சென்னை/கொச்சி/கோல்கத்தா/தில்லி: பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் பாரத் பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை அண்மையில் மத்திய அரசு உயர்த்தியது. இதனைக் கண்டித்து தேஜகூ கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். தமிழகத்தில், அதிமுக, மதிமுக, கம்யூ. ஆகிய கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த பந்த்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இன்று (ஜூலை 5) நடைபெறும் பாரத் பந்த்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் ஓடுகின்றன. ரயில் சேவைகளிலும் பாதிப்பு இல்லை. ஆட்டோக்களும் ஓடுகின்றன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. அரசு மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளும் திறக்கப் பட்டுள்ளன. விமான சேவையிலும் எந்த பாதிப்பும் இல்லை. கோல்கத்தா செல்லும் விமானங்கள் மட்டும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
பாரத் பந்த் காரணமாக தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடவில்லை. வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் எல்லை பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுள்ளன.
அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க தமிழகம் முழுவதும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
மே.வங்கம், கேரளா:
இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலங்களில் பாரத் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன. கோல்கத்தாவில் விமான போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஏற்கனவே, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் தவித்து வரும் நிலையில், இந்த பாரத் பந்த் பொது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.
தில்லி:
தலைநகர் தில்லியில் பாஜக தொண்டர்கள் சிலர் பேருந்துகளை செல்ல விடாமல் தடுத்தனர். கரோல் பாக் பகுதியில் பெட்ரோ ரயிலும் பாஜக தொண்டர்களால் தடுத்து நிறுத்தப் பட்டது. இதனால், பாஜக தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் தகராறு ஏற்பட்டது. தில்லி விமான போக்குவரத்து எதுவும் பாதிக்கவில்லை.
Want to write for Maniyosai?


