சென்னை: முதியோருக்கு எதிராக இழைக்கப் படும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு சென்னையில் நடந்து வருகிறது. இரண்டாம் நாள் மாநாட்டை இன்று (ஆக.28) தொடங்கி வைத்த முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் ஓர் அரசின் கடமையாகும் என அய்யன் திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த அறிவுரையின்படி தமிழகத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்திட வேண்டும். பொது மக்களின் அமைதியான வாழ்வுக்குப் பங்கம் விளைத்திடும் எவரையும் சட்டத்தின்முன் நிறுத்தி, அவருக்கு உரிய தண்டனைகளை வழங்குவதன் மூலம் நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டிட முடியும் என்று இந்த அரசு கருதுகிறது; இதனை இதயத்தில் தாங்கிய வண்ணமே காவல் துறை பணிகளை நிறைவேற்றி வருகிறது. இந்த வகையில் அரசுக்குத் துணை புரிந்துவரும் காவல் துறை அதிகாரிகளாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் தொடர்ந்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முனைந்து செயல்பட்டு, குற்றங்கள் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாநிலத்தில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் சாதி, மத பேதங்களைத் தூண்டிவிட்டுப் பூசல்களை ஏற்படுத்துவோர் மீதும், கள்ளச்சாராயம், போதை மருந்து, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமுதாயக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்தல், ஆட்களைக் கடத்தி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் எந்தவிதமான பாரபட்சமுமின்றித் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
காவல் துறையினர், வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்யும் போதும், விசாரணைக்கு உட்படுத்தும் போதும், தனி மனித சுதந்திரமும், மனித உரிமைகளும் பாதிக்கப்படாத வகையில் உச்சநீதிமன்றமும், அரசும் அவ்வப்போது அளித்து வரும் அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடித்து, குறிப்பாகக் காவல் கைதி மரணங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் விழிப்புடன் கடமையாற்றிட வேண்டும். காவல்துறையினர், மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களது அனைத்துக் குறைகளையும் தீர்த்து வைத்து, பொது மக்கள் தங்களை இனிய நண்பர்களாகக் கருதி மதிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும். அப்படிப் பணியாற்றுவதன் மூலம் காவல்துறைப் பணிகளில் தமிழகத்திற்கு இருந்து வரும் புகழையும், பெருமையையும் தொடர்ந்து கட்டிக் காத்திட முடியும் என்று நம்புகிறேன்.
2006ல் இந்த ஆட்சி அமைந்த பிறகு, 15,84,950 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9,01,095 உதவி ஆய்வாளர்களை நியமனம் செய்திட உரிய தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காவல் துறையில் பணிபுரிவோர்க்கு, கடந்த 4 ஆண்டுகளில், 362 கோடி ரூபாய்ச் செலவில் 7,596 காவலர் குடியிருப்புகள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 330 கோடி ரூபாய்ச் செலவில் 5,787 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கணினியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களைத் தடுத்து (Cyber Crime), குற்றம் புரிந்தோர் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.
சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையானநடவடிக்கை எடுப்பதோடு, சாலைக் குறியீடுகள், போதிய விளக்கு வசதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும், பொது மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தீவிர கவனம் செலுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி உரையாற்றினார்.
Want to write for Maniyosai?


