புரட்டாசி சனிக்கிழமை: புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் வரும் ஆறாம் மாதம். சூரியன் கன்னி ராசியில் நுழைந்து அங்கிருந்து வெளியேறும் வரையிலான நாட்கள் புரட்டாசி மாதமாகும். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.ஏனெனில் இதுவே மகாவிஷ்ணு பூமியில் வெங்கடேசப் பெருமாளாக அவதரித்த மாதமாகும். அதனாலேயே திருப்பதியில் கூட இம்மாதமே பிரம்மோற்சவம் நடைப்பெறுகிறது. எம்பெருமான் வெங்கடேசப் பெருமாள் புரட்டாசி மாதத்தில் தனது பக்தர்கள் தனக்கு மிகவும் நெருங்கி வர விரும்புகிறார். ஆனால் அனைவரும் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு செல்வது என்பது இயலாதக் காரியம் என்பதால் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிப்படுகின்றனர். சிலர் தங்களது வீடுகளில் மாவிளக்கு ஏற்றியும் வழிப்படுகின்றனர்.
இது மட்டுமின்றி புரட்டாசி மாதம் சனி பகவானுக்கும் மிக ஏற்றதாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவான் தனது சக்தியை இழந்து விடுவதாகவும் அதனால் அச்சமயத்தில் அவரை வழிப்படுவது சிறந்த பலனைத் தரும் எனவும் நம்பப்படுகிறது. பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவ உணவைத் தவிர்த்து விரதமிருக்கின்றனர். சிலர் குறைந்தது புரட்டாசி சனிக்கிழமைகளிலாவது சுத்த சைவ உணவை உண்பது, ஒருப்பொழுது மட்டுமே உண்பது என தங்களால் இயன்றவரை விரதமிருக்கின்றனர்.
நவராத்திரி: நவராத்திரி பண்டிகை கிட்டதட்ட இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் நவராத்திரி என்றும் மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தசரா என்றும் வட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் விஜயதசமி எனவும் கொண்டாடப்படுகிறது. எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் கொண்டாடுவது என்னவோ மகாசக்தியான துர்கையைதான்.
மகிஷன் எனும் அசுரன் பிரம்மா,சிவன், விஷ்ணு ஆகியோரிடம் பெற்ற வரம் காரணமாக யாராலும் அழிக்க இயலாத வண்ணம் அராஜகம் செய்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனை அழிப்பதற்காக மும்மூர்த்திகளும் இணைந்து ஒரு ’சக்தி’யை உருவாக்கி அனுப்புகின்றனர். சக்தியான துர்கை 9 நாட்கள் மகிஷனுடன் சண்டையிட்டு 10வது நாளில் அவனை வெல்கிறாள். துர்கை மகிஷனுடன் போரிடும் 9 நாட்கள் நவராத்திரி அல்லது தசராவாகவும் 10 வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இப்பண்டிகை துர்கையை வழிப்படும் பண்டிகை என்றாலும் தமிழ்நாட்டில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என முப்பெரும் தேவியரையும் இத்திருநாளில் வணங்குகிறோம்.
நவராத்திரியில் முதல் 3 நாட்கள் துர்க்கையை போற்றுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் செல்வங்களை அள்ளி வழங்கும் தெய்வமான மகாலட்சுமியை வணங்குகிறோம். கடைசி மூன்று நாட்கள் ஞானத்தை அளிக்கும் சரஸ்வதி தேவியை துதிக்கிறோம். இந்த நவராத்திரி பண்டிகையில் வாழ்வியல் தத்துவங்களும் நிறைந்திருக்கின்றன. ஒருவர் வளமாக வாழ நிறைய செல்வம் வேண்டும். அச்செல்வத்தை ஈட்ட கல்வியறிவு (ஞானம், சாமர்த்தியம்) வேண்டும். இவ்விரண்டும் மட்டும் போதாதே. இவற்றோடு பலமும் (சக்தி) வேண்டுமல்லவா? இம்மூன்றையும் தரும் முப்பெரும் தேவியரை கொண்டாடும் பண்டிகைதான் நவராத்திரி.
கொலு: தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையின் போது கொலு வைப்பது வழக்கம். ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் ஒரு தத்துவம் வைத்திருக்கும் இந்து மதம் நவராத்திரியில் வைக்கும் கொலுவில் ஒரு தத்துவம் வைத்திராதா? மனிதனின் முதல் தேவை உயிர் வாழ்தல். அதற்கு அவனுக்கு உண்ண உணவும், நீரும் தேவை. அடுத்த கட்டத்தில் உடுத்த உடையும், இருக்க வீடும் தேவை. மேலும் ஆடை அணிகலன்கள், வீடு, தோட்டம், சொத்து சேர்த்தல் என அவனது தேவைகள் விரியும். கடைசி கட்டம் உயர்ஞானம். இவற்றை குறிக்க
கொலு வைக்கப்படும் 9 படிகளில் கீழே முதல் மூன்று படிகளில் உயிர் வாழ அடிப்படைத் தேவையான உணவு காய் கனி, வயல் வரப்பு, கறவை மாடுகள், மண் போன்றவையும் அடுத்த மூன்று படிகளில் சாதாரண மனிதர்களைக் குறிக்கும் மனித பொம்மைகள், வீடு வாகனங்கள், ராஜா ராணி பொம்மைகள் போன்றவையும், மேல் மூன்று படிகளில் தெய்வ உருவங்களும் வைக்கப் படுகின்றன.
இந்த 9 நாட்களும் பெண்கள் சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் மற்றும் நைவேத்தியம் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிற்கு வரும் பெண்கள் அம்மன் பாடல்கள் பாடுவார்கள். பாடுவது, பஜனை செய்வது என 9 நாட்களும் தெய்வீக மணம் கமழ்வதோடு உறவினர்கள் நண்பர்களின் வீட்டுக்கு செல்வதால் உறவு பலம் பெறுகிறது. விருந்தோம்பல் வளர்கிறது. ஒற்றுமை தழைத்தோங்குகிறது.
சரஸ்வதி பூஜை: நவராத்திரி 9ம் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அன்று சரஸ்வதி தேவிக்கு அலங்காரம் செய்து படத்தின் முன் புத்தகங்கள், இசைக்கருவிகள் போன்றவை வைத்து வணங்குவர்.
ஆயுத பூஜை: சரஸ்வதி பூஜையன்றே ஆயுத பூஜையும் நடைப்பெறுகிறது. வருடம் முழுவதும் நமக்கு பல விஷயங்களில் உதவும் பலதரப்பட்ட இயந்திரங்களுக்கு அன்று ஒருநாள் ஓய்வுக் கொடுத்து அதை நன்கு சுத்தப்படுத்தி சந்தனம் குங்குமம் பூசி வழிப்படுவது வழக்கம்.
விஜயதசமி: நவராத்திரி 10ம் நாள் துர்கை மகிஷனை வதம் செய்து வெற்றிப் பெற்ற நாள் என்பதால் அன்று தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்று பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைப்பெறுகிறது.
மைசூரில் தசரா: மகிஷன் வாழ்ந்தது இன்றைய மைசூரை சுற்றியுள்ள இடங்களில்தான். சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி விஜயதசமி நாளில் அவனை வதம் செய்தது மைசூரில்தான். அதனால்தான் ’மகிஷாசுர’ எனும் பெயர் நாளடைவில் மருவி மைசூர் என்றழைக்கப்படுகிறது. அதனால் மைசூரில் ’தசரா’ என்ற பெயரில் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். சாமுண்டி மலையிலும் சிறப்பு பூஜைகள் நடைப்பெறும்.
விஜயநகர பேரரசுகள்தான் இப்பண்டிகையை முதன்முதலில் விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கினர். மைசூர் அரண்மனை நவராத்திரியின் 10 நாட்களும் மின் அலங்காரத்தில் மிளிரும். விஜயதசமியன்று அலங்கரிக்கப்பட்ட யானையிம் மேல் தங்க மண்டபம் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி அம்மனை அமர்த்தி திருவீதியுலா செல்வார்கள். அப்பொழுது அதற்கு முன் நடனமாடியும் இசைக் கருவிகள் வாசித்தும் மக்கள் பேரானந்தமாக செல்வர்.
குஜராத்தில் தசரா: குஜராத்தில் நவராத்திரியை ‘அஸ்வினி மாதம்’ என்கின்றனர். அதாவது குஜராத் காலண்டர்படி அஸ்வினி மாதம் என்பது 12வது மற்றும்
கடைசி மாதம். இம்மாதத்தில் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை வருவதால் அவர்களுக்கு இது மிகவும் உன்னதமான மாதம். குஜராத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியில் ’கார்பா’ ‘தாண்டியா ஆகிய நடனங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இவை இரவு முழுவதும் ஆடப்படும். இவ்வகை நடனங்கள் மெதுவாக ஆரம்பித்து போக போக வேகம் அதிகரிக்கும். அம்மன் கோயில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைப்பெறும்.
வடமாநிலங்களில் தசரா: நாம் துர்கை மகிஷனை வதம் செய்ததை நவராத்திரியாக கொண்டாடுகிறோம். வடமாநிலங்களில் ராமர் ராவணனை வதம் செய்து வெற்றியுடன் திரும்பிய நாள்தான் விஜயதசமி என்று கொண்டாடுகின்றனர். நவராத்திரி 9 நாட்களும் ராமாயணக் கதை நாடகமாக நடத்தப்படும். 10ம் நாள் விஜயதசமியன்று (விஜயதசமி நாளைத் தான் ‘தசரா’ என்கின்றனர்) ராவணன் மற்றும் அவனது சகோதரன் கும்பகர்ணனின் மிக பிரமாண்டமான உருவபொம்மைகள் கொளுத்தப்படும்.
எந்த மாநிலத்தில் எந்த காரணத்துக்காக எந்த பெயரிட்டு அழைத்தாலும் நவராத்திரி பண்டிகை என்னவோ 9 நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீயவை அழிந்து நல்லவை ஆரம்பமாகும் காலம்தான் நவராத்திரி.
Want to write for Maniyosai?
Download our android app



