மிக உயர்ந்த கலாச்சாரங்களைக் கொண்ட நம் இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள், திருவிழாக்கள், விரதங்கள். எதுவும் சும்மா வெறும் கொண்டாட்டங்களுக்காக மட்டும் நடத்தப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் பின்னனி உண்டு. எல்லா பண்டிகைகளுக்கும் கொண்டாடும் முறையும் உண்டு. வருடத்தில் உள்ள 12 மாதங்களில் ஆடி மாதம் முதல் தை மாதம் வரை எக்கச்சக்க பண்டிகைகள்.
நாம் புதிதாக ஒரு மிக விலையுயர்ந்த மொபைல் போன் வாங்குகிறோம். அதில் ஏராளமான வசதிகள் இருக்கிறது. அது ஒவ்வொன்றையும் எப்படி இயக்குவது என முழுமையாக அறிந்து இயக்கப் பழகிக் கொண்டால் அது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா?
அதை என்ன செய்வது என்றே தெரியாமல் எதற்கும் பயன்படாமல் அதை பீரோவினுள் வைத்திருந்தால் எத்தனை வீண்? அந்த விலையுயர்ந்த மொபைல் போன் போல தான் நம் இந்திய கலாச்சாரமும். அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டு கொண்டாடினால் நமக்கு எல்லையற்ற ஆனந்தம்.
பண்டிகைகளின் காலம் ஆரம்பித்தாயிற்று. ஆடி மாதத்தை ஏனோ நல்ல காரியங்கள் செய்ய உகந்ததாகக் கருதுவதில்லை. அடுத்த ஆறு மாதத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசைக்கு பயணிக்கும் காலம் எனவும் அது கடவுளர்க்கு ராத்திரி காலம் எனவும் கருதப்படுகிறது. இதை தக்ஷினாயன புண்ய காலம் என்கின்றனர். இந்த காலத்தின் முதல் மாதம் என்பதால் ஆடி மாதமும் அவர்களால் சற்றுப் புறக்கணிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் திருமணங்கள் நடப்பது இல்லை. வீடு மாற்றுவது, புதுமனையில் குடிப்புகுவது, தொழில் ஆரம்பிப்பது என நல்லக் காரியங்கள் எதுவும் நடத்துவது இல்லை. அதனால் இது வியாபாரிகளுக்கு ‘ஆடி தள்ளுபடி’ என்ற பெயரில் வியாபாரத்தைப் பெருக்க மிக வசதியாக உள்ளது.
ஆனால் பல முக்கியமானப் பண்டிகைகளும் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிப்பதனால் இதை மிக மங்களகரமான மாதமாகவும் இதை ஒரு சாரார் கருதுகின்றனர்.
ஆடி வெள்ளி: அம்மனை வழிப்பட சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாத செவ்வாய் கிழமைகள், வெள்ளிக் கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை: ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ப நாளாக உள்ளது. சில இனத்தினர் இந்த நாளில்தான் சிவனும் பார்வதியும் ஏழைப் பெண்ணின் பூஜையை ஏற்று அவள் எதிரில் தோன்றி அவளது இறந்த கணவனை உயிர்ப்பித்துக் கொடுத்தாக நம்புவதால் இதே ஆடி அமாவாசை நாளில் தங்களது சுமங்கலித் தன்மையைக் காத்துக் கொள்ள சுமங்கலிப் பூஜையும் செய்கின்றனர்.
இது தமிழ் கடவுளான முருகனுக்கும் உகந்த நாளாகவே உள்ளது. ஆடி அமாவாசை அன்று பழனி சண்முகா நதியில் நீராடுவதும் அன்று முருகனுக்கு மொட்டையடித்துக் கொள்வதும் முருக பக்தர்களிடையே மிக பிரசித்தம். ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம், கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் போன்ற விழாக்கள் கூட இதே தினத்தில் கொண்டாடப் படுகிறது.
ஆடிப்பெருக்கு: ஆடி மாதம் 18ம் நாள் வருவது ஆடிப்பெருக்கு. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வதுண்டு, ‘ ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.’ ‘ஆடிப்பட்டம் தேடி விதை..’ என ஆடி மாதத்திற்கு இயற்கைக்கும் உள்ள ஒற்றுமைக்கு நிறைய பழமொழிகள் கூட உண்டு. இப்பருவக்காலத்தில் பெய்யும் பருவமழையால் மனிதன் உயிர் வாழ்வதற்கும்,விவசாயத்திற்கும் அத்தியாவசியமான ஆறு, குளங்கள் கூட நிரம்பி வழியும். (ஒருவேளை தண்ணீர் இல்லாமல் வற்றிக் கிடந்தால் கூட இந்த நாளில் அணையிலிருந்து கொஞ்சமாகத் திறந்து விடுவர்.). இயற்கையின் இந்த கருணைக்கு நன்றி செலுத்தும் நாள்தான் ஆடிப்பெருக்கு.
இந்த தினத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நதிக்கரைக்கு சென்று மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிப்படுவர். மேலும் பெண்கள் மாவிலையில் விளக்கை வைத்து தண்ணீரில் மிதக்க விடுவார்கள். பின்னர் கட்டுச்சோறாக எடுத்துச் சென்றிருக்கும் புளிசாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல் என கலவை சாத வகைகளை ஆற்றங்கரையிலேயே அமர்ந்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வர். குழந்தைகள் காகிதக் கப்பல்களை தண்ணீரில் மிதக்கவிட்டு விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி.
நதிக்கரைக்கு செல்ல முடியாதவர்கள் கூட வீட்டில் கலசம் வைத்துப் பூஜை செய்வர். கலச சொம்பில் ஊற்றப்படும் தண்ணீரில் அனைத்து நதிகளும் சங்கமிப்பதாக நம்பிக்கை.
ஆடிப்பூரம்: ஆடி மாதம் பூர நட்சத்திரம் அன்று ஆடிப்பூரம் என சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. இது சூடிக் கொடுத்த மலர்க்கொடியாள் ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வாருக்கு ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று சாட்சாத் மகாலட்சுமியே துளசி வனத்தில் சிறுக் குழந்தையாகக் கிடைத்தாள்.
ஆடிப்பூரம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் வெள்ளிக் கிழமையன்று வந்தால் விஷ்ணு கோவில்களில் இன்னும் அமர்க்களப்படும்.
ஆடி கார்த்திகை: முருகனின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை (கிருத்திகை). அதிலும் ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. ஏனெனில் தக்சினாயன புண்யக் காலத்தின் முதல் மாதமாகிய ஆடியில் வரும் கிருத்திகை நட்சத்திரமாதலால் இதற்கு இந்த பெருமை. ஆடி கார்த்திகையன்று முருக பக்தர்கள் காவடித் தூக்கி சென்று முருகப்பெருமானை வழிப்படுவது உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பின்பற்றும் வழக்கம்.
இதுப் போன்ற பண்டிகைகள் மட்டுமின்றி மணமானப் பெண்களை ஆடி மாதம் பிறந்த வீட்டிற்கு அழைப்பது வழக்கம். ஆடி மாதம் பெண் கருவுற்றால் சித்திரை வைகாசி என மிக உஷ்ணமான கோடைக் காலத்தில் பிரசவமாகும். அந்த வெயிலின் கொடுமையை நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் சமாளிக்க சிரமப்படுவர் என்பதலேயே ஆடி மாதத்தில் பெண்களை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
அம்மனுக்கு விசேஷமான மாதமானதால் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைப்பெறுவது மட்டுமின்றி பெண்கள் அக்கம்பக்கத்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுத்தால் தங்களது சுமங்கலித் தன்மை நீடிக்கும் எனவும் நம்புகின்றனர். அதனால் பண்டிகைகளும், விசேஷப் பூஜைகளும் நிறைந்த ஆடி மாதம் மிக மங்களகரமான மாதம்.
Want to write for Maniyosai?
Download our android app



