சென்னை: கோவையில் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது சுகாதாரமான முறையில் தயாரிக்கப் பட்ட தரமான உணவே பொது மக்களுக்கு வழங்கப் பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் தயார் செய்து வழங்குவது குறித்து முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப் பட்ட விருந்தோம்பல் குழு 24.4.2010 அன்று கோவையில் நடந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து, இறுதியாக தலா 250 கிராம் அளவு கொண்ட இரண்டு சாத வகைகள் , 40 கிராம் அளவு கொண்ட இனிப்பு, சிப்ஸ், ஊறுகாய் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது.
மாநாட்டின் முதல் மற்றும் கடைசி நாட்களில் தலா 1.5 லட்சம் பேருக்கும், மற்ற நாட்களில் தலா 50 ஆயிரம் பேருக்கும் உணவு வழங்குவது என தீர்மானிக்கப் பட்டு இதற்கான தகுதியான உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 19.05.2010 அன்று திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளி செய்தித்தாள்களில் விளம்பரப் படுத்தி கோரப்பட்டது.
இதில் குறைந்த விலைப் புள்ளி அளித்த சென்னை வசந்த பவன் மற்றும் அடையாறு ஆனந்த பவன் ஆகிய இரண்டு உணவகங்களுக்கும் உணவு பொட்டலங்களை ரூ.59க்கு வழங்குவதற்கான ஆணை வழங்கிட தீர்மானிக்கப் பட்டது. இந்த உணவு பொட்டலங்களை ரூ.30 மானிய விலையில் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டது.
4,75,000 உணவு பொட்டலங்களை ஐந்து தினங்களுக்கு வழங்க கோரியதில் 4,06,475 உணவு பொட்டலங்கள் மட்டுமே ஒப்பந்ததாரர்களால் வழங்கப் பட்டது. அதில், 3,91,109 உணவு பொட்டலங்கள் மட்டுமே பொது மக்களுக்கு வழங்கப் பட்டன. 15,366 உணவு பொட்டலங்கள் தரம் மற்றும் எடை குறைந்து காணப் பட்டதால் அவை திருப்பி அனுப்பப் பட்டன.
பொதுமக்களுக்கு வழங்கப் பட்ட உணவு பொட்டலங்கள் அவ்வப்போது தரம் மற்றும் எடை சரி பார்க்கப் பட்டது.
ஒப்பந்த புள்ளி விதிகளின் படி தரம் குறைந்த உணவு பொட்டலங்களுக்கு தொகை வழங்க இயலாது. அதே போல உரிய நேரத்தில் வழங்கப் படாத உணவு பொட்டலங்களுக்கும் ஒப்பந்த விதி மீறல் காரணமாக அபராதம் விதிக்கப் படும். எனவே, வழங்கப் படாத உணவு பொட்டலங்களுக்கும், தரம் குறைந்த உணவு பொட்டலங்களுக்கும் பணம் வழங்கப் படுவதாக செய்திகள் வெளியாகியிருப்பது அவதூறான செயலாகும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?


