பூங்கிளி ஊரே பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அதன் இயற்கை எழில் கொஞ்சும் சாலைகளெங்கும் எரித்து சாம்பலாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள், இன்னும் எரிந்துக் கொண்டிருக்கும் டயர்கள், கடைகளில் சூறையாடப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பொருட்களின் எச்சங்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாக வெட்டுண்ட மனித தலைகள், கை, கால்கள் எல்லாம் இரைந்து கிடந்தன.
பூங்கிளியின் அழகுக்கு, அழகு சேர்க்கும் தேனாறுக்கு போட்டியாக இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பல நாட்களாக புகைந்துக் கொண்டிருந்த ஜாதி கலவரம் இன்று வெடித்துவிட்டது. கட்சித் தலைவர்களே நேரடியாக கலவரத்தில் இறங்கி
விட்டதில் எதிர்கட்சி தலைவரின் கழுத்து வெட்டப்பட்டிருந்தது.
“ நம்மக்கிட்டயே மோதிப் பாக்குறானுக. இந்த ஊர்லயே நம்ம பசங்கதான் அதிகம் தெரியும்ல? தலையிருக்கறப்ப வாலாடலாமா...அதான் ஒட்ட நறுக்கிட்டேன். அந்த க்ரூப் தலைவனோட கழுத்துலயே கத்தியப் போட்டேன். இந்நேரம் செத்துருப்பான். இனிமேஒரு பய வாலாட்டமாட்டான்...” என பெருமிதமாக மீசையை முறுக்கிக் கொண்டவரின் கவனத்தை
“ஏங்க, நம்ம பையன காலைலேருந்து காணோம்க.” என்று கூறிய அவர் மனைவியின் கவலை குரல் திசைத் திருப்பியது.
முதலில், “இங்கதான் எங்கயாவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருப்பான்...” என்று கூறினாலும், நேரமாக ஆக கலக்கமாயிருந்தது.
தன் ஒரே வாரிசு, செல்லப்பிள்ளை, சென்னையில் காலேஜில் படித்துக் கொண்டிருப்பவன், இப்போது லீவில் வந்திருக்கிறான் எனஅனைத்து விஷயங்களும் ஊரில் எல்லாருக்கும் தெரியுமே! ஒருவேளை தன்னை பழிவாங்குவதற்காக எதிர்ஜாதிகாரர்கள் கடத்தியிருப்பார்களோ
என்ற எண்ணம் வலுக்க கண்கள் சிவந்தது.மீண்டும் ஒரு கலவரம் வெடிக்குமோ என அவர் மனைவி அஞ்சிக்கொண்டிருந்தாள்.
மாலை சூரியன் கீழ் வானத்திற்கு முத்தமிட்டதால் ஆகாய மங்கையின் கன்னம் நாணத்தால் சிவந்துவிட்ட வேளையில் வந்து சேர்ந்தான்.
“ எங்கடா போயிருந்த...?”
”ஃப்ரெண்ட் வீட்டுக்கு வர்றப்ப அரசு ஆஸ்பத்திரி எதிர்ல ஒரே கூட்டம். என்னன்னு பாத்தா ஜாதி கலவரத்துல ஒருத்தன் கழுத்துல இன்னொருத்தன் வெட்டிட்டான். பாவம் உயிருக்கு போராடிட்டு இருந்தான். இரத்தம் ஏத்தனும்னாங்க. அதிர்ஷ்டவசமா என் இரத்தம்தான் அவனுக்கும். அதான் ரத்தம் கொடுத்துட்டு வரேன்.நல்ல வேளை பொழச்சிட்டான்....” என்றான் தன் அப்பாதான் அவனது க்ழுத்தை வெட்டிய புண்ணியவான் என அறியாமல்.
Want to write for Maniyosai?
Download our android app





