியெல்லாம் பேச முடிகிறது. ஆனாலும் நான் வெற்றிகரமான அரசியல்வாதியாக தானே இருக்கிறேன். 17 ஆண்டுகளாக அதிமுக வெற்றிப்பெற முடியாத பகுதியில் நான் வெற்றிப் பெற்றிருக்கிறேன். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது; எல்லா பதில்களிலும் ஒரு கேள்வியும் இருக்கிறது. நீங்க எப்படி மாத்தி மாத்திக் கேட்டாலும் பதில் கூறமுடியும்.
நான் மேற்குறிப்பிட்ட அதே பேட்டியில், திமுக உங்களை ராஜ்யசபா எம்.பி ஆக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அதிமுகவிலிருந்து விலக இதுவும் ஒரு காரணமா?
நான் ராஜ்யசபா எம்.பி ஆவேன் என்றுதானே கூறினேனேத் தவிர திமுக என்னை எம்.பி ஆக்க வேண்டும் என்று கூறவில்லை. 'தமிழ்நாட்டுக்கு மந்திரியாக இரு போதும்' என்றால் சந்தோஷம். அதாவது எனக்கு எதிர்பார்ப்புகள் எதுவும் கிடையாது. கிடைப்பதை எப்பொழுதுமே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்.
தற்போது நடிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நடந்து வரும் பிரச்சினைப் பற்றி தங்கள் கருத்து?
இப்பொழுது அதைப் பற்றி பெரிதாக எதையும் கூற விரும்பவில்லை. நான் ஒரு நடிகன். அதே சமயம் பத்திரிகையாளர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர். பத்திரிகைகள் இல்லாமல் சினிமா இல்லை. சினிமா இல்லாமல் பத்திரிகைகள் இல்லை. இருவரும் நட்புடன் இருத்தல் நல்லது. இந்த பிரச்சினை சுமூகமாக முடிய வேண்டும் என்றே விரும்புகிறேன்.
மணியோசை.காம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் இன்று ஒரு வெற்றிகரமான சினிமா நடிகனாகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கியக் காரணம் என் கடவுள் நம்பிக்கை. 'If God is with us; who can be against us;' என்பதில் நான் தீவிர நம்பிக்கையுடையவன். அடுத்ததாக நான் யாரைப் பற்றியும் குறைக் கூறிக் கொண்டிருக்க மாட்டேன். உதாரணத்திற்கு, இப்பொழுது நான் அதிமுகவில் இருந்து வெளியேற்றப் பட்டாலும் நான் ஜெயலலிதாவைப் பற்றியோ, சசிகலாவைப் பற்றியோ ஒரு வார்த்தைக் கூடத் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் இதுவரை சசிகலாவை சந்தித்தது கூட இல்லை. அப்படியிருக்கும் பொழுது நான் அவரைப் பற்றித் தவறாக பேசமுடியுமா?
எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. ’குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது என் கருத்து. உதாரணத்திற்கு, என்னிடம் வரும் யாராவது, ‘ காபி சாப்பிடலாமா?’ என்றுக் கேட்டு நான் ஒத்துக்கொண்டால் அதுக் கூட லஞ்சம்தான். நாம் காபிதானே என்று நினைப்போம், ஏதோ நம்மிடம் பாசத்துடன் காபி சாப்பிடலாமா என்றுக் கேட்கிறார். நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் நம்மை மிகுந்த தலைகணம் பிடித்தவன் என்று நினைத்து விடுவார்கள் என்று எண்ணி நாம் காபி சாப்பிட ஒப்புக்கொண்டால், அவன் வெளியேப் போய், ‘ அந்த எம்.எல்.ஏவுக்கு ஒரு காபி லஞ்சமாக வாங்கிக் கொடுத்து காரியத்தை முடிக்க வேண்டியதாயிற்று.’ என பேசுவான். அவனுக்கு நாம் என்ன பதில் சொல்லமுடியும்? அதனால் எதுவாக இருந்தாலும் நாம் நம் மனசாட்சிப் படி நடந்துக் கொள்ளவேண்டும். நாம் கேமராவின் கண்களுக்கோ, போலிசாரின் கண்களுக்கோத் தெரியாமல் ஒரு தவறு செய்துவிடலாம். ஆனால் கடவுளின் கண்களிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.
இலவசப் பொருட்கள் தருகிறேன் என்றால், ‘யாராவது யாருக்காவது ஏதாவது ஒன்று காரணமில்லாமல் தருவார்களா?’ என்றெல்லாம் யோசிப்பதில்லை. இத்தனைப் பொருட்கள் இலவசமாகத் தரவேண்டும் என்றால் அதற்கெல்லாம் எங்கிருந்து வருகிறது வருமானம்? அப்படியிருக்கும் பொழுது மதுக்கடைகளை மூடிவிட முடியுமா? ஃபிரீயாகக் கொடுத்தால் பினாயிலைக் கூட குடிப்பார்கள் என்று இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். எதுவுமே உலகத்தில் இலவசமல்ல. ஒரு கார் வாங்கினால் ஒரு ஸ்டீரியோ இலவசம் என்றால் ’சரி. இப்பொழுது ஸ்டீரியோவைக் கொடுங்கள். காரைப் பிற்பாடு வாங்கிக் கொள்கிறேன்...’ என்றால் தருவார்களா? அவனவன் தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் தான் உழைத்தால்தான் கிடைக்கும் என்று நம்ப வேண்டும். அதில் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதுவிலக்கு, லஞ்ச ஒழிப்பு போன்றவையெல்லாம் சாத்தியமாகும்.
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|






