என்னிடம் ஒரு ஆங்கிலேய பயணி தானாக வந்து பேச்சுக் கொடுத்தார். அவர் என்னை விட மூத்தவராக இருந்தார். நான் என்ன சாப்பிட்டேன், எங்கிருந்து எங்கு சென்று கொண்டிருந்தேன், ஏன் கூச்சத்துடன் இருக்கிறேன் என பலவற்றையும் கேட்டறிந்தார். கலகலவென இருக்கும் படியும் உணவருந்த மேசைக்கு வரும் படியும் அவர் என்னை வலியுறுத்தினார்.
மாமிசம் குறித்த என் கருத்தைக் கேட்டு அவர் சிரித்தார். 'இவ்வளவு நாட்கள் மாமிசத்தை தவிர்த்து விட்டாய். ஆனால், இனி உன் முடிவை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். குளிர் பிரதேசமான இங்கிலாந்தில் மாமிசம் இல்லாமல் ஒருவரால் வாழவே முடியாது.' என்றார் நட்பு மிகுதியுடன்.
'உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி.ஆனால், மாமிசத்தை ஒரு போதும் தொட மாட்டேன் என என் தாயாரிடம் நான் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். ஆதலால், மாமிசம் உண்பதைப் பற்றி என்னால் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. ஒரு வேளை, மாமிசம் உண்ணாமல் அங்கு வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டால், நான் இந்தியா திரும்பி விடுவேனே தவிர மாமிசம் உண்ண மாட்டேன்.' என்றேன்.
ஒரு வழியாக, சவுதாம்ப்டன் வந்தடைந்தோம். நான் தரையிறங்கும் போது அணிவதற்காக என் நண்பன் வாங்கி தந்திருந்த வெள்ளை அங்கியை அணிந்திருந்தேன். அங்கு நான் மட்டும் வெள்ளை அங்கி அணிந்திருந்தது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. க்ரிண்ட்லே அண்ட் கோ -வை சேர்ந்த என் முகவரிடம் உன் உடைமைகளை கொடுத்தேன்.
டாக்டர்.பி.ஜே.மேத்தா, தல்பத்ராம் சுக்லா, பிரின்ஸ் ரஞ்சித்சிங்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகியோருக்கு அறிமுக குறிப்பை தயார் செய்து வைத்திருந்தேன். கப்பலில் வந்த ஒருவர் லண்டன் விக்டோரியா விடுதியில் தங்கும் படி அறிவுறுத்தியிருந்தார்.அதனால், மஜும்தாரும்,நானும் அங்கு சென்றோம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் கிரிண்ட்லேயிடம் இருந்து என் உடைமைகளை எடுத்து வர இயலாது என்பதை அறிந்து நான் விரக்தியடைந்தேன்.
அன்றைய தினமே மாலை 8 மணிக்கு டாக்டர். மேத்தா என்னை நேரில் பார்க்க வரும் படி அழைப்பு விடுத்தார். நான் சென்றதும் தடல்புடலாக உபசரித்தார். என் வெள்ளை சட்டையை பார்த்து புன்னகைத்தார். பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர் கீழே வைத்திருந்த தொப்பியை கையில் எடுத்து உட்புறத்தில் தடவிப் பார்த்தேன். நான் செய்வதை கோபத்துடன் பார்த்த மேத்தா என்னை தடுத்து நிறுத்தினார்.
'மற்றவர்கள் பொருட்களை தொட வேண்டாம்; முதல் தடவை சந்திக்கும் போதே இந்தியாவில் நாம் செய்வது போல் கேள்விகளை கேட்க வேண்டாம்; சத்தமாக பேச வேண்டாம்; யாரையும் 'ஸார்' என அழைக்க வேண்டாம். வேலையாட்கள்தான் தங்கள் முதலாளிகளை அப்படி அழைப்பார்கள்.' என அடுக்கடுக்கான அறிவுரைகளை அவர் வழங்கினார். மேலும், விடுதியில் தங்கினால் அதிக செலவாகும் என்பதால் தனி வீடு எடுத்து தங்கும் படி அவர் சொன்னார். அவரின் இந்த யோசனை பற்றி திங்கள் கிழமைக்கு மேல் முடிவெடுக்கலாம் என நாங்கள் நினைத்துக் கொண்டோம்.
எங்களுடன் கப்பலில் வந்த சிந்தி நண்பர் ஒருவர், எங்களுக்காக அறை தேடி தருவதாக உறுதியளித்தார். திங்களன்று எங்கள் உடைமைகள் எங்களை வந்தடைந்தன. பண பட்டுவாடாக்களை முடித்துக் கொண்டு, சிந்தி நண்பர் பார்த்து வைத்திருந்த அறைக்கு சென்றோம்.
இரண்டு நாட்கள் தங்கியதற்கு மூன்று டாலர் விடுதி கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. புது அறையில் கொஞ்சம் உப்புசமாகவே இருந்தது. என் வீடு மற்றும் நாடு குறித்த நினைவாகவே இருந்தது. என் தாயாரை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
வீட்டு ஞாபகம் இரவில் என்னை தூங்க விடாமல் செய்தது. என் இன்னலை யாரிடம் சொல்லவது என எனக்கு தெரியவில்லை. மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள் என அனைத்தும் எனக்கு புதிதாக இருந்தது.ஆங்கில புலமையும் எனக்கு அவ்வளவாக இல்லை. இதில், சைவ உணவு பழக்கம் வேறு!
உண்ணும் பதார்த்தங்களெல்லாம் உப்புசப்பில்லாமல் இருந்தது. இவற்றிற்காக இந்தியா திரும்பி செல்ல முடியாது. வந்து விட்டோம்; மூன்று ஆண்டுகளை ஓட்டி விட்டுதான் நாடு திரும்ப வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
- தொடரும்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev |
|---|


