சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விலைவாசி உயர்வினை சமாளிக்க முடியாமல், காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் 2009-ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.8.2010 அன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.
இதனையடுத்து, பெண்கள் உட்பட அனைத்து சத்துணவு ஊழியர்களும் இரவு நேரங்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையும் மீறி, 30-8-2010 அன்று சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை வாழ்த்த சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட பணி நீக்கம் மற்றும் இதர ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?


