புதுதில்லி: அக்டோபர் 3 முதல் 14ம் தேதி நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் சிதம்பரம் மேற்பார்வையிட்டார். அப்போது உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தில்லி காவல் ஆணையர் தத்வால் மற்றும் உளவுத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காமன்வெல்த் போட்டிகளின் பாதுகாப்பு பணிகளுக்கு காவல் துறையை எப்படி பயன் படுத்துவது, போக்குவரத்து மாற்றங்களை எப்படி செய்வது, ஆபத்துகள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது போன்றவைகள் பற்றி சிதம்பரத்திடம், தத்வால் விளக்கி கூறினார்.
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் போட்டி நடைபெறும் ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு சிறப்பு பேருந்தில்தான் வர வேண்டும். பிரதமர், ஜனாதிபதி, தில்லி முதல்வர் ஆகியோர் மட்டும் தங்கள் மகிழுந்துகளில் வரலாம். மைதானம் அருகே, 150 பேருந்துகளை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் மைதானங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பயணம் செய்யும் 574 பேருந்துகளும் தினமும் சோதனை செய்யப் படும்.
செப்டம்பர் 7ம் தேதி முதல், போட்டி நடைபெறும் மைதானங்கள், பாதுகாப்பு ஏஜென்சிகளின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.
காமன்வெல்த் போட்டிகளில் 71 நாடுகளை சேர்ந்த 10,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போட்டிகளைக் காண 50,000 ரசிகர்கள் வருவார்கள் என கணிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?




