“நா ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சிக்கமாட்டீங்களே?” என்ற பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தாள் வித்யா.
வித்யா பற்றி சொல்வதற்கு ஒன்றும் அதிகமில்லை. இளம்பெண். இப்பொழுதுதான் கல்லூரி படிப்பை முடித்துள்ளாள். இளம்பெண், கல்லூரி, கில்லூரி என்றெல்லாம் சொன்னவுடன் உலக அழகி அவள்தான் என்று கற்பனை செய்ய வேண்டாம். பார்க்க மிக சுமாராகத்தான் இருப்பாள். குடும்ப வறுமைக் காரணமாக இப்பொழுது வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.
“இல்ல சொல்லுங்க.” என்றேன்.
“ மாசக் கடைசி. கையில் சுத்தமா பணமில்ல. இந்நேரம் பார்த்து தம்பிக்கு உடம்பு சரியில்ல. ஒரு இருநூறு ரூவாக் கொடுத்தீங்கன்னா சம்பளம் வாங்கினவுடனே குடுத்துடறேன்.” என கெஞ்சினாள். குரலில் தயக்கமும், இயலாமையும், அப்பட்டமாகத் தெரிந்தது. பின்னர், “ இல்ல, இந்த ஆபிஸ்ல யாரையும் அவ்வளவாத் தெரியாது. நீங்க மட்டும்தான் என்கிட்ட நல்லா பேசறீங்க...” ஒவ்வொரு வார்த்தையிலும் தயக்கம்.
அவள் தயங்கியதும், கடன் கேட்க கூச்சப்பட்டு தலைக்குனிந்து நின்றதும் என்னை கவர்ந்தது. எனக்கு வித்யாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் எனது பக்கத்து சீட். அப்பா ஓய்வுப்பெற்ற தபால்காரர். குடும்பத்தில் மிக வறுமை. இது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் மறுக்க மனம் வராமல் அவள் கேட்ட இருநூறு ரூபாய் கொடுத்தேன்.
“ சம்பளம் வந்தோன குடுத்துடறேன்கா. ஆபிஸ்ல வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என கொசுறாக வேண்டிக்கொண்டாள். மறுநாள் ஆபிஸ் வந்தவுடன் டாக்டரிடம் சென்று வந்த விவரமெல்லாம் கூறினாள். பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் “ரொம்ப தேங்க்ஸ். சம்பளம் வந்தோன உங்க பணத்த திருப்பிக் கொடுத்துடறேன்கா” என்பாள். எனக்கே அவளை பார்க்க சிரிப்பாக வரும்.
சம்பளம் வர இன்னும் இரண்டு நாட்களே இருக்கும்போது ஒருநாள் அவள் வரவில்லை. முதல்நாள் எதுவும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து ஒருவாரமாகியும் வரவில்லை. சம்பளமாவது வந்து வாங்கிச் சென்றாளா இல்லையா எனத்தெரியவில்லை. இருநூறு ரூவாய் பூதாகாரமாய் என் கண்முன் விரிய மெதுவாக ஆபிசில் விசாரித்தேன். ஆளாளுக்கு பல யூகங்களை அடுக்கினார்கள். ‘ உடம்பு சரியில்லாமப் போயிருக்கும். அன்னிக்கே இருமிட்டே இருந்தா...’, ‘அவங்க அப்பா டி.பி பேஷண்டாமே ஏதாவது ஆய்டுச்சோ என்னவோ...’ என்றார்கள்.
மறுநாள் சுமதி வந்து சொன்னாள்.
“அந்த வித்யா வேலைய விட்டு நின்னுட்டாளாம்.” என்ற வார்த்தையை கேட்டதும் என் அதிர்ச்சியை சொல்லவும் வேண்டுமா? இருநூறு ரூபாய் ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற ஆதங்கந்தான்...
“ஆமா....... ஏன் அவளப் பத்தியே கேட்கறீங்க?” என்று கேட்டதுதான் தாமதம் மடையைத் திறந்துவிட்டேன்.
அவள் என்னிடம் பணம் வாங்கி திருப்பி தராத செய்தி ஆபிஸ் முழுவதும் பரவியது. ஆளாளுக்கு என்னைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள். சிலர் கேலி செய்தனர். எனக்கு கோபமாகவும், அவமானமாகவும் இருந்தது.
பத்துப் பேர் அதுவும் பெண்கள் கூடினால் கேட்க வேண்டுமா? வித்யாவை பற்றி பல வதந்திகள் உலா வரத் தொடங்கின. ஓரிரு நாட்களில் நான் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டேன்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தேன். காலிங் பெல் ஒலித்தது. வாசலில் வித்யா நின்றுக்கொண்டிருந்தாள். ஆச்சர்யமாய் வரவேற்றேன்.
“ என்னை மடிப்பாக்கம் பிராஞ்சுக்கு மாத்திட்டாங்கக்கா. என்னால யார்கிட்டயும் சொல்லிக்க கூட நேரம் தரல...” எனக் கூறியவாறே மிக அழகான பர்ஸ் ஒன்றை எடுத்து நீட்டினாள்.
“நீங்க அன்னிக்கி கொடுத்த இருநூறு ரூபா உங்களுக்கு வேணா சாதாரணமாத் தோணலாம். ஆனா எனக்கு அது ரொம்ப பெரிய உதவி. அன்னிக்கி மட்டும் என் தம்பிய டாக்டர்கிட்ட கூப்பிட்டு போகாம விட்ருந்தா அவன் உயிருக்கே ஆபத்தா போயிருக்கும். அவன் இன்னிக்கு உயிரோட இருக்கிறதே நீங்க கொடுத்த இருநூறு ரூபாய்லதான். நா என்னிக்கும் இந்த உதவிய மறக்கமாட்டேன். ஆனா அந்த பணத்த சம்பளம் வந்த் அன்னிக்கே திருப்பிக்கொடுத்திருந்தா என் நன்றிய முழுமையா தெரிவிக்க முடியாதுன்றதுனாலதான் இந்த பர்ஸ் செஞ்சேன். இதுல வேலைப்பாடு ஜாஸ்தி. செய்யறது ரொம்ப கஷ்டம். தொடர்ந்து செஞ்சாலே ஒரு வாரம் ஆகும். இது உங்களுக்காகவே நா செஞ்சிருக்கேன். நீங்க செஞ்ச உதவிய நா மறக்கமாட்டேன், அதே மாதிரி இந்த பர்ஸ பாக்குறப்பல்லாம் என்னை ஞாபகப்படுத்திக்குங்க.” என்றவாறே நீட்டிய பர்ஸினுள் இருநூறு ரூபாய் இருந்தது.
“ அப்புறம், இவ்ளோ லேட்டா குடுத்தாலும், ஆபிஸுக்கே ஒரு வாரமா வராம இருந்தாலும் என்னை தப்பா நெனச்சுக்காம இருக்கீங்களே, நீங்க நிஜமாவே கிரேட்கா.” என்றாள்.
நான் அசடு வழிந்தேன்.
Want to write for Maniyosai?
Download our android app




