ஆடம்பர பங்களாக்கள், வங்கி கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம். அதிலும், பாதிக்கு மேல் கணக்கில் வராத கறுப்பு பணம். நகைகள், பண்ணை வீடுகள், ஈசிஆர் ரோடில் ஜாலி கார் ரைட். வாரக் கடைசி டிஸ்கோத்தே, பார்ட்டி, பப்... இவை எல்லாமும் இருக்கும் பரம ஏழைகளுக்கு தமிழக அரசு வீடு கட்டிக் கொள்ள நிலம் தரப் போகிறது.
கஞ்சா அடித்து விட்டு தலையங்கம் எழுதுகிறோமோ என்ற சந்தேகம் வேண்டாம். கோடிகளில் பணம் குவித்து வரும் சினிமா காரர்களுக்கு திமுக அரசு வீடு கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கி விட்டது.
இந்த விவகாரத்தில் எமது சில கேள்விகளை நாங்கள் முன் வைக்கிறோம். முதலில், சினிமா காரர்கள் மீது ஏன் இந்த அளவுக் கடந்த வாஞ்சை முதல்வருக்கு. தானும் சினிமா காரன் என்பதாலா? திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தமிழில் பெயர் வைக்கப் படும் தமிழ் படங்களுக்கு வரி சலுகை என முதலில் அறிவித்தது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது, சினிமா வரி மூலம் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வரி கிடைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பணம் கிராமப் புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்துக் கொடுக்க பயன் பட்டு வந்தது. சினிமா காரர்களுக்கு வழங்கப் பட்டு வரும் இந்த வரி சலுகையால் இன்று கிராமங்கள் நாரிக் கொண்டுள்ளன.
வரி சலுகை அளிக்கும் அளவு தமிழகத்தில் தரமானப் படங்கள் வெளி வந்துக் கொண்டிருக்கின்றனவா? ஒரு ஆண்டில் வெளிவரும் படங்களில், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் வெறும் குப்பையே. அப்படிப் பட்ட படங்களால் இந்த சமுதாயத்திற்கு எந்த வித நன்மையும் இல்லை. அந்தப் படங்களை பார்த்து சமுதாயம் மேலும் சீரழியும் வாய்ப்புகளே அதிகம். சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் மூன்றாம் தர படங்களுக்கு, தமிழில் பெயர் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக வரி சலுகை அளிக்க முடியுமா? யார் பணத்தை, யார், யாருக்கு அளிப்பது?
இந்த வரி சலுகையால், படம் பார்க்கும் கடை கோடி சினிமா ரசிகனுக்கு பலன் இல்லை. இந்த வரி சலுகையால், பணக்கார தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு மட்டுமே லாபம். நம் பணத்தில் அவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள்.
இப்போது, கோடிகளில் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வரும் சினிமா காரர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலம் கொடுக்க தமிழக அரசு முன் வந்துள்ளது.சினிமா காரர்களுக்கு வழங்கப் படுவது போல, ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு, டாக்சி ஓட்டுபவர்களுக்கு, சலூன் கடை நடத்துபவர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் வீடு கட்டிக் கொள்ள அரசு இலவச நிலம் அளிக்குமா? அவ்வாறு அளிக்கும் என சொன்னால், அதற்கு எவ்வளவு நிலம் அரசிடம் உள்ளது? அவ்வாறு அளிக்க இயலாது என சொன்னால், ஏன் இயலாது? அனைத்து தரப்பினருக்கும் வீடு கட்டிக் கொள்ள இலவச நிலம் கொடுக்க இயலாத போது, சினிமா காரர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?
இந்திய அரசியலை பொறுத்த வரை, சினிமாவும், அரசியலும் கூடப் பிறந்த சகோதரர்கள் போல. அரசியலில் பிரவேசிக்க சினிமா காரன் என்ற தகுதி இருந்தால் போதும் என்ற நிலை இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நிலவி வருகிறது. தேர்தல் பிரசாரத்திற்கும் சினிமா காரர்கள் சென்றால், மக்கள் மனம் மகிழ்ந்து வாக்களிக்கும் நிலை உள்ளது. இதற்கு பெரிய நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டியிருக்கும் காமெடி நடிகர்களாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில், கட்சி பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளால் பயன் படுத்தப் பட்டு வருகின்றனர். ஒரு வேலை, அந்த நன்றிக் கடனைத் தீர்க்கவும், வருங்காலத்தில் பிரசாரம் செய்ய அட்வான்சாகவும் இந்த இலவச நிலம் வழங்கப் படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைய பெரிய இடத்து பிள்ளைகள் சினிமா தயாரிப்பு தொழில் ஈடுபட்டு வருகின்றனர். சில அரசியல் முக்கியஸ்தர்கள் சினிமாக்களை நம்பியே டி.வி. சேனல்களை நடத்தி வருகின்றனர். அதனால், சினிமா காரர்களை திருப்தி படுத்தும் நோக்கில், சினிமா துறைய்யினருக்கு பல சலுகைகள் அளிக்கப் பட்டு வருகின்றனவோ என்ற குழப்பம் நிலவுகிறது.
அனைத்து சினிமா காரர்களுக்கும் சலுகை அளிக்காமல், சினிமாவில் இருக்கும் நலிவடைந்த பழம்பெரும் கலைஞர்களுக்கும், ஏழை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப் பட வேண்டும். மனசாட்சி உடைய வசதி படைத்த சினிமா காரர்கள், சுயநல நோக்கோடு அரசு வழங்கும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே நம் ஆசிரியர் குழுவின் ஆசை.
| < Prev | Next > |
|---|











evan appan veetu kasu intha nai eduthu koothadi naingaluku koduka????