2010 நேற்று பிறந்தது போல் உள்ளது. அதற்குள் பல இனிய நினைவுகளையும், சில கசப்பு அனுபவங்களையும் தந்து நிறைவு பெற்று விட்டது.
2010ம் ஆண்டை ஊழல் ஆண்டு என அறிவித்தால் கூட ஆச்சரிய படுவதற்கு இல்லை. அந்தளவு ஏகப்பட்ட ஊழல்களை சந்தித்த ஆண்டு 2010.
முதலில், ஐபிஎல் கொச்சி அணியை தன் அப்போதைய காதலியும், தற்போதைய மனைவியுமான சுனந்தா புஷ்கருக்கு, முறைகேடாக பெற்று தந்ததாக மத்திய அமைச்சராக இருந்த சசி தரூர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நிலைமை மிகவும் முற்றுவதற்குள் அவரே ராஜினாமா செய்து விட்டார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2010ல் கிடைத்த முதல் அடியாக இந்த விவகாரம் அமைந்தது. சசி தரூர் ஊழலுடன் இலவச இணைப்பாக, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் லலித் மோடி செய்த ஊழல்களும் வெளிச்சத்துக்கு வந்தன.
அடுத்து காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் இமாலய ஊழல்கள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தன. காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்த அயல்நாட்டு வீரர்கள் தங்குவதற்கான காமன்வெல்த் கிராமத்தை அமைத்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப் படுகிறது. இன வெறி காரணமாக இந்தியாவை ஏற்கனவே ஏளனமாக பார்த்து வரும் பல நாடுகளுக்கு, இந்தியா கேலிப் பொருளாக ஆனது.
இப்போட்டி நடந்த புதுதில்லி ஜவகர்லால் நேரு மைதானம் எதிரே கட்டப் பட்ட நடைப் பாலம், சீட்டு கட்டு சரிந்து விழுவது போல் விழுந்தது, இந்தியாவை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியது.
காமன்வெல்த் போட்டிகள் முடிந்த கையுடன், காமன்வெல்த் போட்டி அமைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடியின் பதவி பறிக்கப் பட்டது.
ஐபிஎல் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் ஆகியவற்றை மறக்கடிக்கும் அளவு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா செய்யாமல் அடம் பிடித்து வந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா வேறு வழியில்லாமல் அரை மனதுடன் ராஜினாமா செய்தார். அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்ததில் பிரதமர் மன்மோகன் சிங்கை விட அரசியல் தரகர் நீரா ராடியாவின் பங்களிப்பே அதிகம் என்பது சில ஆடியோ டேப்புகள் மூலம் வெட்டவெளிச்சம் ஆனது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மத்திய அரசு கண்டுக் கொள்ளாமல் உள்ளது.
தமிழகத்திலும் நிலைமை சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. பாராட்டு விழாக்களிலும் சினிமா நிகழ்ச்சிகளிலுமே முக்கால் ஆண்டை கழித்து விட்டார் முதல்வர். 2010ல் வெளிவந்த பாதிக்கும் மேற்பட்ட படங்கள் கருணாநிதியின் குடும்பத்தினராலேயே தயாரிக்க அல்லது விநியோகிக்க படப் பட்டுள்ளன. இது போதாது என, கருணாநிதியின் கதை, வசனத்தில் அவ்வப்போது படங்கள் வந்து மக்களை ஆற்றொணா துயரத்தில் ஆழ்த்தி வருகின்றன.
தமிழகத்தில் பல மணி நேர மின்வெட்டும் நிலவி வருகிறது. இதனால், டாஸ்மாக் தவிர மற்ற தொழில்கள் அனைத்தும் நசிந்து ஒழியும் நிலையில் உள்ளன.
விழா நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த கருணாநிதியை ஸ்பெக்ட்ரம் ஆட்டி பார்த்து விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க ஜாதி அரசியல் செய்யும் கருணாநிதியின் முயற்சி பெரிதாக வெற்றி பெறவில்லை.
இப்படி ஆட்சியாளர்களால் மிக அதிகமாக மக்கள் பாதிக்கப் பட்டுள்ள ஆண்டு 2010.
இந்த நிலைமையை மாற்ற கடைசி வாய்ப்பு 2011ல் மக்களுக்கு கிடைத்துள்ளது. அதுதான் வரப்போகும் சட்டமன்ற தேர்தல். ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்காமல், படித்தவர்கள் வாக்களிக்க முன் வர வேண்டும். நாட்டுநடப்பை நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டிய படித்த இளைஞர்கள், தேர்தல் தினத்தில் வீடுகளில் விடுமுறை தினத்தை கொண்டாடி கிடப்பதால்தான், இலவசங்களுக்காக வாக்களிப்பவர்ளே நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மோசமான நிலை உள்ளது.
அரசியல் சாக்கடை என பழைய பல்லவியை பாடுவதை நிறுத்தி விட்டு, படித்தவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முன் வந்தால் நம் நாட்டில் நிலவி வரும் இருள், அகண்டு ஒளி பிறக்கப் போவது திண்ணம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


