பள்ளியில் படிக்கும்போது ’நான் பிரதமரானால்........’ , ‘நான் முதல்வரானால்.......’ போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுத சொல்வார்கள். உடனே நாமும் நம் மனதில் உள்ள ஆதங்கத்தை (அந்த வயதில் நம் மூளைக்கு எட்டியது) எல்லாம் கொட்டி ’நான் அப்படி செய்வேன்.’, ‘ நான் இப்படி செய்வேன்’ என்றெல்லாம் எழுதி தீர்ப்போம். ஆனால் உள்ளுக்குள்ளே அதுப் போல ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைக்கமாட்டாரா என்ற ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்தை ‘முதல்வன்’ என்ற பெயரில் சினிமாவாக கூட பார்த்து மகிழ்ந்துவிட்டோம். ஆனால் கொடுத்து வைத்த பீகார் மக்களோ அப்படி ஒரு ஆதர்ச முதலமைச்சரை பெற்றுள்ளனர்.
1951மார்ச் 1ம் தேதி கவிராஜ் ராம் லக்கன் சிங்கிற்கும், பரமேஸ்வரி தேவிக்கும் மகனாக பீகார் பக்தியார்பூரில் பிறந்தார். அவரது தந்தை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த நிதிஷ் குமார் ஆர்வம் காட்டியதோ அரசியலில். 1974 - 77ம் ஆண்டுகளில் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் பங்கேற்று அப்பொழுது மிக பிரபலமாக இருந்த சத்யேந்திர நாராயண சின்ஹாவிடம் நெருங்கிப் பழகினார்.
முதன்முறையாக 1985ம் ஆண்டு பீகார் சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் ஜெட் வேகத்தில் ஏறத் தொடங்கியது. 1987ல் லோக்தள கட்சியில் இளைஞரணி தலைவரானார். 1989ல் ஜனதா தளத்தின் பீகார் மாநில பொதுச் செயலாளரானார். இதைத் தொடர்ந்து 1989ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றிப் பெற்றார். அதனால் வி.பி. சிங்கின் தலைமையிலான அரசில் விவசாயத்துறை மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.
1989 முதல் 2004ம் ஆண்டு வரை ரயில்வே, போக்குவரத்து என பல துறைகளுக்கு அமைச்சராக இருந்த நிதிஷ் குமார் 2005 ஆண்டில் பீகார் முதல்வரானார். 1990களில் காங்கிரஸ் ஆட்சியின் மீதிருந்த வெறுப்பின் காரணமாக பீகார் மக்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வாக்களித்து லாலு பிரசாத் யாதவ்வை முதல்வராக்கினர். பீகாரின் மொத்த மக்கள்தொகையில் கிட்டதட்ட 50 சதவீதம் யாதவ இனமக்கள் உள்ளனர். லாலுவும் இதே இனத்தை சேர்ந்தவர் என்பது அவருக்கு கூடுதல் ஆதாயமாக இருந்தது. ஆனால் லாலுவோ நல்லது செய்கிறேன் பேர்வழி என ‘ரன்வீர் சேனா’ என்ற ஒரு அமைப்பை வளர்த்துவிட்டார். இந்த அமைப்பு ஒரு தனியார் ராணுவம் போல் செயல்பட்டது. ஆனால் அவர்கள் செய்த அக்கிரமங்கள் ஏராளம். பீகாரில் தினம் கொலை, கொள்ளை என பல்வேறு குற்றங்கள் அரங்கேற ஆரம்பித்தன. பௌத்த சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த பீகார் மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டிலேயே முடங்கினர். நாளந்த பல்கலைக்கழகம் தோன்றிய பீகார் மண்ணில் மக்களுக்கு கல்வியறிவே இல்லாமல் போனது.
இந்நிலையில் 2005ம் ஆண்டு நிதிஷ்குமார் முதல்வரானார். இவர் எடுத்த எடுப்பிலேயே 45 ஆயிரம் ரவுடிகளை கைது செய்தார். தேவைப்பட்டால் என்கவுண்டர் செய்து போட்டு தள்ளினார். இதனால் அச்சமுற்ற ரவுடிகள் வன்முறையை கைவிட்டனர். இதன் விளைவாக பீகாரில் வன்முறைகள் குறைந்து மக்கள் தைரியமாக வெளியே வரத் தொடங்கினர்.
அடுத்ததாக நிதிஷின் பார்வை கல்வித்துறை பக்கம் திரும்பியது. பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்க வழியில்லாமல் கிடந்தது. உடனடியாக ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். அதற்கு அரசு கஜானா இடம் கொடுக்காவிட்டாலும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து ஆசிரியர்களை நியமிக்கும் பணியை அந்தந்த ஊராட்சிகளின் வசமே ஒப்படைத்தார். அதனால் மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததுடன் படித்து வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கும் 7000 ருபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
மாநிலம் முழுவதும் சாலை வசதி, குடிநீர் வசதி என மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். தொடர்ந்து செயலிழந்து கிடந்த ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் செயல்பட வைத்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்றாலும் மதசார்பற்ற தன்மையை கடைப்பிடித்தார். இதுப் போல பல பணிகளை செய்து வந்த போது ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. அடுத்த தேர்தலும் வந்தது.
இந்த தேர்தலிலும் நிதிஷ் இலவசங்கள் எதுவும் தரவில்லை. ஓட்டுக்கு பணமும் கொடுக்கவில்லை. அவர் கூறிய ஒரே வார்த்தை பீகாருக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னும் ஒருமுறை வாய்ப்பளித்தால் அதையும் செய்வேன் என்றார். ஏற்கெனவே ஐந்தாண்டுகளில் நக்சல் தாக்குதல் இல்லை. அச்சமின்றி வெளியே வரமுடிகிறது, கல்வி வசதி, சாலை, குடிநீர், சுகாதாரம் என அனைத்து வசதிகளையும் ருசி கண்டுள்ள பீகார் மக்கள் 243 இடங்களில் 206 இடங்களில் நிதிஷ் கூட்ட்ணி வெற்றிப் பெற செய்தனர்.
பீகார் மக்களின் கனவு முதல்வராக 32 வது முதல்வராக நிதிஷ் குமார் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


