ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா பேரில் அனுமதியில்லாத தேயிலை தொழிற்சாலை நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இதை விசாரிக்க அவசர அவசரமாக தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையம் தன் விசாரணையை இன்று (ஜூலை 3) தொடங்கியது.
கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை அனுமதியின்றி நடத்தப் பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின.இந்த விவகாரத்தில் அவசரப் பட்டு நடவடிக்கை எடுக்காமல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜூன் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதனை விசாரிக்க, ஜூன் 29ம் தேதியே அவசர அவசரமாக ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை நியமித்தது தமிழக அரசு.
இந்த விசாரணை ஆணையம் இன்று (ஜூலை 3) தன் விசாரணையை தொடங்கியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் உதயசந்திரன் கூறுகையில், “நான் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளேன். ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறேன். விசாரணை நடத்த கொடநாடு எஸ்டேட்டுக்கும், கொடநாடு தேயிலை தொழிற்சாலைக்கும் செல்வேன்.” என்றார்.
கிராமப் புற மேம்பாட்டு துறை, நகர திட்டத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் இருந்து உதயசந்திரன் ஆவணங்களை பெற்றுக் கொண்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Want to write for Maniyosai?


