சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது சென்னை செஷன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த மனுவில், ' டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்ததாகவும், சிறுதாவூர், கொடநாடு பங்களா பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் ஓய்வுக்காக சென்று தங்கி வருகிறார். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 2ம் தேதி வெளியான மாலை நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
சேஷாத்திரிகுமார் என்பவர் ஸ்டாலின் மீது கொடுத்த நில மோசடி புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் புகாருக்கும் முதல்வருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
பொய் தகவல் என தெரிந்திருந்தும் முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே அவதூறு பரப்பும் வகையில் பொய்யான புகார்களை தெரிவித்துள்ளார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவர் அவதூறு பேட்டி கொடுத்துள்ளார். எனவே மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app





