வைகுண்ட ஏகாதசி: கிருஷ்ண பரமாத்மா ‘மாதங்களில் தான் மார்கழியாய் இருப்பேன்’ என்கிறார். அதனால் வைணவத் தலங்களில் மார்கழி மாதத்திற்கு என தனிச்சிறப்பு உண்டு. உலகிற்கெல்லாம் படியளக்கும் பரந்தாமன் வீற்றிருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பது இம்மாதத்தில்தான் என்பதால் மார்கழி மாதம் வைணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களும் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்களும் ஒரு இரவு என்றும் கணக்கிடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதாவது தேவர்களின் இருட்டுப் பொழுதில் உஷக் காலம் எனும் அதிகாலை நேரத்தில் நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள முகூர்த்த வேளையில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அச்சமயத்தில் ஆலயங்களில் திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவையும் படித்து மகாவிஷ்ணுவிற்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம். தேவர்களின் அதிகாலை நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருந்தாலும் அரங்கன் அவ்வழியாக வெளியே வந்து தரிசனம் தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் அதிகாலையில் சொர்க்கவால் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். இந்த வைபவத்தை தாம் நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருப்போர் வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் அனுஷ்டிப்பது மேலானப் பலன்களைத் தரும்.
அதெல்லாம் சரி. ஏகாதசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள்? ஒரு இலையை அசைப்பதற்கு கூட ஆயிரம் அர்த்தங்களை வைத்திருக்கும் அந்த பரம்பொருள் ஏகாதசி விரதத்திற்கு தகுந்த காரண இல்லாமல் வைத்திருப்பாரா? முரன் என்ற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.
அதனால் விஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் ஒரு குகையில் சென்று படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலானார்.அச்சமயம் அவரைக் கண்ட முரன் பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருக்கும் ஆற்றல் சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்று வித்தார். அவள் முரனுடன் போரிட்டு அவனை வென்றாள். முரனை வென்ற பெண்ணுக்கு "ஏகாதசி' என்று அரங்கன் பெயர் சூட்டினார். அவள் அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சக்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்து விழிப்புடன் செயலாற்றி பரந்தாமனில் அருளைப் பெற்றதுப் போல நாமும் ஏகாதசித் திருநாளில் இரவெல்லாம் கண்விழித்து அந்த பரம்பொருளை தியானித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
விரதம் செய்முறை: ஏகாதசிக்கு முதல் நாள் தசமி திதியில் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, இரவில் பால் பழம் மட்டுமே சாப்பிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலை எழுந்து குளித்து, கோவிலுக்கு சென்று சொர்க்கவால் திறந்து மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் எழுந்தருளும் வைபவத்தை தரிசிக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் பால், பழம் மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் கண்விழித்திருந்து இறைவனை தியானித்திருந்து மறுநாள் துவாதசி திதியில் அதிகாலையிலேயே விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
துவாதசியன்று விரதத்தை முடிக்கும் சமயம் உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது இம்மூன்றில் எதுக் கிடைக்கிறதோ அதை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்யயனோற்சவம்: இத்தனை பலன்களைத் தரும் வைகுண்ட ஏகாதசி வைணவத் தலங்களில் வெகு விமரிசையாக 20 நாட்களுக்கு நடைப்பெறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன் பகல்பத்து என பத்து நாட்களும், வைகுண்ட ஏகாதசிக்கு பின் ராப்பத்து என பத்து நாட்களும் வைகுண்ட ஏகாதசி விழாக் கொண்டாடப்படுகிறது.
ஒருமுறை திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த போது ஏழேழுலகமும் ஆளும் ஸ்ரீரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் ஓதினார். அதனால் மிகவும் மனம் குளிர்ந்த அரங்கன் ஆழ்வாரை என்ன வரம் வேண்டுமென கேட்க, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் ஓத அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார். பரந்தாமனும் அதற்கு இசைந்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து விழா எடுத்தார் திருமங்கை ஆழ்வார். அதன் பின்னர் மார்கழி மாதத்தின் வைகுண்ட ஏகாதசியின் போது நாலாயிர திவ்விய பிரபந்தமும் சாற்றுமுறை செய்யப்படலாயிற்று.
இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்கிற முத்தமிழையும் போற்றும் விழாதான் அத்யயனோற்சவம். பகல் பத்து என்று முதல் பத்து நாட்கள் திருமொழியும் வைகுண்ட ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் (இராப்பத்து) நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், நம்மாழ்வார் மோட்சமும் இயற்பா சாற்றுமுறையும் ஓதப்படும் வைபவமே அத்யயனோற்சவம். அவற்றின் அர்த்தங்களை அழகாய் அபிநயம் பிடித்தும் காட்டுவார்கள்.
ஆருத்ரா தரிசனம்: ” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்... “ எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும். திருநாளில்தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கும் என்றுமே திருவிழாதான். இருப்பினும் சிவாலயங்களில் மிகவும் முக்கியமானது ஆருத்ரா தரிசனம். கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.
அந்த காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.
சிவப்பெருமான் தனது ஏழை பக்தர் ஒருவரை சோதிக்க விரும்பி, கிழ வேடம் தரித்து வந்து அந்த பக்தர் அளித்த களியை உண்டு களித்ததால் திருவாதிரைத் திருநாளில் சிவனுக்கு களி செய்து நைவேத்தியம் செய்கின்றனர். ’களி’ என்றால் மகிழ்ச்சி. ஆனந்த தாண்டவமாடும் சிவப்பெருமானுக்கு களியை நைவேத்தியமாக வைத்தல் கூட மிகப் பொருத்தமானதே.
அனுமன் ஜெயந்தி: மகாவிஷ்ணு எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் கூடவே இருப்பவர் வாயுப்புத்திரன் ஆஞ்சநேயர். சர்வ வல்லமை படைத்த வாயு (காற்று) வின் வடிவமாக தோன்றியவர் அனுமன் ஆவார். இவர் மார்கழி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை நாளில் அமாவாசை திதியும் நிறைந்த வேளையில் மூல நட்சத்திரத்தில் வாயு பகவானுக்கும் அஞ்சனை தேவிக்கும் மகனாக அவதரித்த திருநாளே அனுமன் ஜெயந்தி நாளாக போற்றி வழிபட்டு வருகின்றோம்.
Want to write for Maniyosai?
Download our android app




