மனிதனாக பிறந்தாலும் தன் வாழ்க்கையை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்பவர்கள் தெய்வமாக போற்றப் படுவர். அப்படி ஒரு பிறவிதான் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா.
ஈஸ்வரம்மாவுக்கும், பெத்தவெங்கம ராஜு ரத்னாகரமுக்கும் எட்டாவது குழந்தையாக நவம்பர் 23, 1926ம் ஆண்டு பிறந்த குழந்தைதான் சத்ய சாய்பாபா. சத்யநாராயண விரதம் மேற்கொண்டு பிறந்ததால் சத்யநாராயண ராஜு என இவருக்கு ஆசைஆசையாய் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
சிறு வயதிலேயே ஆழ்ந்த இசையறிவும், இலக்கிய திறமையும் கொண்டிருந்தான் சிறுவன் சத்யநாராயணன்.
மார்ச் 8, 1940ம் ஆண்டு சத்யநாராயணனை தேள் கொட்டியுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட ஆரம்பித்தது. தனியாக சிரிக்கவும், தனியாக அழவும் ஆரம்பித்தார். அது வரை அவருக்கு பரிச்சயம் இல்லாத சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை சொல்ல ஆரம்பித்தது, சுற்றி இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவனுடைய நடவடிக்கைகளைப் பார்த்த அவனுடைய தந்தை, அவனுக்கு பேய் பிடித்து விட்டது என எண்ணி, கோலால் அடித்து, 'நீ யார்?' எனக் கேட்டாராம். அதற்கு 'நான்தான் சாய்பாபா' எனக் கூறியுள்ளான் 14 வயதே ஆன சத்யநாராயணன். சத்யநாராயணன் பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சீரடி சாய்பாபாவின் மறுபிறவிதான் சத்யநாராயணன் என மக்கள் நம்ப ஆரம்பித்தனர். அதன் பிற்கு, அவரை சத்ய சாய்பாபா என அழைக்க தொடங்கினர்.
புட்டபர்த்தியில், 1944ம் ஆண்டு சத்ய சாய்பாபாவுக்கு அவரது பக்தர்களால் ஆசிரமம் நிறுவப் பட்டது. தற்போதைய ஆசிரமமான பிரசாந்தினி நிலையத்தின் கட்டுமானப் பணி 1948ல் தொடங்கி 1950ம் ஆண்டு முடிக்கப் பட்டது. 1954ம் ஆண்டு சத்யசாய்பாபா புட்டபர்த்தியில் இலவச பொது மருத்துவமனையை தொடங்கினார்.
மனிதகுலம் தழைக்க பல நற்காரியங்களை சத்ய சாய்பாபா மேற்கொண்டு வருகிறார். இலவச மருத்துவமனைகளும், கல்வி நிலையங்களும் 166 நாடுகளில் அவரால் நடத்தப் பட்டு வருகிறது. ஸ்ரீ சத்யசாய் பல்கலைக்கழகத்தை புட்டபர்த்தி, பெங்களூரு, அனந்தபூர் ஆகிய 3 நகரங்களில் சத்ய சாய்பாபா நடத்தி வருகிறார்.
தனது அறக்கட்டளை மூலம் உயர் மருத்துவ சிகிச்சைக்கான 'ஸ்ரீ சத்யசாய்' மருத்துவமனைகளை புட்டபர்த்தியிலும், பெங்களூருவிலும் சத்ய சாய்பாபா நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைகள் மூலம் இது வரை இரண்டரை லட்சம் பேர் இலவச மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மூலம் தெலுங்கு கங்கை திட்டத்தை நிறைவேற்றி சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க பாடுபட்டவர் சத்ய சாய்பாபா.
84 வயதான சத்ய சாய்பாபா உடல்நலக் குறைவு காரணமாக மார்ச் 28, 2011 முதல் புட்டபர்த்தியில் உள்ள அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் ஏப்ரல் 24, 2011 காலை 7.40 மணிக்கு காலமானார்.
பழுத்த மரம், கல்லடி படும் என்பதற்கிணங்க இவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் இல்லாமல் இல்லை. இவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொள்ள சிலர் தயங்கினாலும், தன்னலம் கருதாமல் இவர் ஆற்றி வரும் மக்கள் தொண்டுகளுக்கு யாரும் நன்றி செலுத்தாமல் இருக்க முடியாது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|

