
உலகின் ஜனத்தொகை எழுநூறு கோடி! - புள்ளி விவரம் கூறுகிறது
உலகில் இதுவரை ஜனனம் எடுத்தோர் எத்தனை கோடி யாரறிவார்!
காடு மேடுகளைத் திருத்தி கழனிகளை உருவாக்கி
காயும் வயிற்றுக்கு உணவிட்டோர் எத்தனை கோடி!
காட்டு மிருகங்களாய் சுற்றித் திரிந்தோரின் அம்மணம் அகற்றி
ஆடை பல தந்தவர் எத்தனை கோடி!
மெய்ஞானத்தோடு, விஞ்ஞானத்தையும் வளர்த்து
மனிதரை மேம்படச் செய்தவர் எத்தனை கோடி!
நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி
நூறாண்டு வாழ்வு தந்த மருத்துவர் எத்தனை கோடி!
வழிநடத்திச் செல்லும் ஆற்றலைத் தந்து அரசியல் கலையை
உருவாக்கித் தந்தவர் எத்தனை கோடி!
கவலைகள் மறக்க, கலைகளை உணர்த்தி
கலைஞர்களை கண்டெடுத்தோர் எத்தனை கோடி!
மாண்டவர் கோடி, வாழ்ந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் உலகில் எத்தனை கோடி!
கோடியோ, லட்சமோ, ஆயிரமோ எத்தனை பேர்களோ
அத்தனை பேருக்கும் கோடானு கோடி வந்தனங்கள்!
மானுடம் தழைக்கவைத்த மாமனிதர் யாவருக்கும்
ஊனுருகி, உயிருருகி, உயர்கோடி வந்தனங்கள்!
-கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


