கோவை: உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக தமிழ் மொழி விளங்குவதாக கோவையில் இன்று (ஜூன் 23) தொடங்கிய உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று தொடங்கிய உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி பேசியதாவது:
கோவையில் நடைபெறுகிற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு மடை திறந்த வெள்ளமாக திறரண்டு வந்திருக்கும் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன்பு உலகத் தமிழ் மாநாடு 8 முறை நடந்துள்ளது. முன்னர் நடந்த மாநாடுக்கும், இதற்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை உலகத் தமிழ் மாநாடு, இப்போது நடப்பது செம்மொழி மாநாடு. தமிழ் உலக மொழி மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது.
உலகின் பல மொழிகளில் மூலத் தாயினுடைய சொற்கள் உருத் தெரியாமல் உள்ளன. உதாரணத்திற்கு, அம்மா, அப்பா, என்னும் சொற்கள், நான், நீ, அவன் என்ற பெயர்கள், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள். இவை எல்லாம் தமிழோடு மிகவும் நெருக்கமுள்ளதாக உள்ளன. எனவே தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்னும் பெருமை பெறுகிறது.
அகநானூறு, புற நானூறு கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் விளைவாக 2000 ஆண்டுகால தமிழ் நமக்குக் கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால் 3000 ஆண்டுக்கு முந்தைய தமிழ் கிடைத்தது. சிந்துவெளி நாகரீகம் மூலம் 5000 ஆண்டு முந்தைய தமிழ் கிடைத்துள்ளது. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, தாய்மைத் தன்மை, மொழிக் கோட்பாடு, இலக்கிய வளம், உயர் தனித் தன்மை, பண்பாடு, கலை உள்ளிட்ட 11 தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால் அது செம்மொழியாகும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த 11 தகுதிகள் மட்டுமல்லாமல், இதற்கும் மேலான மேன்மை பெற்றது தமிழ் என்பதை தமிழறிஞர்கள் மட்டுமல்லால், இந்தியாவிலேயே உள்ள தமிழர் மட்டுமல்ல, தமிழை கற்றுத்தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
சூரிய நாராயண சாஸ்திரி எனப்படும் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழி என்று முதலில் குரல் கொடுத்தவர் ஆவார்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஓங்கி ஒலித்து வந்த குரல் காற்றில் மறைந்து, கடலில் கரைந்து காணப்பட்டபோது, சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய முற்போகக் கூட்டணி அரசு அமைந்தது. அதன் பிறகுதான் தமிழை செம்மொழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
Want to write for Maniyosai?




