ஜாதி தலைவரின் பேச்சைக் கேட்டு ஒரு வேளை என் அண்ணன் நான் வெளிநாடு செல்ல சம்மதிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? நான் அயல்நாடு செல்ல ஏதாவது தடை ஏற்பட்டு விடுமோ என மிகவும் கலக்கம் அடைந்தேன். நான் குழப்பமாக இருந்த சூழ்நிலையில் எனக்கு தெரிந்த வழக்கறிஞர் கடல் மார்க்கமாக செப்டம்பர் 4ம் தேதி இங்கிலாந்து செல்லவிருந்தது எனக்கு தெரிய வந்தது. என் அண்ணனின் நண்பரிடம் இதைப் பற்றி கூறினேன்.
வெளிநாடு செல்ல இத்தகைய வாய்ப்பை தவர விடக் கூடாது என்று அவரும் கூறினார். என் அண்ணனும் எனக்கு அனுமதி அளித்தார். நேரத்தை வீணடிக்க முடியாத ஒரு சூழல். எனக்கு வேண்டிய பணத்தை கொடுக்கும் படி என் மச்சானிடம் கேட்டேன். ஆனால், ஜாதி தலைவர் என்னை வெளிநாடு செல்ல அனுமதிக்காததால், அவரை மீறி தன்னால் எதுவும் செய்ய இயலாது என அவர் கை விரித்து விட்டார். என் குடும்ப நண்பரிடம் கடன் கேட்டேன். அந்தப் பணத்தை என் அண்ணனிடம் பிடித்துக் கொள்ளும் படி நான் கேட்டுக் கொண்டேன். அந்த நண்பரும் பெரிய மனதுடன் என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதோடு என்னை ஊக்கமும் படுத்தினார்.
கடனாக வாங்கிய பணத்தில் கப்பலில் செல்ல பயணச்சீட்டு வாங்கினேன். வெளிநாட்டு பயணத்துக்கு அடுத்து தயாராக வேண்டிய கட்டாயம். என் நண்பன் ஒருவன் ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்ததால் அவனுக்கு இதில் அனுபவம் உண்டு. எனக்கு தேவையான துணிமணிகளை அவன் ஏற்பாடு செய்து கொடுத்தான். சில உடைகள் எனக்கு பிடித்திருந்தது. சிலவற்றை எனக்கு பிடிக்கவில்லை. அவர் வாங்கி கொடுத்திருந்த கழுத்து டையை (tie) நான் அணிந்துக் கொள்ளவே இல்லை.
மேல் அங்கியும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இவை அனைத்தும் இங்கிலாந்து செல்லும் என் ஆர்வத்துக்கு எதிரில் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டன. திரியாம் பக்ராய் மசூம்தார் என்ற எனக்கு தெரிந்த வழக்கறிஞர் செல்லும் கப்பல் அறையிலேயே எனக்கும் இருக்கை முன்பதிவு செய்யப் பட்டது. அவர் மூத்தவராக இருந்ததால் உலக ஞானம் அவருக்கு அதிகம். பதினெட்டு வயதை நெருங்கி வந்த எனக்கு உலக அனுபவம் அவ்வளவாக இல்லை. என்னைப் பற்றி கவலை பட வேண்டாம் என மசூம்தார் என் நண்பர்களிடம் தெரிவித்தனர்.
செப்டம்பர் 4, பம்பாயில் இருந்து ஒரு வழியாக புறப்பட்டேன்.
கடல் பயணத்தில் எனக்கு எந்த உபாதையும் ஏற்படவில்லை. சில நாட்கள் ஆனவுடன் நான் நத்தை போல் சுருங்க ஆரம்பித்துவிட்டேன். கப்பல் சேவகர்களிடம் கூட பேச எனக்கு கூச்சமாக இருந்தது. ஆங்கிலம் பேசி எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை. மசூம்தார் தவிர கப்பலில் அனைவரும் ஆங்கிலேயர்கள். என்னிடம் யாராவது வந்து பேச்சு கொடுத்தால், அவர்கள் பேசுவது எனக்கு புரியுமே தவிர, பதிலளிக்க முடியாது! ஒவ்வொரு வரியையும் மனதில் அமைத்துக் கொண்டு யோசித்து யோசித்து பேச வேண்டியிருந்தது. கத்திகளையும், கரண்டிகளையும் வைத்து சாப்பிடுவதற்கு எனக்கு தெரியாது. சாப்பாட்டில் சைவம் எது என கேட்கவும் பயமாக இருந்தது. அதனால், நான் கையில் வைத்திருந்த பழங்களையும், இனிப்புகளையும் மட்டும் பயணத்தின் போது உட்கொண்டேன். கூச்சத்தின் காரணமாக என் அறையிலேயே நாள் முழுவதும் முடங்கிக் கிடந்தேன். சக பயணிகளுடன் கூச்சப் படாமல் பேசும் படி மசூம்தார் என்னை வற்புறுத்தி வந்தார். வழக்கறிஞர்கள் அதிகம் பேச வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தவறுகளைப் பற்றி கவலை படாமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலம் பேசும் படி அவர் சொன்னார். அவர் என்ன சொல்லியும் என் கூச்சத்தை என்னால் வெல்ல முடியவில்லை.
- தொடரும்...
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


