சென்னை: தமிழ் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதற்கு நடிகர் ஜெயராம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் அவரை மன்னித்து விடலாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக் கூறியுள்ளார்.
ஜெயராம் நடித்து வெளியான ‘ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படத்தைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஏசியாநெட் டிவியில் ஜனவரி 25, 26 தேதிகளில் நடந்தது. இதில் மனைவியுடன் பங்கேற்ற ஜெயராமிடம் திரையில் வீட்டு வேலைக்காரியிடம் ‘ஜொள்ளு’ விடுவதுப் போல நிஜத்திலும் செய்வதுண்டா என்று கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘என் வீட்டு வேலைக்காரி கறுத்த தடித்த எருமை மாடுப் போன்ற தமிழச்சி. அவளைப் பார்த்து எப்படி ஜொள்ளு விட முடியும்.’ என்றுக் கூறினார். இதில் தமிழ் பெண்களை இழிவாகப் பேசியதால் மகளிர் அமைப்புகள், இயக்குனர் தங்கர் பச்சன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஜெயராம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஜெயராமின் பேச்சில் வெகுண்டெழுந்த சில மர்ம நபர்கள் அவரது வளசரவாக்கம் வீட்டில் அத்துமீறி நுழைந்துப் பொருட்களுக்கு தீ வைத்து சேதப் படுத்தினர்.
இதுக் குறித்து செய்தியாளர்களிடம் இன்று (06/02/2010) பேசிய கருணாநிதி நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தால் அது கண்டனத்துக்கு உரியதுதான், ஆனால் அவர், அதற்காக பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்ட காரணத்தால் மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையைக் கடைபிடித்து இந்த பிரச்சனையை இத்துடன் விட்டுவிடுவதுதான் நலம் என்று கூறினார். அதேபோல சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவருடைய வீட்டில் புகுந்து பெண்களை பயமுறுத்துவது, வீட்டுக்கு தீயிடுவது போன்ற வன்முறை செயல்களை காவல்துறை வேடிக்கை பார்க்க முடியாது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app




