பிறப்பும் பால்ய வயதும்:
காந்தி என்பது பான்யா இனத்தின் ஒரு அங்கம். அவர்கள் மளிகை வியாபாரமே பெரிதும் செய்து வந்தனர். மூன்று தலைமுறைகளாக, என் தாத்தா காலம் முதல், என் குடும்பத்தினர் பலர், கத்தியாவார் பிரதேசத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்து வருகின்றனர். என் தாத்தா உத்தம்சந்த் காந்தி ஒரு கொள்கைவாதி.ஒரு முறை, அவர் திவானாக இருந்த போர்பந்தரை விட்டு வெளியேறி ஜுனாகாத்தில் தஞ்சம் புகுமாறு வற்புறுத்தப்பட்டார். ஜுனாகாத் நவாபை இடது கையால் சல்யூட் செய்தாராம். அதை அவமரியாதையாக கருதி, அதற்கான விளக்கத்தை கேட்ட போது, என் வலது கையை ஏற்கனவே போர்பந்தருக்கு அர்பணித்து விட்டேன் என சொன்னாராம்.
உத்தம்சந்த் காந்தி முதல் மனைவி மறைவிற்கு பிறகு மறு மணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி மூலம் 4 குழந்தைகளை ஈன்ற அவர், மறு மனைவி மூலம் 2 குழந்தைகளை ஈன்றார். இந்த சங்கதியெல்லாம் சிறு வயதில் எனக்கு தெரியாது. இதில் ஐந்தாவது சகோதரர்தான் கரம்சந்த் காந்தி. ஆறாவது துளசிதாஸ் காந்தி. இவர்கள் இருவருமே போர்பந்தரை ஆட்சி செய்துள்ளனர். கரம்சந்த் காந்தி என் தந்தை. ராஜ்கோட் பகுதியின் முக்கிய மந்திரியாக சில காலம் இருந்த இவர், பிறகு வன்கெனர் பகுதியின் முக்கிய மந்திரியாக இருந்தார். அவர் இறக்கும் போது ராஜ்கோட் மாகாண ஓய்வூதியம் வாங்கி கொண்டிருந்தார்.
கரம்சந்த் காந்தி, மனைவிகள் இறக்க இறக்க அடுத்தடுத்து திருமணங்கள் செய்துக்கொண்டார்.அவருக்கு 4 மனைவிகள். முதல் இரண்டு மனைவிகள் மூலம் இரண்டு பெண்களை ஈன்றார். அவர் கடைசி மனைவி புத்திலிபாய் மூலம் ஒரு பெண்ணும் மூன்று ஆண் குழந்தைகளையும் ஈன்றார். நான் தான் கடைக்குட்டி.
என் தந்தை கொள்கை பிடிப்புள்ளவர். நேர்மையானவர். ஆனால், கொஞ்சம் முன் கோபம் அதிகம். அவர் நாற்பதாவது வயதில் நான்காவது மணம் முடித்தார். அவர் நேர்மை குறித்து குடும்பத்தினரும் வெளியாட்களும் நன்கு அறிந்திருந்தனர். அவரது தேசபக்தி பிரசித்தம்.
என் தந்தைக்கு சொத்து சேர்க்கும் ஆசையே இருந்ததில்லை. எங்களுக்கு மிக குறைவான சொத்தையே விட்டுவிட்டு சென்றார்.
அவர் அனுபவம் மூலமே அதிகம் பயின்றவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி கல்வி பயின்றார். வரலாறு, பூலோகவியல் பற்றியெல்லாம் அவருக்கு தெரியாது,பாவம். ஆனால், நூற்றுக்கணக்கானோரை கட்டி மேய்ப்பதில் அவர் கில்லாடி.மத ரீதியிலும் அவருக்கு ஞானம் மிக குறைவு. இருந்தாலும், அவர் இந்து மத கோயில்களுக்கு அதிகம் செல்வதையும், மத சொற்பொழிவுகள் கேட்பதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார். அவர் இறக்கும் தருவாயில், பிராமண நண்பரின் ஆலோசனையின் பேரில், பகவத் கீதை படிக்க தொடங்கினார். அடிக்கடி சில முக்கிய ஸ்லோகங்களை உரக்க சொல்வார்.
அம்மா பற்றி சொன்னாலே இன்றும் என் நினைவில் இருப்பது அவரது பக்தியே. தினமும் பூஜை முடிக்காமல் சாப்பிட மாட்டார். ஹவேலியில் இருக்கும் வைணவ கோயிலுக்கு தினமும் சென்று வருவது அவருக்கு பிடிக்கும். சதுர் மாத விரதம் செய்ய அவர் தவறியதாக எனக்கு நினைவில்லை. மிக கடினமாக ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்வார். அது நிறைவேறும் வரை விரதத்தை விட மாட்டார். அவர் உடல் நிலை, அவரது விரதத்தை தடுத்ததே இல்லை. சதுர் மாதங்களில் தினமும் ஒரு வேளை உணவே. சதுர் மாதங்களில் சூரியனை பார்க்காமல் அவர் உணவருந்த மாட்டார். நாங்கள் சிறு வயதில், சூரியன் தெரிகிறதா என்று வானத்தை பார்த்த படியே வெளியில் நிற்போம். சூரியன் லேசாக கண்ணில் பட்டால், அம்மாவுக்கு அந்த தகவலை முந்திக் கொண்டு சொல்வோம். வேகமாக அந்தக் காட்சியை பார்க்க வெளியே ஓடி வருவார். அதற்குள் சூரியன் அவரசப் பட்டு மேகங்கள் பின்னால் மறைந்துக் கொண்டால், அவர் உணவு கட். முகத்தில் உற்சாகத்துடன், ‘பரவாயில்லை. இன்னிக்கு நான் சாப்பிடக்கூடாதுனு கடவுள் நினைக்கிறாரோ என்னவோ' என்று எதுவுமே நடக்காதது போல் தன் பணிகளை கவனிக்க உள்ளே சென்று விடுவார்.
என் அம்மா படு சுட்டி. அரசியல் சமாச்சாரங்கள் அனைத்தும் அத்துப்படி. பலருடன் அரசியல் அரட்டை அடிப்பதை நான் பார்த்துள்ளேன்.
இந்தத் தாய், தந்தையருக்கே அக்டோபர் 2 1869 நான் பிறந்தேன். போர்பந்தரில் குழந்தை பருவத்தைக் கழித்தேன். என்னை பள்ளியில் சேர்த்தது லேசாக ஞாபகத்தில் உள்ளது. வாய்பாடு கற்க படாத பாடு பட்டேன். எங்கள் ஆசிரியர்களை பட்டப்பெயர்களை சொல்லி அழைத்தது தவிர அன்றை நாட்களை பற்றி அவ்வளவாக ஞாபகம் இல்லை.
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|




