சென்னை: பேருந்து நிலையம் இடம் மாற்றப் பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் நாளை (ஜூலை 3) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 2) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகள் பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பேருந்துகள் எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் கடந்த 17 ஆண்டு காலமாக இயங்கி வந்தன. தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது உறவினர்களுக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம், நட்சத்திர அந்தஸ்து உள்ள உணவகம், வீடுகள், நிலபுலங்கள் இருக்கின்றன.
அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கினால், தன் சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில், பழைய பேருந்து நிலையத்தை மூட நினைத்தவர் திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றமும், தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயங்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 17 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சனையும் இன்றி பேருந்துகள் இயங்கி வந்தன.
இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி, போக்குவரத்துக் குழுவின் முடிவிற்கிணங்க அனைத்துப் பேருந்துகளும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தற்போது கூறியிருக்கிறார்.
தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயக்க வலியுறுத்தி அதிமுக தூத்துக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (ஜூலை 3)தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பள்ளத்தூர் டி.முருகேசன் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் வி.பி.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





