பருத்தியைப் பூணுக்குள் பூட்டி வைக்கமுடியாது...’ என்பார்கள். ஏனென்றால் வெடிக்க வேண்டிய விஷயம் ஒருநாள் வெடித்தேத் தீரும். அதுதான் இப்பொழுது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது, தெலுங்கானா உருவத்தில்.
இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து நீறுப் பூத்த நெருப்பாக இருந்த விஷயம் இன்று வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் நிஜாம் ஆட்சியின் கீழ் (princely state) ஆக இருந்த ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. பின்னர் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராப் பிரிக்கப்பட்டப் போது ஹைதராபாத் ஆந்திராவுடன் இணைவதா வேண்டாமா என்ற பல சர்ச்சைகளுக்குப் பின் ஒரு வழியாக ஆந்திராவுடன் இணைந்தது. அன்றிலிருந்து இன்று வரை தனித் தெலுங்கானாப் பிரச்சினை நடந்துக்கொண்டும் இருக்கிறது.
தெலுங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரிப்பது சரியோ, தவறோ. ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக ‘தனித் தெலுங்கானா நிச்சயம்’ என பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலில் வெற்றிப் பெற்று, ஆட்சியமைத்ததும் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டனர். சரி. மத்திய அரசுதான் பிரச்சினையின் வீரியம் தெரியாமல் வாக்களித்தனர் என்றால் மாநிலத்தின் உள்ளேயே ஒற்றுமை இல்லை. 2000லியே பாரதிய ஜனதாக் கட்சி வாக்களித்தப்படி ஜார்கண்ட், சட்டீஸ்கர், மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைப் பிரித்தப்போது அதன் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து கிள்ம்பிய எதிர்ப்பையொட்டி தெலுங்கானா பிரச்சினையைக் கிடப்பில் போட்டது.
ஒரு குடும்பத்தில் ஒரு மகன் சொத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு குரல் கொடுத்ததும் அவனதுப் பங்கை மட்டும் பிரித்தளித்துவிட்டு மற்றவர்கள் ஒற்றுமையாக இருக்க நினைக்காமல் மற்ற மகன்களும் தங்கள் பங்கைப் பெற்றுக் கொண்டுத் தனித்து ஓட நினைப்பதுப் போல இப்பொழுது ஆந்திராவில் தெலுங்கானாவைத் தொடர்ந்து ராயலசீமா மற்றும் கடலோர மாவட்டங்களும் தனி மாநிலக் கோரிக்கையோடு புதிதாகக் களமிறங்கிவிட்டன. இதைப் பார்த்து மற்ற மாநிலங்களும் இதுதான் சமயம் எனத் தங்கள் மாநிலத்தையும் துண்டாட முயற்சிக்கின்றன.
பிரச்சினையை முளையிலேயேக் கிள்ளியெறியாமல் தங்கள் அரசியல் லாபத்துக்காக பொய் வாக்குறுதிகளைத் தந்த மத்திய அரசு இப்பொழுதாவது பொறுப்புடன் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். இப்பொழுதும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து எரிகிற நெருப்பில் நெய் ஊற்றக் கூடாது.
இது உள்நாட்டு விவகாரம் மட்டுமல்ல. காஷ்மீரைக் கேட்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஹைதராபாத்தையும் உரிமைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நம் நாட்டில் நாமே ஒற்றுமையின்றி நாட்டை பலத் துண்டுகளாகப் பிரிப்பது, பின்னர் அண்டை மாநிலங்களுடன் சண்டை வளர்ப்பது என்றிருப்பது இந்தியாவைக் குறி வைத்திருக்கும் எதிரிகளுக்கு மிக வசதியாகப் போய்விடும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டும். இன்னொரு இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற நிலை வந்தால் நமக்காகப் போராட இன்றைய நிலையில் ஒரு காந்தி மகான் கிடைக்கமாட்டார்.
| < Prev |
|---|












Nice article