
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களா!
என்னது, கிரீடம் எதுவும் வேண்டாமா!
எல்லோரும் முடிசூடா மன்னர்களா!
என்னையே கிள்ளிப் பார்க்கிறேன்
எதுவும் விளங்கவில்லையே!
என் நாட்டின் குடிமக்கள் யார்யார்?
என் ராஜ்ஜியத்தின் எல்லைகள் என்னென்ன?
எந்த மன்னன் வரி கட்டுவான்?
எந்த மன்னன் ஏப்பம் விடுவான்!
எதுவும் விளங்கவில்லையே!
ஏதேனும் ஒரு மன்னன் தவறிழைத்தால்
எந்த மன்னன் அதைத் தட்டிக் கேட்பான்?
எல்லோரும் மன்னர்கள் என்றால்
எதற்கிந்த தேர்தல் நாடகங்கள்?
ஒரு மண்ணும் புரியவில்லையே!
எல்லோரும் சமமென்ற பின்னாலும்
ஏனின்னும் வம்சாவளி ஆட்சியாளர்கள்?
என்ன சுகம் இந்த அடிமைத்தனத்தில்?
எச்சிலைத் தின்றுவிட்டு, கிடைத்ததே ஏராளமென்று
எடுபிடியாய் வாழக் கூசவில்லையா?
மன்னர்களாம், மன்னர்கள்
யார் இங்கே மன்னர்கள்?
தேர்தலில் வெற்றி கண்டோரா?
ஏதும் அறியார் போல் கிள்ளி விடுவோரா?
ஏடுகளா? எழுத்து வித்தை கற்றவர்களா?
மன்னர்கள் யார் யார்?
மதவாதிகளா, மந்திரவாதிகளா?
பிராது போட்டு சூதுவாதம் செய்வோரா,
இசகு பிசகாய் தீர்ப்புமழை பொழியும்
நீதியரசர்களா?
நிசமாய் சொல்லுங்கள்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
என்றதற்கு இதுதானா அர்த்தம்!?
- கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


