சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் முறையாக தமிழில் வாதாடப் பட்டது.
உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த சமயத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர்கள் இதை வலியுறுத்தி முதலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். பல நாடுகளில் இருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கோவை மாநாட்டுக்கு வரும் போது, இது என்னடா புது பிரச்னை என தமிழக அரசும் திகைத்தது.
இதற்கிடையே, நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதில் ஆட்சேபணை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் நேற்று (ஜூன் 21) கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 22) திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வாங்கிய பட்டம் செல்லாது என்ற தமிழக அரசின் உத்தரவு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், தன் வாதங்களை தமிழில் எடுத்து வைத்தார். அவரது வாதங்களை, தலைமை நீதிபதி இக்பாலுக்கு, நீதிபதி முருகேசன் மொழிபெயர்த்தார்.அவசர வழக்காக இதை ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இந்த வாரமே நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழில் வாதாடியது குறித்து வழக்கறிஞர் ரமேஷ் கூறுகையில், “தமிழில் வாதாதிடியதால் என் கட்சிக் காரர்கள் பக்க நியாத்தை எளிதில் எடுத்துரைக்க முடிந்தது. தமிழில் வாதாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.
Want to write for Maniyosai?




