
எதை பற்றிதான் தலையங்கம் எழுதுவது என இல்லாமல், இதை பற்றியெல்லாம் எழுத வேண்டி உள்ளதே என சங்கோஜமாக இருந்தாலும், இந்த விஷயத்தை பற்றி எழுதிதான் ஆக வேண்டி இருக்கிறது.
யார் இந்த நித்யானந்தன்? இவன் எங்கிருந்து முளைத்தான்? இவனை இந்தளவிற்கு பிரபலப்படுத்தி மக்களிடையே சென்று சேர்த்தது யார்?
நித்யானந்தன் இளம் வயதிலேயே வீட்டை விட்டு ஓடி இந்தியா முழுவதும் சுற்றி பல மகான்களை சந்தித்து அருள் பெற்று அதன் வழி நடந்து மக்களையும் வழிநடத்துபவர் என்கிறார்கள். சரி இருக்கட்டும். திடீரென ஒரு வாலிபன் முளைத்து தான் ஒரு சாமியார். முற்றும் துறந்தவன். இந்த இளம்வயதிலேயே இல்லறத்தைத் துறந்து இச்சைகளை அடக்கி வாழ்கிறேன் என்று கூறினால் அதை ஏன் மக்கள் நம்ப வேண்டும்.
ஒரு தனிப்பட்ட மனிதனின் அந்தரங்க வாழ்வு எப்படியிருக்கிறது என நாம் ஆராய முடியாது. ஆராய்ந்தால் அது அநாகரிகமும் கூட. அப்படியிருக்கும் போது திடீரென முளைத்த ஒரு இளைஞன் தனக்குத் தானே துறவி என்றுக் கூறிக்கொள்வதை எந்த அடிப்படையில் நம்புகிறார்கள் நம் மக்கள். இந்த நித்யானந்தம் ஏதேனும் பராம்பரியமிக்க பிரபல மடத்தின் மடாதிபதி கூட இல்லை. அவனே ஆரம்பித்ததுதான் இந்த தியான பீடமும். இப்படி ஒருவனைப் பற்றி முன்பின் ஆராயாமல் நம்பிவிட்டு பின்னர் அவனைக் குறைக் கூறினால் என்ன லாபம்? தவறு யாருடைது? மக்கள் இப்படி கண்மூடித்தனமாக நடந்துக் கொண்டால் யார்தான் ஏமாற்றமாட்டார்கள்?
இதில் தவறு மக்களுடையது மட்டும் இல்லை. இவனை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஊடகங்களையும்தான் குறைக் கூறவேண்டும். வசீகரமாகப் பேசுகிறானா, தனது சேனலில் தொகுப்பாளர் வேலைத் தரட்டும் அல்லது பட்டிமன்ற நடுவர் ஆக்கட்டும். பத்திரிகைகள் என்றால் அவனை பத்தோடு பதினொன்றாவது எழுத்தாளனாகக் கருதட்டும். இல்லையென்றால் விஐபி எழுத்தாளனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவனை ஏன் ’குரு’ என்ற அந்தஸ்திற்கு உயர்த்த வேண்டும். தேனொழுகப் பேசவோ, எழுதவோத் தெரிந்தவனெல்லாம் மகான் ஆகிவிட முடியாது. ஒருவனின் பின்புலம் என்ன என்பதை சரிவர அறியும் முன்னே அவனை பிரபலப் படுத்தியது யார் தவறு?
மனநிம்மதி வேண்டியே அவனது சொற்பொழிவைக் கேட்பதாகவும், அவன் ஆசிரமத்தில் தங்கியிருந்து தொண்டு செய்வதாகவும் அவன் ‘பக்தர்கள்’ கூறுகிறார்கள். மனநிம்மதி வேண்டுவோர் கடவுள் நம்பிக்கை இருந்தால் கோவிலுக்கு செல்லட்டும். இருந்தாலும், இல்லையென்றாலும் எத்தனையோ அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள் என மக்களின் தொண்டு தேவைப்படும் இடங்கள் இருக்கிறது அங்கு சென்று தாராளமாகத் தொண்டாற்றட்டும். அதையெல்லாம் இந்த மக்கள் பரிசீலிப்பதே இல்லை. ஒருவன் காவியுடை அணிந்து சற்று இனியக் குரலில் தேனொழுகப் பேசிவிட்டால் போதும். வேறெதைப் பற்றியும் கவலை இல்லை. பிரேமானந்தாவிலிருந்து இன்று நித்யானந்தா வரை பல சாமியார்களை கண்ட பின்னரும், ‘அந்த சாமியார்தான் அப்படி, நம்ம சுவாமிஜி ரொம்ப நல்லவர்.’ என மக்கள் கண்மூடித்தனமாக பக்தி செலுத்தினால் ஏன் இன்னும் ஒரு ஆயிரம் ஆனந்தாக்கள் வந்து கடை விரிக்கமாட்டார்கள்?
சரி துறவறம் என்றால் என்ன? நாம் நன்கு அறிந்து, அனுபவித்த விஷயங்களை இனி வேண்டவே வேண்டாம் என உதறித் தள்ளுவதுதான் துறவறம். அப்படியிருக்கும்போது ‘சில’ விஷயங்களை என்னவென்று அறியும் முன்னரே அதை எப்படித் துறக்க முடியும் அல்லது துறந்ததாகக் கருத முடியும்? மனிதனுக்கு பசி, தாகம் போல செக்ஸ் உணர்வுகளும் இயல்பானவை. அதை சாமானியனாலும் சாமியாராலும் தடுக்க முடியாது. அது என்னவென்று தெரிந்து பின் வேண்டாம் என உதறித் தள்ளினாலாவது அர்த்தம் உண்டு. இதுப் போன்ற விஷயங்களில் கேள்வி ஞானம் கூட இல்லாத சிறுவர்கள் துறவறம் பூண்டுவிட்டு பின் தடுமாறுகிறார்கள். இதையெல்லாம் தடுக்க குழந்தைத் திருமணத்திற்கு தடுப்பு சட்டம் கொண்டு வந்ததுப் போல ஒரு குறிப்பிட்ட வயதிற்கு முன்னர் யாரும் சன்யாசி ஆகக் கூடாது, தன்னை சன்யாசி என்று கூறிக் கொள்ளவும் கூடாது என ஒரு சட்டமே இயற்றிவிடலாம் போலிருக்கிறது.
தப்பித் தவறி அப்படி ஒரு சட்டம் வந்தாலும் கூட நாம் பல என்.டி.திவாரிக்களைப் பற்றி அறிந்திருப்பதால் யாராக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்பித் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடாமல் சற்று நம் அறிவுக்கு வேலைக் கொடுத்தாலே இதுப்போன்ற ஏமாற்றங்களைத் தடுக்கலாம்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




:grin :grin :grin :grin
:sigh :sigh :? :? :? :? :cry :cry :cry :cry :cry :cry :cry :cry :cry